உள்ளடக்கத்துக்குச் செல்

எர்னஸ்ட் பர்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்னஸ்ட் பர்ச்
Ernest Woodford Birch
சர் எர்னஸ்ட் உட்போர்ட் பர்ச்
பேராக் மாநிலத்தின்
8-ஆவது பிரித்தானிய முதல்வர்
பதவியில்
1904–1910
முன்னையவர்சர் ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர்
பின்னவர்சர் என்றி கான்வே பெல்பீல்ட்
பிரித்தானிய வடக்கு போர்னியோவின்
1-ஆவது பிரித்தானிய ஆளுநர்
பதவியில்
1901–1903
ஆட்சியாளர்ஏழாம் எட்வர்டு
முன்னையவர்இயூ கிளிபர்ட்
பின்னவர்எட்வர்ட் பெரெகரின் குரிட்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஏப்ரல் 1857
திருக்கோணமலை, பிரித்தானிய இலங்கை (இலங்கை)
இறப்பு(1929-12-17)திசம்பர் 17, 1929
சுசெக்சு, இங்கிலாந்து

சர் எர்னஸ்ட் பர்ச் அல்லது எர்னஸ்ட் உட்போர்ட் பர்ச் (ஆங்கிலம்; மலாய்: Ernest Woodford Birch); KCMG (29 ஏப்ரல் 1857 - 17 திசம்பர் 1929) என்பவர் பிரித்தானிய குடியேற்ற நிர்வாகி (Colonial Office); பேராக் மாநிலத்தின் முதலாவது பிரித்தானிய முதல்வர்; மேலும் ஜேம்ஸ் பர்ச் அவர்களின் மகனும் ஆவார். 1875-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி, பேராக், பாசிர் சாலாக் எனும் இடத்தில் மகாராஜா லேலாவின் சீடர்களால் ஜேம்ஸ் பர்ச் கொல்லப்பட்டார்.

எர்னஸ்ட் பர்ச் 1901 முதல் 1903 வரை பிரித்தானிய வடக்கு போர்னியோவின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் (Governor of North Borneo); பேராக் மாநிலத்தின் 8-ஆவது பிரித்தானிய முதல்வர் (British Resident of Perak) ஆகிய பதவிகளை வகித்தார்.[1]

வாழ்க்கை

[தொகு]

இவர் ஜேம்ஸ் பர்ச் (ஜேம்ஸ் வீலர் உட்போர்ட் பர்ச்) (James Wheeler Woodford Birch) என்பவரின் மூத்த மகன் ஆவார். எர்னஸ்ட் பர்ச்; ஏப்ரல் 29, 1857 அன்று பிரித்தானிய இலங்கையின் திருக்கோணமலையில் பிறந்தாலும்,[1] அவருடைய 10-ஆவது வயதில் அவரின் தாத்தா ஜேம்ஸ் உட்போர்ட் பர்ச்சுடன் தங்குவதற்கு இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டார்.[2] ஜேம்ஸ் பர்ச் என்பவர் பேராக் மாநிலத்தின் 1-ஆவது பிரித்தானிய முதல்வர் ஆவார்.

1882-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் அப்போதைய இயக்குநரான லாரன்ஸ் நிவன் (Lawrence Niven) என்பவரின் மூத்த மகள் மார்கரெட்டை மணந்தார். சர் எர்னஸ்ட் மற்றும் மார்கரெட்டு அம்மையாருக்கும்; இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் பிறந்தனர். 1890-ஆம் ஆண்டில், அவர்களின் மூத்த மகன் மலாக்காவின் தஞ்சோங் கிலிங் கடற்கரைப் பகுதியில் மூழ்கி இறந்தார். அப்போது அவருக்கு ஏழு வயது. சர் எர்னஸ்ட் பர்ச்சின் மற்றொரு மகன் பெட்ரிக், தன் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்தியக் குடிமைப் பணிச் சேவையில் பணியாற்றினார்.[1]

சர் எர்னஸ்ட் பர்ச், இந்தியக் குடிமைப் பணியில் பணியாற்றும் போது அவரின் தந்தை ஜேம்ஸ் பர்ச்; பேராக், பாசிர் சாலாக்கில் கொல்லப்பட்டார். அதனால் அவருடைய படிப்பு தடைப்பட்டது. சனவரி 1876-இல், இலண்டன், டவுனிங் தெருவில் உள்ள காலனிய அலுவலகத்தில் (Colonial Office) பணியாற்ற பிரித்தானிய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டார். அவர் இலண்டன் காலனிய அலுவலகத்தில் 1878-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் அவர் நீரிணைக் குடியேற்றங்களின் பொதுச் சேவையில் (Straits Settlements Civil Service) பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பதவிகள்

