உள்ளடக்கத்துக்குச் செல்

எலியாஸ் ஓவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலியாசு ஓவே
பிறப்பு(1819-07-09)சூலை 9, 1819
Spencer, Massachusetts
இறப்புஅக்டோபர் 3, 1867(1867-10-03) (அகவை 48)
Brooklyn, New York
தேசியம்அமெரிக்கர்
கல்விapprenticed as mechanic and machinist
பெற்றோர்Elias Howe and Polly (Bemis) Howe
வாழ்க்கைத்
துணை
Elizabeth Jennings Ames (m. 1841; d. 1850)
Rose Halladay (d. 1890)
பிள்ளைகள்Jane Robinson Howe,
Simon Ames Howe,
Julia Maria Howe
பணி
பொறியியல் துறைMechanical Engineering
குறிப்பிடத்தக்க திட்டங்கள்தையல் எந்திரம்
Significant advancelockstitch loop method
குறிப்பிடத்தக்க விருதுகள்Gold Medal, Paris Exposition of 1867,
Légion d'honneur (France)

எலியாசு ஓவே (Elias Howe, Jr. ஜூலை 9, 1819 – அக்டோபர் 3,1867) ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்; தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததன் மூலம் நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். கைகளால் தைத்துக்கொண்டிருந்த நிலை மாறி எந்திரத்தால் தைக்கலாம் என்ற நிலையைக் கொண்டுவந்தவர் தாமசு செயிண்ட் என்ற அறிஞர் ஆவார். ஆனால் அவர் அதற்குரிய காப்புரிமையைப் பெற்றும் அதன் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து ஈடுபடாமல் இறந்து போனார். 1790 இலிருந்து பல பேர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 பேருக்கு மேல் ஐசாக் சிங்கர் உட்பட இந்த முயற்சிகளில் படிப்படியாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.[1] ஆனால் 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் இதற்கான காப்புரிமையை முதன் முதலாகப் பெற்றவர் எலியாசு ஓவே என்பதால் தையல் எந்திர வரலாற்றில் முதல் கண்டுபிடிப்பாளராக இவருடைய பெயர் பதிவாயிற்று.

இளமை

[தொகு]

எலியாசு ஓவே அமெரிக்காவில் மாசாசூசெட்சு மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் 1819 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் நாள் பிறந்தார் இவருடைய தந்தை பெயரே இவருக்கும் இட்டதால் இவர் எலியாசு ஓவே இளையவர் என அழைக்கப்பட்டார். எலியாசுவின் தந்தை ஓர் உழவர் உள்ளூரில் மருத்துவராகவும் செயல்பட்டு வந்தார். இவருடைய தாயார் போல்லி பீமிசு(Polly Beamis) ஓவே குடும்பத்தின் முன்னோர்கள் வார்விக்சைரிலுள்ள பிரிங்க்லோ விலிருந்து அமெரிக்காவில் 1630 இல் குடியேறினார்கள் இவருடைய குடும்பத்தினர் பலர் கண்டுபிடிப்பாளர்கள் ஓவேயின் முன்னோர்களில் வில்லியம் ஓவே என்பவர் மரத்தாலான தாங்கணைவுப் பாலத்தை (Woodern Truss Bridge) உருவாக்கியவர். இன்றைக்கும் அவருடைய பெயராலேயே இப்பாலம் விளங்குகிறது.டைலர் ஓவே என்பவர் புனைதிறம் வாய்ந்த சுருள்படுக்கையை (Ingeneius Bed Springs) வைக்கோல் படுக்கைக்குப் பதிலாக உருவாக்கியவர். எலியாஸ் ஓவேயின் கண்டுபிடிப்பே உலக வாழ்வமைப்பைச் சற்று மாற்றியதெனலாம்.

இவருடைய தந்தை கடும் உழைப்பாளி அவருடைய எட்டு குழந்தைகளின் உதவியோடு பண்ணையையும் மாவு ஆலையையும் நிவகித்து வந்தார். மாவரைக்கும் எந்திரம் அவருக்கு ஓரளவு வருமானத்தை வழங்கி வந்தது. ஆனால் பண்ணையை நிர்வகிப்பது என்பது பெரும் போராட்டமாக இருந்தது. எனவே எலியாசு ஆறு வயதிலிருந்தே தந்தைக்கு உதவியாகப் பண்ணையில் பணிபுரிந்து வந்தார். பருத்தி ஆலைகளுக்குத் தேவையான துளையிட்ட அட்டைகளைத் தயாரித்து அளிப்பது இவர் மேற்கொண்ட ஒரு பணியாகும். அதே நேரம் அமைதியான குளிர்காலங்களில் பள்ளிக்கும் சென்று கல்வி பயின்று வந்தார்.

