உள்ளடக்கத்துக்குச் செல்

எரிமலைப் பெருவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்கா ஓரிகன் மசாமாஸ் எரிமலை வெடிப்பின் காலவரிசை; எரிமலைப் பெருவாய் உருவாவதற்கான ஓர் எடுத்துக்காட்டு

எரிமலைப் பெருவாய் (kawl-DERR-ə, kal-[1]; ஆங்கிலம்: Caldera) என்பது ஓர் எரிமலை வெடித்த பின்னர் அதன் வாய்ப் பகுதியில் ஏற்படும் ஓர் அகன்ற வெளியைக் குறிப்பிடுவதாகும்.[2]

சுருக்கமாகக் கூறினால்: ஓர் எரிமலை வெடித்துச் சரியும் போது உருவாகும் ஒரு பெரிய பள்ளத்தாக்குதான் கால்டெரா எனும் எரிமலைப் பெருவாய் ஆகும். எரிமலை வெடிப்பின் போது, ​​எரிமலைக்கு அடியில் உள்ள கற்குழம்புகளின் அறையில் இருக்கும் கற்குழம்பு பெரும்பாலும் அதிக வீரியத்துடன் வெளியேற்றப் படுகிறது.[3] பின்னர் ​​கற்குழம்புகளின் அறை காலியாகும்போது, ​​கற்குழம்புகளின் அறைக்குள் ​​கற்குழம்புகள் வழங்கிய வீரியம் மறைந்துவிடும். இதன் விளைவாக, எரிமலையின் பக்கவாட்டுப் பகுதிகளும் மேற்பகுதியும் உள்நோக்கி சரிந்து விழுகின்றன.

பொதுவாக புவிக்கு அடியில் இருக்கும் கற்குழம்பு இந்த வாய்ப் பகுதியின் வழியாக வந்து வெளியே கொட்டி வழியும்.

ஓர் எரிமலையின் வெடிப்பில், புவிக்கு அடியில் இருக்கும் கற்குழம்புகள் காலியான சிறிது நேரத்திலேயே உருவாகும் ஒரு பெரிய கொப்பரை போன்ற குழிதான், எரிமலைப் பெருவாய் என அழைக்கப்படுகிறது.[3]

ஒரு குறுகிய காலக்கட்டத்தில் அதிக அளவிலான தீப்பாறைக் குழம்புகளை வெளியேற்றும் ஓர் எரிமலையின் வெடிப்பு, அந்த எரிமலையின் கட்டமைப்பிற்கும் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். அவ்வாறான விளைவுகளில், ஓர் எரிமலை அதன் சொந்த கூரையைத் (சிகரத்தை) தாங்கும் திறனை இழந்துவிடும் தன்மையும் அடங்கும்.

இவ்வாறு ஓர் எரிமலை அதன் தாங்கும் திறனை இழக்கும் போது, எரிமலையின் சிகரத்தில் உள்ள மேற்பரப்பு அப்படியே சிகரத்திற்கு அடியில் உள்ள கற்குழம்பு அறைக்குள் சரிந்து விடுகிறது. இதனால் சிகரத்தின் மேற்பரப்பில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அல்லது ஒரு பெரிய குழி உருவாகிறது. அவ்வாறு உருவாகும் பள்ளம் அல்லது குழி 50 கி.மீ. வரை அகலமாக இருக்கலாம்.[4]

சில வேளைகளில் அதை ஒரு பள்ளம் அல்லது ஒரு குழி என்று அடையாளப் படுத்தினாலும், இந்தக் கூற்று உண்மையில் ஒரு வகையான மூழ்கும் துளையே ஆகும். ஏனெனில் இந்தப் பள்ளம் நிலச் சரிவின் மூலம் உருவாகிறது. வெடிப்பின் மூலமாக பள்ளம் ஏற்படாமல் மலைச் சிகரத்தில் ஏற்படும் நிலச் சரிவினால் அந்தப் பள்ளம் ஏற்படுகிறது.

பொது

[தொகு]

ஒரு நூற்றாண்டில் நிகழும் ஆயிரக்கணக்கான எரிமலை வெடிப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​எரிமலைப் பெருவாய் உருவாவது ஓர் அரிய நிகழ்வாகும். இது 100 ஆண்டுகளுக்குள் ஒரு சில முறை மட்டுமே நிகழ்கிறது. 1911 - 2018-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 8 எரிமலைப் பெருவாய் சரிவுகள் மட்டுமே நிகழ்ந்ததாக அறியப்படுகிறது,

எரிமலை வெடிப்புகளின் முடிவில், மலையின் உச்சி மறைந்து, அதன் இடத்தில் ஒரு பெரிய துளை விட்டுச் செல்லப்படுகிறது. வெடிப்புகளால் மலையின் உச்சி வெடித்துச் சிதறியதாக ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால் பழைய பாறையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளியே எறியப்பட்டு, மீதமுள்ளவை வெற்றிடத்தில் உள்வாங்கப்பட்டதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன.[5]

அடுத்தடுத்த சிறிய வெடிப்புகள், எரிமலையின் பெருவாய்ப் பகுதியில் சிறிய கூம்புகளை உருவாக்கலாம் அல்லது பள்ளத்தாக்குகளை உருவாக்கலாம். அந்தப் பள்ளத்தாக்குகள் தான் பின்நாட்களில் தண்ணீரால் நிரப்பப்பட்டு ஏரிகளாக மாறுகின்றன.[5]

காட்சியகம்

[தொகு]

எரிமலைப் பெருவாய் காட்சிப் படங்கள்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "caldera". Dictionary.com Unabridged. Random House.
  2. "A caldera is a large depression formed when a volcano erupts and collapses". education.nationalgeographic.org (in ஆங்கிலம்). Retrieved 5 March 2025.
  3. 3.0 3.1 "Calderas usually, if not always, form by the collapse of the top of a volcanic cone or group of cones because of removal of the support formerly furnished by an underlying body of magma (molten rock)". www.britannica.com (in ஆங்கிலம்). 28 January 2025. Retrieved 5 March 2025.
  4. Troll, V. R.; Walter, T. R.; Schmincke, H.-U. (2002-02-01). "Cyclic caldera collapse: Piston or piecemeal subsidence? Field and experimental evidence" (in en). Geology 30 (2): 135–38. doi:10.1130/0091-7613(2002)030<0135:CCCPOP>2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-7613. Bibcode: 2002Geo....30..135T. https://pubs.geoscienceworld.org/gsa/geology/article-abstract/30/2/135/192320/Cyclic-caldera-collapse-Piston-or-piecemeal. 
  5. 5.0 5.1 "U.S. Geological Survey - To geologists, the term refers to both a type of volcano as well as a structure that results from volcanic activity, and it is distinct from the term "crater."". www.usgs.gov (in ஆங்கிலம்). 6 November 2023. Retrieved 5 March 2025.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலைப்_பெருவாய்&oldid=4221156" இலிருந்து மீள்விக்கப்பட்டது