உள்ளடக்கத்துக்குச் செல்

என். ஜி. ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவை என். ஜி. ராமசாமி

என். ஜி. ராமசாமி அல்லது கோவை என். ஜி. ராமசாமி [பிறப்பு: 11 மார்ச்சு 1912] [இறப்பு: 12 பெப்பிரவரி 1943] தமிழ் நாட்டின் அன்றைய கோவை மாவட்டத்தின் பீளமேட்டில் பிறந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். கோவை மாவட்டத்தின் முதல் சத்தியாகிரகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1937-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கோவை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவராக விளங்கியவர்.[1].[2]

இளமை

[தொகு]

தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் 1912- ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் நாள் ராமசாமி பிறந்தார். தந்தை பெயர் கோவிந்தசாமி, தாயார் சித்தம்மாள். இவரது சிறு வயதிலேயே இவருடைய பெற்றோர்கள் காலமானதால், இவரது அண்ணன் ராஜு என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். 1930-இல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தில் கைதானபோது, இவர் தனது மாணவத்தோழர்களை ஒன்று திரட்டித் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். புரட்சியில் மனம் சென்றாலும் காந்தியின் அகிம்சை, சத்தியம் ஆகிய கோட்பாடுகள் இவரைக் கவர்ந்தன. ராமசாமியும் அவரின் நண்பர்களும் ஒன்றுசேர்ந்து "உண்மை உள்ள கழகம்" என்ற பெயரில் ஒரு சங்கம் நிருவி வாரம் ஒருமுறை ஒளிவு மறைவின்றி தத்தமது கருத்துக்களை வெளியிடும் வழக்கத்தைக் கையாண்டனர். இக்குழுவினர் ஓர் அச்சகத்தையும் நடத்தி வந்தனர்.

பணி

[தொகு]

கோவையின் சரோஜா பஞ்சாலையில் வேலைக்குச் சேர்ந்த ராமசாமி, அங்குள்ள இயந்திரங்களில் பழுது நீக்குவதில் தலைசிறந்த வல்லுநர் என்று பெயர் பெற்றார். அந்த ஆலையில் 'மாஸ்டர்' எனும் தகுதி பெற்றார். மக்களை ஒன்று திரட்டுவதிலும், திறமையாக வழிநடத்திச் செல்வதிலும் சிறந்த பணியாற்றினார். பணியாற்றும்போதே தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு விளங்கினார்.

தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்ற முறையிலும் இவரது தொண்டுகளையும் கண்ட காங்கிரஸ் கட்சி 1937-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவரைப் போட்டியிட வைத்தது. இவருக்கு எதிராக வலிமையான போட்டி இருந்தும், காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவில் இவரே வெற்றி பெற்று தனது 25- ஆம் வயதில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1937இல் ராஜாஜி தலைமையில் அமைந்த சென்னை சட்டசபையில் இவரே வயதில் இளையவர். இவரது தொழிலாளர் சார்பு நடவடிக்கைகள், தொழிலாளர் நலனையே முதன்மையாகக் கொண்டிருந்தது.

கொலை முயற்சிகள்

[தொகு]

இவரது நடவடிக்கைகள் கோவை ஆலை உரிமையாளர்களுக்கு வருத்தத்தை அளித்தபோதும், அதனைப் பொருட்படுத்தாது இவர் தொழிலாளர் நலனையே முக்கியமாக நினைத்தார். ஆனால் இவரது நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆலை உரிமையாளர்கள் சிலர் இவரை ஒழித்துக் கட்ட முனைந்தனர். அந்த முயற்சியில் தொழிலாளர்களையேப் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்தனர். அச்சமயத்தில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வந்தனர். புலியங்குளம் எனும் இடத்தில் ஓர் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்புகையில் சிலர் இவரைத் தாக்கி விட்டு, இறந்துவிட்டார் என்று ஓடிவிட்டனர்.