11 ஆம் வயதில் இவருடைய ஊருக்கு அருகில் உள்ள வேறொரு பண்ணையில் பணிக்குச் சேர்ந்தார். பதினாறு வயது நிரம்பிய போது உடல் நலம் குன்றியதாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் தன் பண்ணைக்கே திரும்பினார்.

பணிகள்

[தொகு]

1834 இல் லோவெல் என்ற ஊரில் அமைந்திருந்த நெசவாலை ஒன்றில் எலியாசு பணியில் சேர்ந்தார். நெசவுத்தறி நாடா இயங்கும் முறை, நெய்யப்படும் துணி வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை இங்கு சிறந்த முறையில் கற்றுக் கொண்டார். பருத்தி இழையை உருவாக்கும் எந்திரங்களைப் பழுது பார்க்கும் பிரிவில் பணியாற்றியதால் எந்திரங்கள் இயங்கும் முறைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பேற்பட்டது. அப்போது மாநில அளவில் ஏற்பட்ட சில தொய்வுகளின் காரணமாக அந்த ஆலை பாதிக்கப்பட்டது. எனவே இவர் கேம்பிரிட்ஜ் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு கயிறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இவருடைய உறவினர் நாதனியல் பேங்க்சு என்பவருடன் இணைந்து பணிபுரிந்தார். அங்கு எந்திரப் பொறியாளரின் உதவியாளராகப் பணியாற்றினார். நாதனியல் பேங்க்சு போர்ப்படைத் தளபதியாகவும், பின்னர் நாடாளுமன்ற அவைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

1838-இல் போசுடனில் கார்ன்ஹில் எனுமிடத்தில் அரி டேவிசு என்ற தலைமைக் கைவினைஞரின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.[2] துல்லியமான கருவிகள், தைக்கும் கருவிகளைப் பழுது பார்க்கும் பணிகளை இவர் மேற்கொண்டு வந்தார். இவரிடம் வந்த தைக்கும் கருவிகள் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்ததால், அவை உண்மையிலேயே தைக்கும் கருவிகளாக இல்லை என்பதை உணர்ந்தார். நல்ல தைக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அரி சொல்லிக்கொண்டிருந்தாரே தவிர அவர் அதற்கான முயற்சியில் இறங்கவிலை. அவர்களிடம் வருகின்ற தைக்கும் கருவிகளில் உள்ள குறைபாடுகளைப்பற்றி இருவரும் பலவாறாக விவாதங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த எந்திரங்களைப் பழுது பார்த்து அவற்றைப் பற்றிய குறைப்பாடுகளை விளக்கிச் செயற்படுத்தும் முறைகளைச் சொல்வதற்காகவும் பல்வேறு ஊர்களுக்கு எலியாசு சென்று வந்தார்.

திருமணம்

[தொகு]

1941 ஆம் ஆண்டு மார்ச்சு 3 ஆம் நாள் இவருடைய 22 ஆவது வயதில் எலிசபெத் ஏம்சு என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார்.[3] ஒரு வாரத்திற்கு 9 டாலர்கள் என்று வருமானம் ஈட்டி வந்தவர் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்ததும் அதிக வருமானம் கருதி அதிகம் உழைக்க வேண்டியதாயிற்று. உழைத்துக் களைத்து வீடு திரும்பியதும் இவருடைய மனைவி கையால் துணி தைப்பதைப் பார்த்துக் கொண்டேயிருப்பார். அவர் மனதில் பலவித எந்திர அமைப்புகள் துணியைத் தைப்பதற்கேற்ற வகையில் கற்பனையில் உதிக்கும் உடனே எழுந்து அதைப் பற்றிய குறிப்புகளை எழுதிக் கொள்வார். அதற்குத் தேவையான பாகங்களைப் பட்டியலிடுவார். சில சமயங்களில் அவை சரியாக அமையும் ஆனால் பல சமயங்களில் அவை சரியாக அமையாமல் போய்விடும்.[4]

1844 இல் எலியாசின் சித்தப்பா பெரிய பனை இலைகளைச் சிறியதாக்கி தொப்பிகள் முதல் கூடைகள் வரை செய்வதற்குரிய வெட்டு இயந்திரம் ஒன்றைக் கண்டறிந்தார். அதனால் கவரப்பட்ட எலியாசின் தந்தை தன்னுடைய சகோதரர் குடியிருப்புக்குத் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் சென்று கேம்பிரிட்ஜில் தங்கி அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார். அங்கும் சில பாதிப்புகள் ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய குடும்பம் தங்களுடைய பண்ணைக்கே திரும்பியது.

