உள்ளடக்கத்துக்குச் செல்

எரியூட்டி (சுடுகலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுடுகலன் எறியியலில், எரியூட்டி (ஆங்கிலம்: primer, ப்ரைமர்) என்பது, கைத்துப்பாக்கி, புரிதுமுக்கி, மற்றும் சிதறுதுமுக்கி வெடிபொதியின் ஓர் கூறு / பாகம் ஆகும். ஆயுதத்தை சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வெடிமருந்து தான், முற்கால எரியூட்டிகளாக விளங்கின; ஆனால் அது ஒரு கிண்ணியில் அல்லது துளையில் இடப்பட்டு, எரியும்-திரி அல்லது தீப்பொறி போன்றவையால் பற்றவைக்கப்படும். இந்த வெளிப்புற (வெடி)மருந்து, ஓர் குழாயின் வழியாக, துமுக்கிக் குழலிலுள்ள முதன்மை வெடிபொருளுடன் இணைக்கப் பட்டிருக்கும். ஈரமானால் இந்த மருந்து எரியாது என்பதால், மழையில் ஆயுதங்கள் சுடுவதற்கு திராணியற்றதாக இருந்தது.  

அதிர்வுணர் வேதிப்பொருட்களே, நவீன எரியூட்டிகள் ஆகும். சிறிய ஆயுதங்களில், வழக்கமாக இவை வெடிபொதியின் பின்பகுதியோடு இணைக்கப்படும். பீரங்கியைப் போல பெரிய ஆயுதங்களில், எரியூட்டி என்பது, முதன்மை வெடிபொருளுக்கு பின்னால் குழலுள் இடப்படும், ஒரு தனிக்கூறு / தனி-பாகம் ஆகும். வெடியூசி அடிப்பதால், அல்லது (பெரிய ஆயுதங்களில் உள்ளதுபோன்ற) மின்-எரியூட்டல் மூலமாக போதுமான விசை உருவாகும் பட்சத்தில், இந்த எரியூட்டிகள் வேதிவினை புரிந்து, வெப்பத்தை உண்டாக்கி, அதன்மூலம் முதன்மை வெடிபொருளை தீமூட்டி, எறியத்தை (எ.கா. தோட்டா, குண்டு முதலியன) சுடுகிறது.  

எரியூட்டல் முறைகள் 

[தொகு]

உந்துபொருளை தீமூட்டுதல் தான், எந்த ஒரு சுடுகலனை சுடுவதற்கும் முதற்படி ஆகும். எளிய மூடிய குழாய்களான, பீரங்கிகள் தான் முற்கால சுடுகலன்கள். குழாயின் மூடிய முனையில் குடையப்பட்டு இருக்கும் "தொடுதுளை" எனப்படும் சிறு-துளை ஆனது, முதன்மை வெடிபொருளுக்கு இட்டுச்செல்லும். நன்கு நுணுக்கப்பட்ட (வெடி)மருந்தைக் கொண்டு இத்துளை நிரப்பப்பட்ட பின், பந்தம் அல்லது சூடான கங்கு மூலமாக தீமூட்டப்படும். கையடக்க சுடுகலன்களின் வருகைக்கு பின்பு, துப்பாக்கியைச் சுடுவதற்கு இம்முறை விரும்பப் படவில்லை.  எரிந்து கொண்டிருக்கும் குச்சியை கையில் ஏந்தியவாறு, வெடிமருந்தை கவனமாக குழலின் அடிப்பகுதி வரை இட முயற்சிப்பது, ஆபத்தானது ஆகும். மேலும், துப்பாக்கியை ஒற்றைக் கையால் பிடித்துக்கொண்டு இருக்கும் அதே வேளையில், இலக்கை நோக்கி குறிவைத்துக் கொண்டு, மறுகையில் தீப்பந்தத்தை ஏந்தி தொடுதுளையை தேடுவது, துல்லியமாக சுடுவதை மிகக்கடினம் ஆக்கியது.

