உள்ளடக்கத்துக்குச் செல்

எம். டி. இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.டி. இராமநாதன்
பிறப்பு(1923-05-20)20 மே 1923
மஞ்சப்பார கேரளம்
இறப்புஏப்ரல் 27, 1984(1984-04-27) (அகவை 60)
அறியப்படுவதுகருநாடக இசைப் பாடகர்
பெற்றோர்தெவச பாகவதர்

எம். டி. இராமநாதன் அல்லது எம். டி. ஆர் (M. D. Ramanathan, MDR, 20 மே 1923 - 27 ஏப்பிரல் 1984) என பிரபலமாக அறியப்படும் மஞ்சப்பார தெவச இராமநாதன் ஒரு கருநாடக இசைப்பாடகர்.

பிறப்பு / கல்வி

[தொகு]

சென்னை மாகாணம் (Madras Presidency) பாலக்காடு மாவட்டத்தில் (தற்போது இது கேரள மாநிலத்தில் உள்ளது) மஞ்சப்பார என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் தெவச பாகவதர். அவர் ஒரு இசை ஆசிரியர். இராமநாதன் பாலக்காட்டிலுள்ள விக்டோரியா கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றார்.

இசைப்பயிற்சி

[தொகு]

தொடக்க இசைப்பயிற்சியை தனது தந்தையாரிடம் கற்றார். பின்னர் மேலும் தகுதி பெறுவதற்காக இராமநாதனை அவரது தந்தை சென்னைக்கு அழைத்துச் சென்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னை கலாசேத்திராவில் ருக்மிணிதேவி அருண்டேல் சங்கீத சிரோமணி பாடநெறியை அறிமுகப்படுத்தி அதற்கு புகழ்பெற்ற இசை வித்துவான் டைகர் வரதாச்சாரியாரை முதல்வராக நியமித்திருந்தார். 1944 இல் வகுப்பு தொடங்கியபோது வாய்ப்பாட்டில் முதலாவது மாணவராக இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாவதாக மட்டுமன்றி வாய்ப்பாட்டில் முதலாவது வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு மாணவராகவும் விளங்கினார். இதனால் டைகர் வரதாச்சாரியார் தனிக் கவனம் எடுத்து கற்றுக்கொடுத்தார். விரைவில் இராமநாதன் குருவின் மனதில் இடம் பிடித்துக்கொண்டார். இருவருக்குமிடையில் நல்லுறவும் புரிந்துணர்வும் ஏற்பட்டது. இந்த உறவு டைகர் வரதாச்சாரியார் 1950ல் இறக்கும் வரை தொடர்ந்தது. இராமநாதன் கடைசிவரை தனது குருவின் மீது மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

இசைப்பணி

[தொகு]

இசைக்கச்சேரிகள்

[தொகு]

இராமநாதன் ஒரு நாதோபாசகர் - நாதத்தை, இசையை தொழுபவர். அவரது குரலின் ஆழமும் கனதியும் தனித்துவமானவை. அதே போல அவர் பாடும் பாணியும் தனித்துவம் வாய்ந்தது. இசை நிகழ்ச்சிகளில் இவர் மந்த கதியிலேயே பாடுவார். கேட்பவர்கள் பாடல் வரிகளை நன்கு கேட்டு பொருள் விளங்கிக் கொள்ளத் தக்கவாறு இடைவெளி விட்டுப் பாடுவார். சிலர் இவரின் இந்தப் பாணியை விமரிசனம் செய்ததுண்டு. அவர் யாருடைய விமரிசனத்தையும் பொருட்படுத்த மாட்டார். இசையை இசைக்காகவே பாடுவதென்பது இவரின் சிறப்பு. இவரது கனதியான குரலுக்கு மந்த கதியில் பாடுவதே பொருத்தமானது என்பது பல இரசிகர்களின் எண்ணமாக இருந்தது.

இவர் சகானா, ஸ்ரீ, ஆனந்த பைரவி, ரீதிகெளளை, யதுகுலகாம்போதி ஆகிய இராகங்களில் செய்யும் ஆலாபனைகள் கருநாடக இசை வரலாற்றில் என்றும் சிறப்பான இடம் வகிக்கும். கேதாரம், காம்போதி, ஹம்சத்வனி என்பனவும் அவருக்கு பிடித்த இராகங்களாகும்.

இராமநாதன் தனது இசைக் கச்சேரிகளின் போது சில சமயம் பாடுவதை இடையிலே நிறுத்திவிட்டு பக்கவாத்தியம் வாசிக்கும் கலைஞர்களுடன் அல்லது இரசிகர்களுடன் உரையாடுவார், விகடம் பண்ணுவார். ஒரு கச்சேரியின்போது பாடலை நிரவல் செய்து கொண்டிருக்கையில் இடையிலே நிறுத்திவிட்டு பாடல் வரிகளின் விளக்கத்தை இரசிகர்களுக்கு எடுத்துச் சொன்னது பல இரசிகர்களின் நினைவில் நிறைந்த நிகழ்ச்சியாகும்.