தையல் இயந்திரம்

[தொகு]
Elias Howe Sewing Machine September 10, 1846

1844இல் இவருடைய வசதி மிக்க நண்பர் ஜார்ஜ் பிசர் என்ற வணிகர் எலியாசுக்குத் தேவையான உதவிகளை வழங்கினார். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், துணி தைக்கும் தொழிலில் புதிய எந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து எலியாசு ஈடுபட்டு வந்தார். கைகளால் துணி தைப்பதில் இவருடைய மனைவியை விட விரைந்து செயல்பட்டார். பாசுடன் இரயில்வே துறையில் எந்திர ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார். ஓய்வுக்காலத்தில் துணிதைக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

1844 அக்டோபரில் ஓர் அடிப்படை தையல் எந்திரத்தை உருவாக்கினார். இது மரம் எஃகிரும்பு, கம்பி, அதனுடன் பிணைத்திருக்கும் ஆணிகள் மற்றும் ஊசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி அமைக்கப்பட்ட பூட்டுத் தையல் முறை எந்திரமாக இது செயல்பட்டது. இது உலக எந்திர வரலாற்றில் தையல் முறையில், ஆடை வடிவமைப்பில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதென்றாலும் இதைவிட வலிமையான எந்திரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் எலியாசு தீவிரமாக ஈடுபட்டார். 1845 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடர்ந்து இயங்கும் தையல் எந்திரம் ஒன்றை உருவாக்கினார். 1846இல் இதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது.U.S. Patent 4,750 

காப்புரிமைக்கானப் போராட்டம்

[தொகு]

எலியாசு இரண்டு தையல் எந்திரங்களைத் தயாரித்தார். ஒன்று காப்புரிமை பெற அளிக்கப்பட்டது. மற்றொன்று விற்பனைக்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் இதனைத் தாங்கள்தான் கண்டுபிடித்ததாக 80 பேர்கள் போராடினார்கள். இத்தையல் எந்திரத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் காட்சிக்கு இரயில் வண்டி மூலம் அனுப்பி வைக்க ஜார்ஜ் பிசர் ஏற்பாடு செய்தார். பெண்களை இவ்வியந்திரம் மிகவும் கவர்ந்தது. ஆனால் இதன் அதிக விலை காரணமாக இதனை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனாலும் எலியாசு மனம் தளராமல் ஒருபக்கம் காப்புரிமைக்காகவும் போராடிவந்தார். எந்திரத்தை விளம்பரப் படுத்துவதற்காக ஜார்ஜ் பிசர் செலவு செய்தாலும், ஒரு காலகட்டத்தில் அவருடைய வருமானமும் குறைந்து போனதால் அவரும் ஒதுங்கிக்கொண்டார். மேலும் இவ்வியந்திரத்தை எலியாசைத் தவிர மற்றவர்கள் இயக்கவும் மிகவும் சிரமப்பட்டனர். குவின்சி அரங்கில் இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பொதுமக்களிடையே இயக்கிக் காட்டினார்.6,7 பெண்களைக் கொண்டும் இதை இயக்க வைத்தார். ஆனாலும் இதனை வாங்க யாரும் முன்வரவில்லை.

இவருடைய சகோதரர் அமாசா என்பவர் இங்கிலாந்தில் இவ்வியந்திரத்தை விற்க முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கினார். இங்கிலாந்த்ஹில் வில்லியம் பிரெடரிக் தாமசு என்பவர் இதற்கான பணத்தை முதலீடு செய்ய முன்வந்தார் 250 பவுண்டுகளைக் கொடுத்து அந்த இயந்திரத்தை வாங்கிய அவர் அதைப்போல எந்திரங்களை உருவாக்க்கிப் பெரும்பணம் சம்பாதித்தார். டபிள்யூ தாமஸ் நிறுவனம் என்ற பெயரில் அது விரிவடைந்தது. அவர் பெரும் பணக்காரர் ஆனார் ஆனால் வெறும் 250 பவுண்டுகளே பெற்ற எலியாசும் அவர் சகோதரர் அமாசாவும் அதைச் செலவு செய்து அமெரிக்கா திரும்பினர்.