புற எரியூட்டல்

[தொகு]

திரி இயக்கம் 

[தொகு]

சிறிய சுடுகலனை சுடும் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான முதல் முயற்சி தான் "திரி இயக்கம்". இந்த இயங்குமுறை ஒரு எளிய சுழல்மையம் கொண்ட நெம்புகோல் இழுக்கப்படுகையில், எரியும் திரி தாழ்ந்து தொடுதுளையில் இடப்படும். நைட்ரேட்டு, கரி, மற்றும் கந்தக கரைசலில் ஊறவைத்து, உலர்த்தப்பட்ட தாவர நார்களால் ஆனது, இந்த திரி; இதனால் மெதுவாக எரியும் பண்பைக் கொண்டது. இந்த "மந்தகதி திரி" துப்பாக்கியின் தேவைக்கு, முன்கூட்டியே தீமூட்டப்படும், இது மெதுவாக எரிகையில், சூடான கங்கு அதன் எரியும் முனையில் இருக்கும். துப்பாக்கியில் குண்டேற்றப்பட்டு, தொடுதுளை துகள்களால் நிரப்பப்பட்ட பின்பு, திரியின் எரியும் நுனியை தொடுதுளையை தொடும் வகையில், இயங்குமுறை இருக்கும். துப்பாக்கியை சுடுவதற்கு, அதில் குறிவைத்து, விசை இழுக்கப்படும். இது திரியை தொடுதுளையில் இட்டு, (வெடி)பொடியை தீமூட்டும். மிகக் கவனமாக மெதுவாக எரியும் திரியை நீண்ட நேரத்திற்கு எரியும்படி செய்வர். இந்த இயங்குமுறையால் ஓரளவுக்கு துல்லியத்துடன் சுட முடிந்தது. 

சக்கர இயக்கம் 

[தொகு]

தீமூட்டும் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி தான் "சக்கர இயக்கம்". நவீன வெண்சுருட்டு எரியூட்டியை போலவே, இது சுருள்வில்-பூட்டிய, இரம்பம் போன்ற பற்களுடைய, எஃகு சக்கரத்தை இரும்புப் பைரைட்டு (FeS2) துண்டுடன் உரசப்பட்டு பயன்படுத்தப்பட்டது. சக்கரத்தை ஒரு சாவியால் திருகி, சுருள்வில் இழுபட்ட நிலையில் வைக்கப்படும். இழுபட்ட பின், விசையால் சக்கரத்தை விடுவிக்க முடியும். விசை இழுக்கப்படுகையில், எஃகின் இரம்ப விளிம்புகள் பைரைட்டுடன் உரசப்படும், இது தீப்பொறிகளை உண்டாக்கும். தொடுதுளைக்கு இட்டுச்செல்லும் "எரியூட்டிக் கிண்ணி" எனப்படும் ஒரு சிறு-கிண்ணத்தில் நிரப்பட்டுள்ள வெடிமருந்தில், இந்த தீப்பொறிகள் இடப்படும். வழக்கமாக, ஒரு சுருள்வில்-பூட்டிய மூடியால் எரியூட்டிக்கிண்ணி மூடப்பட்டிருக்கும்; விசை இழுக்கபடுகையில் இம்மூடி தானாக திறந்து, எரியூட்டித் துகள்களை (வெடிமருந்தை) தீப்பொறிக்கு வெளிக்காட்டும். சக்கர இயக்கம் ஒரு மாபெரும் புத்தாக்கம் ஆகும் — எரிந்துக் கொண்டிருக்கும் பொருளை வெப்பத்தின் ஒரு மூலமாகக் கொள்ளாது இருப்பதால், இதை நீட்டிக்கப்பட்ட நேரத்திற்கு ஆயத்தமாக வைக்க முடிந்தது. மூடப்பட்ட எரியூட்டிக்கிண்ணி ஈரமான வானிலையை கொஞ்சம் தாக்குப்பிடித்தது. 

தீக்கல் இயக்கம் 

[தொகு]

