எமிலி (பசு)
எமிலி | |
---|---|
எமிலியின் நினைவிடத்தில் அவளது உருவச்சிலை | |
இனம் | பசு |
பால் | பெண் |
பிறப்பு | சு. 1992 ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
இறப்பு | March 30, 2003 ஷெர்பார்ன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
Resting place | பீஸ் அப்பே, ஷெர்பார்ன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
நாடு | அமெரிக்கன் |
Occupation | அறுப்புக்கான பால்வற்றிய பசு |
செயற்பட்ட ஆண்டுகள் | 1995–2003 |
அறியப்படுவதற்கான காரணம் | விலங்குரிமை, ஊனற்ற உணவு ஆகியவற்றின் பரப்புரையாளர் |
உரிமையாளர் | ராண்டா குடும்பம் |
நிறை | 1,600 pounds (730 kg) |
Appearance | கறுப்பு, வெள்ளை |
எமிலி (ஆங்கிலம்: Emily) அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தின் ஹாப்கின்டன் நகரில் உள்ள ஒரு அடிதொட்டி கூடத்திலிருந்து தாவிக்குதித்து வாயிலைத் தாண்டித் தப்பித்து 40 நாட்கள் பிடிபடாமல் இருந்த ஒரு பசு (Bos taurus) ஆகும். அதன் பின்னர் அதே மாகாணத்திலுள்ள ஷெர்பார்ன் நகரில் "பீஸ் அப்பே" என்ற புகலிடத்தில் 2003-ல் இறக்கும் வரை தன் வாழ்நாட்கள் முழுவதையும் கழித்தது. அப்புகலிடத்தில் தங்கியிருந்த 8 ஆண்டு காலமும் விலங்குரிமையைப் பற்றியும் ஊனற்ற உணவினைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு விலங்குரிமைச் சின்னமாக அப்பசு விளங்கிற்று.
எமிலியின் இறப்பிற்குப் பின்னர் அப்புகலிடத்திலேயே அதன் உடல் புதைக்கப்பட்டு அவ்விடத்தில் உண்மை உருவில் "புனிதப் பசு விலங்குரிமை நினைவுச் சின்னம்" என்ற பெயரில் எமிலிக்கு ஒரு சிலை எழுப்பப்பட்டது.[1]
வதைகூடத்திலிருந்து தப்பித்தல்
[தொகு]1995-ம் ஆண்டு நவம்பர் 14-ம் நாள் எமிலி என்ற மூன்று வயது நிறம்பிய 730 கிலோ (1600 பவுண்டுகள்)[2] எடையுள்ள பசு ஹாப்கின்டன் நகரில் ஏ. அரேனா அண்டு சன்ஸ் என்ற வதைகூடத்தில் தான் கொல்லப்படவிருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கிருந்த 5 அடி (1.5 மீட்டர்கள்) உயரமுள்ள வாயிலைத் தாவிக்குதித்து தப்பித்தது.[1] அதீத பனிப்பொழிவு இருந்த அக்காலக்கட்டத்தில் அப்பசு அந்நகரிலுள்ள குடியிருப்புகளின் பின்புறங்களில் உணவுக்காக மேய்ந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மக்கள் கண்டனர்.[3] அப்பசு சுமார் 40 நாட்கள் யார் கைகளிலும் சிக்காமலிருக்க அவ்வூர் மக்களே உதவியதாகக் கூறப்படுகிறது. வார்செஸ்டர் மாவட்டத்தின் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்களை தானமாக அளித்து வந்த ஹாப்கின்டன் நகரிலிருக்கும் "எல்ம்வுட் ஃபார்ம்" என்ற பண்ணை எமிலிக்கு தனது நிலங்களில் விளைந்த தானியங்களை உணவாக அளிக்கத் துவங்கியது.[1] பலசமயங்களில் எமிலி புதர்களில் ஒரு மான் கூட்டத்தோடு நடமாடுவதை ஊர்மக்கள் கவனித்தனர்.[3] இது அங்குள்ள செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக மாறியது.[1] பலமுறை எமிலியைப் பிடிக்க முயன்ற காவல்துறை அது படிபடாமற் போகவே கடைசியில் எமிலியை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தது.[1]
புகலிடத்திற்கு வந்து சேர்தல்
[தொகு]முன்னதாக எமிலியின் தலைக்கு 350 டாலர்கள் விலை வைக்கப்பட்டது. எனினும் எமிலியை விலைகொடுத்து வாங்க ராண்டா குடும்பத்தினரான மெக் ராண்டாவும் லெவிஸ் ராண்டாவும் முன்வந்ததும் அப்பசுவினை 1 டாலர் விலைக்கு விற்க வதைகூடத்தவர் சம்மதித்தனர்.[1][3] 1995-ம் ஆண்டு கிறித்துமஸ் தினத்தின் முதல் நாள் மாலை ராண்டா குடும்பத்தினரால் "பீஸ் அப்பே" என்ற புகலிடத்திற்கு எமிலி அழைத்து வரப்பட்டது.[4] 40 நாட்களாகத் தலைமறைவாகிச் சுற்றித்திரிந்து மீண்டும் பிடிபட்டு மீட்கப்பட்ட போது எமிலியின் எடை 500 பவுண்டுகள் குறைந்திருந்தது. இதன் காரணமாக எமிலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.[3]
