எம். கே. முகம்மது இப்ராகிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம்.கே.முஹம்மது இப்ராஹிம்(M.K. Mohamed Ibrahim பிறப்பு:1885 இறப்பு:1940) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், அன்றைய சென்னை மாகாணத்தின் (இன்றைய தமிழ்நாடு), திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, முன்னாள் தலைவரும் ஆவார்.

பிறப்பு[தொகு]

இவர் திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் 1885 ஆம் ஆண்டு காசியப்ப இராவுத்தருக்கு மகனாக பிறந்தார். காசியப்ப இராவுத்தர் எட்டயபுரத்திலிருந்து திருச்சிக்கு குடிபெயர்ந்தார், இவர் பெரும் வணிகரும் நிலச்சுவான்தாரும் ஆவார்.

தொழில்[தொகு]

முஹம்மது இப்ராஹிமின் மூத்த சகோதரர் யூசுப் இறந்த பிறகு அவரது தந்தையின் மண்ணெண்ணெய் டீலர்ஷிப் மற்றும் தோல் தொழிற்சாலைகளை கவனித்துக் கொண்ட இப்ராகிம், குடும்பத் தொழிலை வேகமாகப் பன்முகப்படுத்தி, பெட்ரோல் விநியோகத்தில் பெரும் பங்கு வகித்தார். (அவருக்கு 18 பெட்ரோல் நிலையங்கள் இருந்தன) திருச்சி - தஞ்சை மாவட்டத்திற்க்கான மண்ணெண்ணை முகவராகவும் இருந்தார். திருச்சி, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் தோல் தொழிற்சாலையை நிறுவி இருந்தார். தோல்களை இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்து வந்தார்.[1]


எம்.கே. கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் அதிபராகவும் இருந்தார். இந்நிறுவனமானது ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம், மதுரை எர்ஸ்கைன்ஸ் மருத்துவமனையின் ஒரு பகுதி (இப்போது அரசு ராஜாஜி மருத்துவமனை என மறுபெயரிடப்பட்டுள்ளது), காக்கிநாடா துறைமுகம் (ஆந்திரப் பிரதேசம்), சிக்மகளூர் ரயில் நிலையம் (கர்நாடகா) மற்றும் திண்டுக்கல்லில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், இன்னும் பல நெடுஞ்சாலைகளையும் கட்டியுள்ளனர்.[2]

அரசியல்[தொகு]

இப்ராஹிம் திருச்சி மக்கள் ஆதரவை பெற்ற ஒரு தலைவராக இருந்தார், அவர் 1925-28 வரை திருச்சிராப்பள்ளி நகராட்சி துணைத் தலைவராகவும் 1928-31 வரை திருச்சிராப்பள்ளி நகராட்சி தலைவராகவும் பணியாற்றினார்.

அவர் மூத்த சுதந்திரப் போராட்ட வீரர் பி.ரத்தினவேல் தேவரின் நெருங்கிய நண்பராக இருந்தார், மேலும் நகரத்தில் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்க பல சமயங்களில் அவருடன் ஒத்துழைத்தார்.

குடும்பம்[தொகு]

இப்ராஹிமுக்கு ருக்கையா பீவி என்ற மனைவியும், அப்துல் சலாம், அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் பஷீர் என மூன்று மகன்கள் உள்ளனர், இதில் அப்துல் சலாம் 1957 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

இறப்பு[தொகு]

இப்ராஹிம் 2 டிசம்பர் 1940 ஆம் ஆண்டு திருச்சியில் காலமானார்.

நினைவு பூங்கா[தொகு]

பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக திருச்சி மேலப்புலிவார் ரோட்டில் இவர் தானமாக மாநகராட்சிக்கு கொடுத்த இடம் இவர் நினைவாக இபுராஹிம் பூங்காவாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. என்திருச்சி.காம் பத்திரிக்கை செய்தி திருச்சி-இங்கிலாந்து கொடிகட்டி பறந்த இப்றாகிம் இராவுத்தர்
  2. தி ஹிந்து பத்திரிக்கை செய்தி
  3. லோக்சபா இணையதளம்