சக்கர இயக்கம் ஒரு குறுகிய கால பிரபலம்தான், பின்னர் இதைவிட எளிமையான, மற்றும் வலுவான வடிவம் வந்தது. "தீக்கல் இயக்கம்", சக்கர இயக்கத்தை போன்றே எரியூட்டிக் கிண்ணியையும், அதிலுள்ள மருந்தை பற்றவைக்க, தீப்பொறியையும் தான் பயன்படுத்தியது. இதன் பெயரிலேயே உள்ளபடி, இரும்புப் பைரைட்டிற்கு பதில் தீக்கல்லை பிரயோகித்தது, தீக்கல் இயக்கம். "சுத்தியல்" எனப்படும், ஒரு சுருள்வில்-பூட்டிய கரத்தில் தீக்கல் இருக்கும். சுமார் 90 பாகை வில் அளவிற்கு சுத்தியல் சுற்றப்பட்டு, விசையால் "இழுபட்ட" நிலையில் வைக்கப்படும். வழக்கமாக, தீக்கல்லியக்கிகளில் சுத்தியலை இரு நிலைகளில் வைக்க முடியும். "அரை-சுத்தி" நிலை என்பது சுத்தியல் பாதியளவுக்கு இழுபட்ட நிலை, இந்நிலையில் ஓர் ஆழ்ந்த காடியில் சுத்தியலை பிடித்து வைத்திருப்பதால், விசை இழுக்கப்பட்டாலும் கூட சுத்தியல் விடுபடாது. குண்டேற்றுகையில், அல்லது குண்டேற்றப்பட்ட தீக்கலியக்கியை ஏந்திச் செல்கையில், இந்நிலையில் தான் சுத்தியல் வைக்கப்படும். "முழு-சுத்தி" நிலை என்பது சுத்தியல் முழுவதுமாக இழுபட்ட நிலை ஆகும், இந்நிலையில் சுத்தியல் இருந்தால் தான் துப்பாக்கி சுடும். L-வடிவ "தகட்டுமூடி" தீக்கல் இயக்கத்தின் மற்றொரு பாதி ஆகும். இது தீக்கலுக்குக்கான (எஃகால் ஆன) அடிக்கும்-பரப்பாகவும், கிண்ணி-மூடியாகவும் விளங்கியது. தகட்டுமூடியை திறந்த அல்லது மூடிய நிலையில் வைத்திருப்பதற்கு, அதில் சுருள்வில் பூட்டப்பட்டு, கீல் இடப்பட்டிருக்கும். மூடிய நிலையில், தீக்கல் சரியான கோணத்தில் அடித்து தீப்பொறியை உண்டாக்கும் வகையில், இதன் அடிக்கும்-பரப்பு வைக்கப்பட்டிருக்கும். அடிக்கும் தீக்கல்லானது தகட்டுமூடியை திறக்கவும் செய்யும், இதனால் தீப்பொறிக்கும் கிண்ணி வெளிக்காட்டப்படும். சக்கர இயக்கத்தைவிட, தீக்கல் இயக்கம் எளிமையுடனும், வலிமையுடனும் திகழ்ந்தது, மேலும் தீக்கலும், எஃகும் சேர்ந்து நம்பகமான பற்றவைப்பை அளித்தன. தீக்கல்லியக்கிகள் 200-க்கும் மேலான ஆண்டுகளாக பல இராணுவங்களால் பிரயோகிக்கப்பட்டது.

மூடியடி இயக்கம் 

[தொகு]
தட்டும் மூடிகள் 

"மூடி", அல்லது வேதியியற் எரியூட்டியின் கண்டுபிடிப்பு தான், பற்றவைக்கும் தொழில்நுட்பத்தின் அடுத்த பெரும் முன்னேற்றம் ஆகும். இந்த மூடியடி இயங்குமுறையை பிரயோகித்த துப்பாக்கிகள் அனைத்தையும் "மூடியியக்கி" என்றனர். 'அடித்து பற்றவைத்தல்' என்பதை 1807-ல் ஸ்காட்டிய சமயகுரு அருள்திரு. அலெக்சாந்தர் ஜான் ஃபோர்சைத் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது, இருப்பினும் 1820-களுக்கும் 1830-களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தான், (பல மெருகேற்றல்களுக்கு பின்) இது படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மூடியடி இயக்கம் நன்றாக வேரூன்றியது. அமெரிக்க உள்நாட்டுப் போரில், இரு பிரிவினரும் இவ்வகை ஆயுதங்களை பயன்படுத்தினர்.  மூடியடி இயக்கத்தின் துரித பரவலுக்கு, தீக்கல் இயக்கத்தோடு இருந்த ஒப்புமையும், இதனால் பழைய ஆயுதங்களை தட்டும்-மூடி பற்றவைப்புக்கு மாற்றுவதன் எளிமையும் தான் காரணம்; பொதுவாக சின்னசின்ன மாற்றங்களுடன் அதே இயக்கத்தகடையும், குழலையுமே பிரயோகிக்கலாம். எரியூட்டிக் கிண்ணியும் தகட்டுமூடியும் நீக்கப்பட்டு,  ஒரு சிறிய உள்ளீடற்ற உருளையை (ஏற்கனவே குடையப்பட்டு, உள்மரையிடப்பட்ட) ஒரு துளையில் வைத்து திருகப்படும், மேலும் மூடியை தாங்க ஏதுவாக அந்த உருளையின் மேல் ஒரு "கூம்பு" இருக்கும். இதிலும் (குண்டேற்ற, தட்டும்மூடியை இட) அரை-சுத்தி மற்றும் முழு-சுத்தி நிலைகள் உள்ளன. விசை இழுக்கப்படுவதால் விடுவிக்கப்படும் சுத்தியல், கூம்பின்மீது வைக்கப்பட்டுள்ள மூடியை அடித்து நொறுக்கும். தட்டும் மூடி என்பது சிறிதளவு அதிர்வுணர் வெடிபொருளை கொண்டிருக்கும், ஒரு மெல்லிய உலோகச் சிமிழ் ஆகும். இது நொறுக்கப்படுகையில், வெடிபொருள் வெடித்து, கூம்பின் துளை வழியாக அதி-உஷ்ண வளிமங்களை தொடுதுளைக்குள் செலுத்தி, குழலுள் இருக்கும் வெடிமருந்தை தீமூட்டும். சுடும் பொழுதில், மூடி இரண்டாகப் பிளந்து, தானாகவே உதிர்ந்துவிடும்.

