எர்தினெட் சுரங்க நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்தினெட் சுரங்க நிறுவனம்
Erdenet Mining Corporation
அமைவிடம்
அமைவிடம்எர்தினெட்
மாகாணம்ஓர்க்கோன்
நாடு மங்கோலியா
வரலாறு
திறக்கப்பட்டது1974
உரிமையாளர்
வலைத்தளம்http://erdenetmc.mn/

எர்தினெட் சுரங்க நிறுவனம் (ஆங்கிலம்: Erdenet Mining Corporation, மங்கோலியன்: Эрдэнэт үйлдвэр) என்பது மங்கோலியாவின் எர்தினெட் நகரில் அமைந்துள்ள ஒரு சுரங்கத் தொழில் நிறுவனமாகும்.

உலகத்தில் நான்காவது மிகப்பெரியதும், ஆசியாவின் மிகப்பெரியதுமான தாமிரத்தாது சுரங்கத்தில் இருந்து தாமிரத்தை எடுப்பதற்காக 1974 ஆம் ஆண்டு எர்தினெட் நகரம் உருவாக்கப்பட்டது. மங்கோலியா, உருசியா ஆகிய இரண்டு நாடுகளின் கூட்டுமுயற்சியில் உருவானதே எர்தினெட் சுரங்க நிறுவனமாகும். இந்நிறுவனந்தான் மங்கோலியா நாட்டிற்கான வருவாயின் பெரும்பகுதியை ஈட்டித்தருகிறது. ஆண்டிற்கு 22.23 மில்லியன் டன் தாமிரத் தாது எர்தினெட் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இத்தாதுவிலிருந்து 1,26,700 டன் தாமிரமும், 1954 டன் மாலிப்டினமும்[1] உற்பத்தி செய்யப்படுகிறது. மங்கோலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5 சதவீதத்தை இச்சுரங்கம் அளிக்கிறது. மேலும் 8000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் [2] ஏழு சதவீத[3] வரி வருவாயையும் எர்தினெட் சுரங்கம் அளிக்கிறது.

வரலாறு[தொகு]

எர்தினெட் நகரமும் உற்பத்தி ஆலையும் சோவியத் நிபுணர்கள் உதவியுடன் சோவியத் நாட்டின் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டன. எர்தினெட்டின் தாமிரத்தாது குவியல் கண்டுபிடிப்புடன் தொடர்புள்ள ஒரு தனி வரலாறு இருக்கிறது. முற்காலத்தில் சீன சுரங்க நிபுணர்கள் இவ்விடத்தில் தாமிரத்தைத் தனித்துப் பிரித்தார்களாம். ஆனால் அங்கு உருவான ஒரு புயலின் போது அவர்கள் மின்னலால் தாக்கப்பட்டனராம். அப்போதிலிருந்து இன்றுவரை, அம்மலை அதாவது எர்தினெட் குவியல் ஒரு புனித மலையாகக் கருதப்படுகிறது. பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் உருவாக்கப்பட்டன. பெண்கள் இம்மலையில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் பின்னைய ஐம்பதுகளில் எர்தினெட் குவியல் தொடர்பான புவியியல் நில ஆய்வுகள் தொடங்கப்பட்டன. 1958, 1959 ஆம் ஆண்டுகளில் புவியியல் வல்லுனர்களின் வழிகாட்டுதலுடன் முதன்முதலாக எர்தினெட் குவியல் தளம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இக்குவியலின் உபயோகம் தெரியாமல் நடைமுறை மதிப்பு ஏதுமில்லாத ஒரு குவியல் என்று அத்தளம் மதிப்பிடப்பட்டது.

1960 களின் ஆரம்பத்தில் மங்கோலிய தேசிய புவியியல் அமைப்பு செக்கோசிலோவாக்கியா உள்ளிட்ட ஐரோப்பிய சோசலிச நாடுகளின் புவியியல் நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமான ஆய்வுகளில் ஒத்துழைக்கத் தொடங்கியது. செக்-மங்கோலிய கூட்டு முயற்சியில் முதலாவது புவியியல் சுற்றாய்வுப் பயணக்குழு மங்கோலியாவில் 1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்கன் மாகாணம், குப்சுகுல் ஏரி முதலிய இடங்களில் எர்தினெட் குவியல் தளம் தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியது[4].