மிகுந்த மனச் சோர்வுடனும், வறுமையுடனும் வாழ்ந்து வந்த எலியாசு சார்லசு இங்க்லிசு என்ற நண்பரால் மீண்டும் புத்துயிர் பெற்றவரானார். அவருடைய உதவியால் மூன்றாவது எந்திரத்தை உருவாக்கினார். மீண்டும் இங்கிலாந்து சென்றார். அங்கு தன்னிடமிருந்த பணம் முழுவதும் செலவு செய்ததால் தனது எந்திரத்தை 5 பவுண்டுக்கு அடகு வைக வேண்டியதாயிற்று. சார்லஸ் இங்கிலிசின் உதவியுடன் மீண்டும் அமெரிக்கா திரும்பினார். 1849இல் உடல் நலிவுற்ற இவரது மனைவி மறைந்தார்.[5] அவருடைய இறுதிச் சடங்கு செய்யவும் பணமின்றிக் கடன் வாங்கிச் செலவு செய்தார். மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாடிய எலியாசு குழந்தைகளுக்காக மீண்டும் ரோசு அல்லாடே என்பவரை மறுமணம் புரிந்தார்.

காப்புரிமை

[தொகு]
Elias Howe in 1867 engraving for Harpers Weekly.

தந்தையின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்த எலியாசு எந்திரத்தின் காப்புரிமைக்காகப் போராடத் தொடங்கினார். ஐந்து வருடங்கள் மிகக் கடுமையாகப் போராடி தந்தை மற்றும் நண்பர்களின் உதவியுடன் வழக்குகளை வென்று காப்புரிமையைப் பெற்றார். இவ்வழக்கில் எலியாசுடன் மிகக் கடுமையாகப் போராடியவர் ஐசாக் சிங்கர். 1854இல் இவருக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. அதன்பிறகு எலியாஸ் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. இவருடைய கனவு மெய்ப்பட்டது. அமெரிக்காவில் இவருடைய தையல்; எந்திரங்கள் விற்கப்பட்டன. ஒவ்வொரு எந்திரத்திற்கும் 5 டாலர் காப்புரிமைப் பணமாக இவருக்கு வழங்கப்பட்டது. எலியாசின் சகோதரர் அமாசா ஓவே 1854இல் தையல் எந்திரத் தொழிற்சாலையைத் தொடங்கினார். 1854 முதல் 1867 வரை இவருடைய வருமானம் பன்மடங்காகப் பெருகியது. அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியைப் போர்ப்படையினருக்குக் கொடையாக வழங்கினார். மேலும் எலியாசு அப்பிரிவில் இணைந்தும் பணியாற்றினார்.[6][7]

சிறப்புகள்

[தொகு]

1867இல் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியில் இவருடைய தையல் எந்திரம் தங்கப்பதக்கம் வென்றது.[8] இவரைப் போற்றும் வகியில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. பிரான்சு நாடு அங்கு அழைத்து எலியாசைப் பெருமைப் படுத்தியது.

மறைவு

[தொகு]

1867 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் தன்னுடைய 48ஆவது வயதில் இவர் காலமானார். புரூக்ளின். நியூயார்க், கிரீன்வுட் இடுகாட்டில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.[9] 1965 ஆம் ஆண்டு தி பீட்டில்சின் வெளியிட்ட ஹெல்ப் திரைப்படம் எலியாசின் நினைவைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A Brief History of the Sewing Machine". ISMACS International. பார்க்கப்பட்ட நாள் 22 May 2010.
  2. 2.0 2.1 "Elias Howe, National Inventors Hall of Fame". Archived from the original on 2009-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
  3. Edmund Rice (1638) Association, 2009. Descendants of Edmund Rice: The First Nine Generations. (CD-ROM)
  4. Waln-Morgan Draper, Thomas, The Bemis History and Genealogy: Being an Account, in Greater Part, of the Descendants of Joseph Bemis of Watertown, Massachusetts, The Bemis History and Genealogy (Washington [District of Columbia]: Library of Congress, [19--]), pp 159-162, 1357 Joshua Bemis, FHL Microfilm 1011936 Item 2.
  5. "Elias Howe Obituary". New York Times, 5 October 1867. October 5, 1867. http://query.nytimes.com/gst/abstract.html?res=9A0CEFD91731EF34BC4D53DFB667838C679FDE. பார்த்த நாள்: 8 Nov 2009. 
  6. "Muster roll, Company D, 17th Connecticut Volunteer Infantry Regiment". Seventeenth Connecticut Volunteer Infantry homepage. Archived from the original on 20 ஜூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 9 Nov 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Pro Patria: Civil War monument of Connecticut". Archived from the original on 2007-10-16. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
  8. "French Legion of Honor Recipients". NNDB-Biographic Data Base. பார்க்கப்பட்ட நாள் 9 Nov 2009.
  9. "Elias Howe, 19th Century Scientific American Online". Archived from the original on 2007-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியாஸ்_ஓவே&oldid=3574990" இலிருந்து மீள்விக்கப்பட்டது