[தொகு]

மலாக்கா

[தொகு]

சிங்கப்பூருக்கு வந்தவுடன், சர் சிசில் கிளமந்தி இசுமித்தின் (Cecil Clementi Smith) செயலகத்தில் எர்னஸ்ட் பர்ச்சிற்கு ஒரு பதவி வழங்கப்பட்டது. அந்த வகையில், காவல் துறையின் அனைத்து முக்கிய ஆணயங்களின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றினார். 1881-ஆம் ஆண்டில், அவர் மலாக்காவில் உள்ள நில அலுவலகத்தின் பொறுப்பாளராக சில மாதங்கள் பொறுப்பு வகித்தார். சூலை 1881 இல், அவர் சிங்கப்பூரிலும் அதே பதவியை வகித்தார். மே 1882-இல், அவர் இரண்டாம் நிலை துணை காலனிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 1885 ஆம் ஆண்டில், அவர் கொக்கோசு (கீலிங்) தீவுகளுக்கு தன்னுடைய முதல் பணிப் பயணத்தை மேற்கொண்டார்.

சனவரி 1888-இல், சர் எர்னஸ்ட் பர்ச், மலாக்காவில் நீதிபதி பதவி; மற்றும் நில வருவாய் அதிகாரி என்ற இரட்டைப் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டார். பல எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அவர் அலோர் காஜா மற்றும் ஜாசின் ஆகிய இடங்களில் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் 4 ஆண்டுகள் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். அங்கு மக்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகள்க் கண்டறிந்து சிறப்பான முறையில் மாவட்டங்களை வழிநடத்திச் சென்றதாகவும் அறியப்படுகிறார்.

பேராக்

[தொகு]

பேராக் கிரியான் நீர்ப்பாசனத் திட்டம்

[தொகு]

1892-ஆம் ஆண்டு எட்டு மாதங்கள், அவர் சிலாங்கூர் மாநிலத்தின் தற்காலிக பிரித்தானிய முதல்வராகச் செயல்பட்டார். சனவரி 1893-இல், பேராக் அரசாங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பேராக்-இல் ஒரு புதிய நில அளவை முறை அறிமுகம் செய்யப்பட்டதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்; மேலும் கிரியான்[3] நீர்ப்பாசனத் திட்டத்தையும் அவர் முன்வைத்தார்.

ஆகத்து 1895-இல் சர் பிராங்க் சுவெட்டன்காம் விடுப்பில் சென்ற பிறகு, எர்னஸ்ட் பர்ச்; பேராக் மாநிலத்தின் தற்காலிக பிரித்தானிய முதல்வராக நியமிக்கப்பட்டார். 1890-ஆம் ஆண்டில், சிலாங்கூரில் உள்ள நில அமைப்பு முறையைப் பற்றி விசாரணை நடத்த சர் ஜார்ஜ் மெக்சுவெல் (William George Maxwell) எர்னஸ்ட் பர்ச்சைக் கேட்டுக் கொண்டார்; மேலும் எர்னஸ்ட் பர்ச் அது குறித்து இரண்டு அறிக்கைகளையும் தயாரித்து வழங்கினார்.[1] பின்னர் அந்த நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தது.

பேராக் மாநிலத்தின் தற்காலிக பிரித்தானிய முதல்வராக அவர் பணியாற்றியபோது, ​​1895 நவம்பர் 2-ஆம் தேதி பேராக் மாநில மன்றத்தின் முதல் கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டம் அவருடைய தந்தை ஜேம்ஸ் பர்ச் கொலை செய்யப்பட்டதின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிப்பதாகும்.

நெகிரி செம்பிலான்

[தொகு]

நெகிரி செம்பிலான் செரி மெனாந்தி தகராறு

[தொகு]

1896 சூன் மாதம், எர்னஸ்ட் பர்ச், அவரின் பிரித்தானிய மலாயா அரசாங்கச் செயலாளர் (Secretary to the British Malaya Government) நியமனத்தை நிராகரித்தார். பெப்ரவரி 1897-இல், மார்ட்டின் லிஸ்டர் என்பவருக்கு (Martin Lister) பிறகு நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தற்காலிக பிரித்தானிய முதல்வராக நெகிரி செம்பிலானுக்குச் சென்றார்.