அந்த நேரத்தில் இப்பயணக்குழுவில் பிராகா மாநில பல்கலைக்கழகப் பேராசியர், செக்-மங்கோலிய கூட்டுப் பயணக்குழுவின் தலைவர் மற்றும் புவியமைப்புக் குழுவின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தளத்தில் நிலவியல் ஆய்வுகளை மேற்கொளவதற்கான ஒப்புதலை 1964 ஆம் ஆண்டில் இவர்கள் அளித்தனர்.

முன்னதாக 1963 ஆம் ஆண்டில், சோவியத் புவியியலாளர்கள் அகமோலியானா மற்றும் உசாகோ தலைமையிலான புவியியல் ஆய்வுக் குழு ஒரு மாதத்திற்குள் பணியைத் தொடங்கியிருந்தது. இதற்குப் பின் அவர்கள் தளத்தின் காட்சிப் புவியியல் வரைபடத்தை 1:25000 விகித அளவில் உருவாக்கினர். குழிகள் மற்றும் அகழிகள் தோண்டும் இடங்களையும் குறித்திருந்தனர். இப்பணிகளின் விளைவாக எர்தினெட் சுரங்கத் தளத்தில் 150 மில்லியன் டன் தாமிரத்தாது இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

இதே ஆண்டில் மங்கோலிய நிலவியல் வல்லுநர்களும் பழைய தயாரிப்பளர்கள் கொடுத்த தாமிரத்தின் இருப்பு தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் புவியமைப்பு சுற்றாய்வுப் பயணத்தை தொடங்கியிருந்தனர். 1964-68 ஆம் ஆண்டுகளில் மங்கோலிய செக்கோசிலோவேகிய புவியமைப்புக் கூட்டுக்குழுவில் எர்தினெட் குவியலில் இருந்து தாதுவை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. புவியமைப்பு , புவிவேதியல் அளவை, சுரங்கம் தோண்டுதல் உள்ளிட்டவை தொடர்பான நடுத்தர மற்றும் பெரிய அளவு நடவடிக்கைத் திட்டங்களும் ஆராயப்பட்டன. இத்தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக தளத்தில் 612 மில்லியன் டன் தாமிரம் மற்றும் மாலிப்டினம் தாதுக்கள் இருப்பில் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது.

மங்கோலிய செக்கோசிலோவேகிய கூட்டு புவியமைப்புக் குழு இத்தளத்தில் தன்னுடைய பயணத்தை நிறைவு செயத பிறகு, குழுவின் முதன்மைப் பொறியாளர் துமென்பயாரா, புவியியலர் சாந்துய்சாவா ஆகியோரின் வழிகாட்டுதலில் மங்கோலியப் சுற்றாய்வுப்பயண வேலை தொடர்ந்தது.

இந்தக்குழு முதலில் தளத்தில் பூர்வாங்க ஆய்வுகளை நடத்தியது. சுரங்கம் வெட்டுதல் மற்றும் தோண்டுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தியது. தாமிர மாலிப்டினம் தாதுக்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, 670 மில்லியன் டன் அளவு செம்பு தாதுக்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. சோவியத் புவியியலர்களான இ.ஐ.மார்டோசுவிட்கிம், வி.எசு.கலினினைம் மற்றும் மங்கோலிய புவியியலர் துமென்பேயரோம் ஆகியோரின் தலைமையில் அமைந்த பல்கான் மாகாண புவியமைப்பு வெள்ளோட்ட ஆய்வுக்க்குழு அடுத்த இருபது மாதங்களுக்குள் அவசியமான நுண் ஆய்வுகளை மேற்கொண்டது. நீள அகலங்கள் 500-1500 , ஆழம் 400 மீட்டர் கொண்டதாக எர்தினெட்டின் குவியல் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது[5]

புகைப்படங்கள்[தொகு]

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Montsame News Agency. Mongolia. 2006, Foreign Service Office of Montsame News Agency, ISBN 99929-0-627-8, p. 80
  2. Michael Kohn: Mongolia, p. 143, London 2008
  3. Montsame News Agency. Mongolia. 2006, Foreign Service Office of Montsame News Agency, ISBN 99929-0-627-8, p. 83
  4. Erdenetiyn-ovoo
  5. Erdenet Mining Corporation