இவர் பாடும்போது பக்கவாத்திய கலைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். சில சமயங்களில் பாடல் வரிகளை தொடர்ந்து பாடாமல் வரிகளுக்கிடையே இடைவெளி விடுவார். அச் சமயங்களில் மிருதங்கம் வாசிப்பவர் கூடுதல் ஆவர்த்தனம் வாசிக்கத் தயாராக இருக்கவேண்டும். அதே சமயம் சில வரிகளை திரும்பத் திரும்ப பாடுவார். வயலின் வாசிப்பவர் அடுத்த வரிக்கு அல்லது அடுத்த சங்கதிக்குச் செல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்னும் சில சமயங்களில் பிரபல கீர்த்தனைகளை மாற்றிப் பாடுவார். முதலில் அநுபல்லவியைப் பாடிவிட்டுப் பின் பல்லவியைப் பாடுவார்.

இராமநாதனின் இசைக்கச்சேரிகளை நேரில் பார்ப்பவர்களுக்கு அவரின் முக பாவங்களும் அபிநயங்களும் விருந்தாக அமையும். அவரது வாக்குக் கண்ணும், அவர் அடிக்கடி தனது குடுமியை அவிழ்த்து முடிவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.

இவர் மந்த கதியில் பாடும் வழக்கம் உள்ளவராதலால் தீட்சிதர் கிருதிகள் சிலவற்றில் மத்திம கதியில் பாடவேண்டிய இடங்கள் வரும்போது பிரமிப்பூட்டும் வகையில் இரண்டு கதிகளிலும் பாடுவார். காம்போதி இராகத்தில் அமைந்த ஸ்ரீ சுப்ரமணியேன நமஸ்தே மற்றும் ஆனந்த பைரவியில் அமைந்த மானச குருகுக என்ற கீர்த்தனைகளில் சரணங்கள் பாடும்போது வர்ணத்தில் உள்ளது போல இரண்டு கதிகளில் பாடுவார்.

இசை ஆசிரியராக

[தொகு]

கலாசேத்திராவில் தனது இசைப் பயிற்சி முடிந்தபின் அங்கேயே தனது குருவான டைகர் வரதாச்சாரிக்கு உதவியாக இருந்தார். பின்னர் கலாசேத்திராவிலேயே இசைப் பேராசிரியராகவும் அதன் பின்னர் அங்கே இருந்த நுண்கலைக் கல்லூரிக்கு முதல்வராகவும் பணியாற்றினார். கலாசேத்திராவின் முக்கிய பிரிவு நடனப் பயிற்சியாகும். அங்கே நடனம் பயின்ற பல புகழ்பெற்ற நடனமணிகள் இராமநாதனிடமே இசை கற்றனர். தொடக்கத்தில் மாணவர்களுக்கு அவரது இசை நூதனமானதாகவும் மரபு வழி சாராததாகவும் தோன்றியது. ஆனால் போகப்போக அவரது இசையைப் போற்றியதுடன் அதன் மகத்துவத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். உருக்மிணிதேவியும் இராமநாதனது இசையைப் புகழ்ந்ததோடு அது சிறப்புத்தன்மை வாய்ந்தது எனத் தனது மாணவர்களுக்கு கூறினார்.

காயத்ரி சங்கரன் குறிப்பிடத்தக்க மாணவராவார்.[1].

பாடலாசிரியர்

[தொகு]

இராமநாதன் சுமார் 300 கீர்த்தனைகள் தமிழ், தெலுங்கு, சமக்கிருதம் ஆகிய மொழிகளில் இயற்றியுள்ளார். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. [2]

கிருதி இராகம் தாளம் மொழி
ஆனைமுகத்தனை மணிரங்கு மிஸ்ர சாபு தமிழ்
என்ன குற்றம் செய்தேனோ ஹுசேனி ஆதி தமிழ்
கஜவதனா ஹம்சத்வனி ரூபகம் சமக்கிருதம்
குருசரணம் கானடா ஆதி சமக்கிருதம்
குருவரம் பஜ மானாச தன்யாசி ரூபகம் சமக்கிருதம்
ஹரியும் ஹரனும் அடானா ரூபகம் தமிழ்
சாகர சயன விபோ பாகேஸ்ரீ ஆதி சமக்கிருதம்
தில்லானா காபி ரூபகம் ? சமக்கிருதம்
த்யாகராஜ குரு கேதாரம் ரூபகம் சமக்கிருதம்
வேலவனே உனக்கு சகானா ஆதி தமிழ்
விக்னராஜ நன்னு ஸ்ரீரஞ்சனி ஆதி? தெலுங்கு

விருதுகள்

[தொகு]

இறப்பு

[தொகு]

நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த பின் தனது 60 ஆவது அகவையில் மாரடைப்பால் காலமானார்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1983-84 இசைவிழாவின் போது இவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆயினும் சங்கீத அகாதமி நிறுவனத்தின் சில காரணங்களால் கொடுக்கப்படவில்லை என ஒரு தகவல் தெரிவிக்கிறது. மேற்கோள் -1 ஐப் பார்க்கவும்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._இராமநாதன்&oldid=3611690" இலிருந்து மீள்விக்கப்பட்டது