மின்-சுடுதல் 

[தொகு]

சிறிய எண்ணிக்கையிலான உறையிலா வெடிபொதிகள் எரியூட்டியையே பிரயோகிக்காது, மாறாக (வோர் வ.இ.சி-91-ல் உள்ளது போல்) முதன்மை உந்துபொருள் வெளிப்புறத்தில் இருந்து அளிக்கப்படும் மின்னூட்டத்தால் பற்றவைக்கப்படும். (கீழே வரும்) மின்சாரத்தால் பற்றவைக்கப்படும் அக எரியூட்டலுடன், இதை ஒப்பிட்டு குழம்ப வேண்டாம்.

அக எரியூட்டல்

[தொகு]
சுட்ட விளிம்படி (இடது) மற்றும் சுட்ட நடுவடி (வலது) பொதியுறைகள்.

வேதியியற் எரியூட்டிகள், மேம்பட்ட உலோகவியல் மற்றும் உற்பத்தி நுணுக்கங்கள் ஆகியவன ஒன்று சேர்ந்து, 19-ஆம் நூற்றாண்டில் ஓர் புத்தம்புதிய சுடுகலன் வகுப்பை உருவாக்கியது — வெடிபொதி இடப்படும் ஆயுதம். 

மூன்று உலோக வெடிபொதி எரியூட்டல் அமைப்புகள் தற்காலம் வரை நிலைத்து உள்ளன. அவை விளிம்படி எரியூட்டி, பெர்டான் நடுவடி எரியூட்டி, மற்றும் பாக்ஸர் நடுவடி எரியூட்டி ஆகும்.

விளிம்படி எரியூட்டல்

[தொகு]

விளிம்படி வெடிபொதிகள், பின்முனையில் விளிம்புடைய ஒரு மெல்லிய பித்தளை உறையை பயன்படுத்தும். உற்பத்தியின்போது இந்த விளிம்பில் அதிர்வுணர் எரியூட்டி நிரப்பப்படும். ஈரமான நிலையில் இருக்கும் எரியூட்டியை, ஒரு குண்டுமணி அளவில் உறைக்குள் இடுப்படும்; பிறகு அந்த உறை வேகமாக சுழற்றப்படுவதால் ஈரமான எரியூட்டி விளிம்புகளில் தங்கிவிடும். உலர்ந்த நிலையில், அந்த எரியூட்டி அதிர்வுணர் பண்பை அடைந்துவிடும். இதன்பின் விளிம்பு சுத்தியல் அல்லது வெடியூசியால் அடித்து நொறுக்கப்படுகையில், எரியூட்டி வெடித்து, முதன்மை வெடிபொருளை பற்றவைக்கும். விளிம்படி வெடிபொதிகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும், அதில் மீள்குண்டேற்றம் செய்ய இயலாது.

ஊசியடி எரியூட்டல்

[தொகு]

ஊசியடி வெடிப்பொதி என்பது, ஒரு வழக்கொழிந்த உலோக வெடிபொதி வகை ஆகும். வெடிபொதியின் அடித்தட்டிற்கு சற்று மேலே, ஆரப்போக்கில் துருத்திக்கொண்டு இருக்கும் ஒரு சிறிய ஊசியை அடித்து, இதில் எரியூட்டி பற்றவைக்கப்படும். 1830-களில் பிரெஞ்சுக்காரர் கசீமிர் லெஃபொஷொ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, 1835-ல் காப்புரிமம் பெறப்பட்டது. இது ஒரு முற்கால உலோக வெடிபொதி ஆகும். இதன் வரலாறு, வாய்குண்டேற்ற ஆயுதங்களுக்கு மாற்றாக வந்த பின்-குண்டேற்றிகளின் மேம்பாட்டுடன் மிகவும் நெருங்கியது. இருந்தாலும், துருத்திக் கொண்டிருக்கும் ஊசியானது, எளிதில் சேதமடையக் கூடியது, தவறுதலாகவும் பற்றக்கூடியது. அதிலும், இதை குண்டேற்றுகையில் இதன் ஊசி, (ஏற்கனவே துப்பாக்கியில் உள்ள) ஒரு சிறிய பள்ளத்தில் பதியும் வகையில் குண்டேற்றப்பட வேண்டும். தற்காலத்தில், சில மிகச்சிறிய வெற்று வெடிபொதிகளில் மட்டுமே ஊசியடி எரியூட்டல் உள்ளது.