மார்ட்டின் லிஸ்டரின் இறப்பிற்குப் பிறகு, மே 1900 வரை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தற்காலிக பிரித்தானிய முதல்வராக அவர் பதவி வகித்தார். அந்தக் கட்டத்தில் அவர் ஓர் உடன்படிக்கைக்கு ஏற்பாடு செய்தார். அதன் மூலம் மற்ற உள்ளூர்த் தலைவர்களிடமிருந்து நீண்ட காலமாகப் பிரிந்திருந்த செரி மெனாந்தியின்[4] யாங் டி-பெர்துவான் (Yang di-Pertuan of Sri Menanti), நெகிரி செம்பிலானின் அரசியலமைப்புத் தலைவராகப் பதவி ஏற்றார்.[5].[1]

அவரின் குறுகிய நிர்வாகக் காலத்தில், நெகிரி செம்பிலானின் வருவாய் மலாயா டாலர் $ 552,000-இல் இருந்து மலாயா டாலர் $ 1,085,000 ஆக உயர்ந்தது. அதே காலக் கட்டத்தில் அவர் நெகிரி செம்பிலானில் ஒரு புதிய நிலம்; மற்றும் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். அவரின் நிர்வாகத்தின் போது பொதுச் சேவை பெரிதும் மேம்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

பிரித்தானிய போர்னியோ

[தொகு]

ஜெசல்டன் நகரம்

[தொகு]

இவரின் சிறப்புமிக்கச் சேவைகளைப் பாராட்டி, 1900-ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணியார், அவருக்கு சர் பட்டம் வழங்கினார். அதன் பின்னர் அவர் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் முதன்மைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அவர் 1901-இல் பிரித்தானிய வடக்கு போர்னியோவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். வடக்கு போர்னியோவில் இரண்டு ஆண்டுகள், எட்டு மாதங்கள் பணியாற்றிய காலத்தில், வடக்கு போர்னியோவின் நலனுக்காக கடுமையாக உழைத்தார் என்றும் அறியப்படுகிறது.

அவர் வடக்கு போர்னியோவில் உள்ள அனைத்துப்ப் பகுதிகளுக்கும் பயணம் செய்து, ஏராளமான குடியேறிகளை இடம்பெறச் செய்தார். அந்தக் காலக் கட்டத்தில் அவர் ஜெசல்டன் நகரில் ஒரு புதிய நகரத்தையும் உருவாக்கினார். அவர் வடக்கு போர்னியோவை அமைதிச் சூழலுக்கு மாற்றினார். திசம்பர் 1904 இல், சர் எர்னஸ்ட் பர்ச் இங்கிலாந்து சென்றார். பெப்ரவரி 1904-இல், அவர் பேராக் மாநிலத்தின் 8-ஆவது பிரித்தானிய முதல்வராக நியமிக்கப்பட்டார். பேராக் நிர்வாகத்தின் போது, ​​அவர் பேராக் மாநில நிர்வாக அமைப்பைச் சிறந்த முறையில் மறுசீரமைப்பு செய்தார். அவர் திசம்பர் 17, 1929 அன்று இங்கிலாந்தில் காலமானார்.[6]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Wright, Arnold, Twentieth Century Impressions of British Malaya: Its history, People, commerce, industries and resources, 1908
  2. Entry in the database of familysearch.org
  3. "Laman Web Pejabat Daerah Dan Tanah Kerian - Location of Kerian District". pdtkerian.perak.gov.my.
  4. "Seri Menanti is the Royal City for Negeri Sembilan. It is located 32.8 km to the east of Seremban, the state capital of Negeri Sembilan, and 15.8 km to the west of Kuala Pilah". heritagemalaysia.my. Retrieved 31 January 2024.
  5. Datuk Dol Said mendakwa kerabat Naning tidak pernah menerima pengiktirafan selepas Inggeris memansuhkan Naning pada 1832.
  6. "Sir Ernest Birch".

கூடுதல் சான்றுகள்

[தொகு]
  • Wright, Arnold, Twentieth Century Impressions of British Malaya: Its history, people, commerce, industries and resources, 1908
அரசு பதவிகள்
முன்னர் பிரித்தானிய வடக்கு போர்னியோ ஆளுநர்
1901–1903
பின்னர்
எட்வர்ட் பி. குரிட்சு

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்னஸ்ட்_பர்ச்&oldid=4426601" இலிருந்து மீள்விக்கப்பட்டது