மீட்கப்பட்ட பின்னர் எமிலியைப் பற்றிய தகவல் நாடெங்கும் பரவியது. இதன் மூலம் எமிலி நாடறிந்த பெயராக மாறியது.[1] "பீஸ் அப்பே" புகலிடத்தில் வாழத்துவங்கியதும் எமிலியைச் சந்திக்க நாடு முழுவதுமின்றி பன்னாட்டளவிலும் மக்கள் வந்தனர்.[4] விலங்குரிமை பற்றியும் ஊனற்ற உணவினைப் பற்றியும் விழிப்புணர்வு நல்கும் முகமாக எமிலி மாறியது.[4] அவ்வூரில் நடந்த திருமண நிகழ்ச்சிகளில் இருமுறை மணப்பெண்ணின் தோழியாக எமிலி பங்கேற்றது.[1] மக்கள் எமிலியையும் அதன் வாழ்க்கைக் குறிப்பினையும் தங்கள் மத மற்றும் கலாச்சாரப் பிரதிபலிப்பாகப் பார்க்கத் துவங்கினர்.[1]
"பீஸ் அப்பே" புகலிடத்திற்கு எமிலி வந்த ஓராண்டுக்குள் ஒரு கன்று, இரு வான்கோழிகள், தன் இரு குட்டிகளுடன் கூடிய ஒரு தாய் ஆடு, மூன்று முயல்கள் ஆகியவைகளும் அங்கு வந்து சேர்ந்தன.[3] இவ்விலங்குகளனைத்தும் வதைகூடத்திலிருந்தோ மற்ற துன்பங்களிலிருந்தோ மீட்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.[3] 1995-ம் ஆண்டின் ரிச்சர்டு-III என்ற திறைப்படத்தின் தயாரிப்பாளரான எல்லன் லிட்டில் 1997-ம் ஆண்டு எமிலியின் கதையைத் திறைப்படமாக எடுக்க முற்பட்டார்.[3]
இறப்பும் நினைவிடமும்
[தொகு]கற்பப்பைப் புற்றுநோய் பாதிப்புற்ற எமிலி 2003-ம் ஆண்டு மார்ச் 30-ம் நாள் இறந்தது. இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு எமிலியை மாசச்சூசெட்ஸ் மாகாணத்தின் ஆஷ்லாண்டு நகரிலுள்ள லஷ்மி கோயிலின் இந்துமத குருவான கிருஷ்ண பட்டா என்பவர் சந்தித்து[5] எமிலியின் காலில் ஒரு பொற்சரடினையும் வதைகூடத்தின் வரிசை எண்ணினைப் பொறிக்கக் காதுகளிலிடப்பட்ட துளையில் மற்றுமொரு பொற்சரடினையும் கட்டிவிட்டு ஆசி வழங்கினார்.[4]
2003-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி எமிலிக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதன் உடல் "பீஸ் அப்பே" புகலிடத்தில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தி, அன்னை தெரேசா ஆகியோரது சிலைகளுக்கு நடுவில் புதைக்கப்பட்டது. ராண்டா குடும்பம் லாடோ கெளட்யபிட்ஸ் என்ற கலைஞரைக் கொண்டு எமிலிக்கு உண்மை உருவில் வெண்கலத்தால் ஆன முழுவுருவச் சிலை ஒன்றை நிறுவியது. இந்துமத முறையில் சால்வையும் மலர்களும் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட இச்சிலை எமிலி புதைக்கப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டு "புவி நாள்" அன்று திறந்து வைக்கப்பட்டது.[6]
எமிலியின் நெற்றியிலிருந்தும் வாலின் நுனியிலிருந்தும் எடுக்கப்பட்ட முடியிழைகள், இரத்தத் துளிகள், காதுத் துளையில் கட்டப்பட்ட பொற்சரடு ஆகியவை 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டு காசி நகரில் கங்கையாற்றில் விடப்பட்டது.[7]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]தரவுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Giaimo, Cara (22 July 2015). "Emily the Cow Ran Away From the Slaughterhouse And Became a Star". Atlas Obscura. பார்க்கப்பட்ட நாள் 14 October 2021.
- ↑ Hribal, Jason (April 17, 2007). "Resistance is Never Futile". CounterPunch. http://www.counterpunch.org/2007/04/17/resistance-is-never-futile/. பார்த்த நாள்: 31 Aug 2014.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Ryan, Michael (4 May 1997). "The Cow Who Saved Herself". Herald Journal (Herald Journal). https://news.google.com/newspapers?nid=1876&dat=19970504&id=60goAAAAIBAJ&sjid=ic8EAAAAIBAJ&pg=3790,1617154&hl=en.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Bedrosian, Carol (August 28, 2012). "Sacred Cow Animal Rights Memorial". Spirit of Change Magazine Summer. http://www.spiritofchange.org/Summer-2012/Sacred-Cow-Animal-Rights-Memorial/. பார்த்த நாள்: 31 Aug 2014.
- ↑ "Sri Lakshmi Temple Ashland MA 01721".
- ↑ "Emily the Cow, Vegetarian Activist". RoadsideAmerica.com. n.d. பார்க்கப்பட்ட நாள் 31 Aug 2014.
- ↑ "Emily the Sacred Cow". The Peace Abbey. n.d. Archived from the original on 9 April 2014. பார்க்கப்பட்ட நாள் 31 Aug 2014.
உசாத்துணைகள்
[தொகு]- Randa, Lewis (2010). The Story of Emily the Cow: Bovine Bodhisattva. Preview in Google books