எம். தாமஸ் மேத்யூ
எம். தாமஸ் மேத்யூ | |
|---|---|
| பிறப்பு | 27 செப்டம்பர் 1940 கீக்கோழூர், பத்தனம்திட்டா, கேரளம், இந்தியா |
| தொழில் | இலக்கிய விமர்சகர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் |
| தேசியம் | இந்தியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
| குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
எம். தாமஸ் மேத்யூ (M. Thomas Mathew) என்பவர் ஒரு கேரள இலக்கிய விமர்சகர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் ஆவார். இவர் மலையாள மொழியில் எழுதுகிறார். தந்தகோபுரத்திலேக்கு வேண்டும், என்டே வால்மீகமேவிதே, அச்சந்தே சீதாயனம், ஆத்மவிந்தே முறிவுகள் போன்ற பல இலக்கிய விமர்சன நூல்களை எழுதியுள்ளார். மேலும் எம். என். ராய் எழுதிய புதிய மனிதநேயம் அடங்கிய படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவர் சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]இவர் கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமமான கீகோழூரில் 1940 செப்டம்பர் 27 அன்று பிறந்தார்.[1] தாமஸ் மேத்யூ செங்கன்னூரில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியிலும், எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர், செங்கன்னூரில் உள்ள பழைய கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கேரளத்தில் உள்ள சித்தூர் அரசு கல்லூரி, பாலக்காடு விக்டோரியா கல்லூரி, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி போன்ற பிற கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவும், சாலக்குடி பனம்பிள்ளி நினைவு அரசு கல்லூரி, பட்டாம்பி ஸ்ரீ நீலகண்ட அரசு சமஸ்கிருதக் கல்லூரி, மூணாறு அரசு கல்லூரி ஆகியவற்றில் முதல்வராகவும் பணியாற்றினார். 1996 இல் ஓய்வு பெற்றார். இவர் கேரள பாஷா கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.[2]
தாமஸ் மேத்யூ இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு வகைகளை உள்ளடக்கிய பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார், மேலும் மூன்று இலக்கியக் கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.[3] இவரது படைப்பான "ஆத்மவின்டே முறிவுகள்" 2001 ஆம் ஆண்டு இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது.[4] 2009 ஆம் ஆண்டில், மாரர்: லாவண்யனுபவத்தின் யுக்திசில்பம் என்ற இவரது படைப்புக்காக இவருக்கு வயலார் விருது வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் எம். கே. சானு விருதைப் பெற்றார். 2022 ஆம் ஆண்டில் தனது "அசாந்தே சீதாயனம்" என்ற படைப்பிற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். கேரள சாகித்ய அகாதமியின் சி. பி. குமார் அறக்கட்டளை பரிசு, சி. ஜே. ஃபாதர் வடக்கேல் விருது, டாக்டர். சி. பி. மேனன் நினைவு விருது, மார் கிரிகோரியஸ் நினைவு விருது, டாக்டர். டி. பி. சுகுமார் நினைவு விருது ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார்.[5]
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சங்கம்புழா நகரில் தாமஸ் மேத்யூ வசித்து வருகிறார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sahitya Akademi Award 2022". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 2022-12-22.
- ↑ "Maharajas College Ernakulam". maharajas.ac.in. Retrieved 2022-12-22.
- ↑ "Edited books by M Thomas Mathew". keralabookstore.com. Retrieved 2022-12-22.
- ↑ "Awards". Kerala Sahithya Academi. Retrieved 2022-12-22.
- ↑ 5.0 5.1 "M Thomas Mathew - profile". greenbooksindia.com. Retrieved 2022-12-22.