ஆத்திரமடைந்த தொழிலாளர்களை என். ஜி. ராமசாமி அழைத்து "அமைதியாக இருங்கள். ஆத்திரப்படாதீர்கள். ”கொதிப்பும் ஆத்திரமும் காந்திய கொள்கைகளுக்கு முரணானவை" என்று எடுத்துரைத்தார். அகில் இந்திய தொழிலாளர் தலைவர் வி. வி. கிரி அவர்கள் தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1937-இல் கோவை ஜில்லா சோஷலிச பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் நிருவப்பட்டது. அதற்கு என். ஜி. ராமசாமி துணைத் தலைவராக இருந்தார். சோஷலிசம் என்ற பெயரை அரசாங்கம் ஏற்காததால் அந்தச் சொல்லை நீக்கியே சங்கம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் என். ஜி. ராமசாமி இந்த சங்கத்தின் தலைவராக ஆனார்.[3]

1938-ல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக்கூட்டம் முடிந்து அனைவரும் திரும்பும் வேளையில் என்.ஜி.ஆரை இரும்புத் தடிகள் கொண்டு தாக்கி வீழ்த்தினார்கள். இவர் மருத்துவ மனையில் இரண்டு மாத காலம் சிகிச்சை பெற்றுத் தேறினார். பிறகு 1940இல் உடுமலைப் பேட்டையில் நடந்த கூட்டத்திலும் இவர் தாக்கப்பட்டார். இதில் இவரது தொடை எலும்பு முறிந்தது. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின் இவர் தேறினாலும் தனது 28ஆம் வயதிலேயே கைத்தடி கொண்டு நடக்கும் நிலைக்கு ஆளானார்.

விடுதலைப் போரில் பங்கு

[தொகு]

இரண்டாம் உலகப் போர காலத்தில், பிரித்தானியரின் போர் முயற்சிகளுக்கு உதவக்கூடாது என்று சத்தியாக்கிரகம் நடந்தபோது, ராமசாமி கோவை பகுதியில் 1940 ஆகஸ்ட் 22ஆம் தேதி சிங்காநல்லூரில் சத்தியாக்கிரகம் செய்தார். இதனால் சிறைப்பட்டு, வேலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நோய்வாய்ப்பட்டார். 6 நவம்பர் 1941-இல் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார்.

இவர் கோவையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடியும் எதிரிகள் இவரைக் கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். தப்பிய ராமசாமி விடுதலைப் போரில் தீவிரமாக ஈடுபட்டார். இவரது தலைமையில் இருந்த தொழிற்சங்கம் மூலம் பல காங்கிரஸ் தலைவர்களை அழைத்துக் கூட்டங்களை நடத்தினார். சுதந்திரப் போராட்ட வேகத்தை அதிகப்படுத்தினார்.

தொழிலாளர் பிரச்சினைகள்

[தொகு]

இந்தச் சூழ்நிலையில் கோவை முருகன் ஆலையில் பகுதிநேர வேலை (ஷிஃப்ட்) தொழிலாளர்களுள் ஒரு பகுதி தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்தனர். நீதி கேட்கச் சென்றபோது ராமசாமியும், கே. பி. திருவேங்கடம் எனும் தலைவரும் தாக்கப்பட்டனர். இதன் பயனாகப் பெரும் கலவரம் மூண்டது. ஒரு தொழிலாளி இறந்தார். இதற்கிடையே 1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி மும்பையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி அவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முழக்கினார். பல காங்கிரஸ் தலைவர்கள் இவ்வியக்கத்தில் பங்கெடுத்து கைது செய்யப்பட்டனர். கோவையில் 1942 ஆகஸ்ட் 13ஆம் தேதி ராமசாமியும் கைதானார்.

இறுதிக்காலம்

[தொகு]

வேலூர் சிறையில் இருந்த ராமசாமியின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, யாராவது கோவையிலிருந்து வந்து அழைத்துப் போகுமாறு சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் யாரும் போய் அழைத்து வருவதற்கு முன்பே இவரை தொடர்வண்டியில் ஏற்றித் தனியாக அனுப்பிவிட்டது. கோவையில் மயக்க நிலையில் வந்திறங்கிய இவரை மருத்துவர் சிவானந்தம் என்பவர் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகு மூன்று மாதங்களே உயிரோடு இருந்த என். ஜி. ராமசாமி தனது 31ஆம் வயதில், 1943 பிப்ரவரி 12ஆம் நாள் கோவையில் விடுதலையைக் காணாமலேயே மறைந்தார். கோவை உப்பிலிபாளையத்தில் இவரது பெயரால் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. உடுமலைப் பேட்டை நகரின் ஒரு பகுதிக்கு என். ஜி. ராமசாமி என்று பெயர் வைத்துள்ளனர்.

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஜி._ராமசாமி&oldid=3236103" இலிருந்து மீள்விக்கப்பட்டது