நடுவடி எரியூட்டல்

[தொகு]

வெடிபொதியின் அடிதட்டின் நடுவிலிருக்கும் மாடக்குழிக்குள், முதல்ரக வெடிபொருளை கொண்டிருக்கும் உலோகச் சிமிழ் (எரியூட்டி) மூலம், நடுவடி வெடிபொதியை இனம் காணலாம். சுடுகலனின் வெடியூசி, சிமிழுக்கும் சிறு-பட்டடைக்கும் இடையிலிருக்கும் வெடிபொருளை அடித்து நொறுக்குவதால் ஏற்படும் தீப்பொறித் துகள்கள், உறைக்குள் இருக்கும் வெடிப்பொடியை பற்றவைக்கும்.[1] பெர்டான் மற்றும் பாக்ஸர், என இரண்டு "நடுவடி" ரகங்கள் உள்ளன.

காம்படி எரியூட்டல்

[தொகு]

"காம்படி" வெடிபொதிகளில் வழக்கமானவைகளைப் போல் விளிம்பு ஏதுமில்லை. அதற்கு பதிலாக, குழலின் பின்னால் இருக்கும் சின்னஞ்சிறு துவாரம் வழியாக துருத்திக் கொண்டிருக்கும் ஒரு சிறிய "காம்பு" ஒன்றைக் கொண்டிருக்கும்.

மின்-எரியூட்டல் 

[தொகு]

சில வேகச்சூடு, மற்றும் பெரிய இராணுவ துப்பாக்கி மற்றும் (எம்50 20மிமீ போன்ற) பீரங்கி வெடிபொதிகள், உட்புற மின்-எரியூட்டிகளை பயன்படுத்துகின்றன. அதாவது இயந்திர தாக்கத்திற்கு பதிலாக வெளியில் இருந்து அளிக்கப்படும் மின்னூட்டத்தால் தூண்டப்படுபவை.  

மேலும் பார்க்க 

[தொகு]

வெளிப்புற இணைப்புகள் 

[தொகு]
  • Siekman, Mark W.; Anderson, David A.; Boyce, Allan S. (September–October 2010), "Small-Arms Ammunition Production and Acquisition: Too Many Eggs in One Basket?", Professional Bulletin of United States Army Sustainment, U.S. Army, 42 (5), PB 700-10-05 {{citation}}: More than one of |ID= and |id= specified (help). Thirteen chemicals used in U.S. Army small arms cartridges; 7 chemicals are not available within the U.S.
  • U.S. Army (September 1984), Military Explosives, Technical Manual, Department of the Army, TM 9-1300-214 {{citation}}: More than one of |ID= and |id= specified (help), p. 2-3 stating "1602–1604. Fulminating gold, later used as a priming explosive, was invented by Johann Tholden, a Dutch chemist in the employ of the British Navy." Later, on same page, "1628. Gold fulminate priming explosives for torpedoes were invented by J. Thollen for the British Navy."
  • Urbański, Tadeusz; Jurecki, Marian (translator) (1967), Laverton, Sylvia (ed.), Chemistry and Technology of Explosives, vol. III (First English ed.), Pergammon {{citation}}: |first2= has generic name (help) c.f. p. 129. Basilius Valentinus described "explosive gold" in first half of 17th century. In 1630, Van Drebbel (Cornelis Drebbel?) investigated fulminate of mercury and "explosive gold". In 1690, Johann von Löwenstern-Kunckel's book Laboratorium Chymicum described how to make fulminate of mercury. In 1805, Alexander John Forsyth used potassium chlorate to make pellets, but these were not safe. "The first ignition caps were invented in the early nineteenth century. In these caps the ignitable composition was enclosed in a casing of brass or copper. This invention cannot be traced with any certainty to any individual. The literature on the subject names several chemists including Bellot and Egg in 1815 [5]. The first application of mercury fulminate in ignition caps is attributed to Wright[6] in 1823."

மேற்கோள்கள் 

[தொகு]
  1. Davis, William C., Jr. Handloading (1981) National Rifle Association p.65
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரியூட்டி_(சுடுகலன்)&oldid=3419528" இலிருந்து மீள்விக்கப்பட்டது