நா. சண்முகதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என். சண்முகதாசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாகலிங்கம் சண்முகதாசன்
Nagalingam Shanmugathasan
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-05-02)2 மே 1920
மானிப்பாய், இலங்கை
இறப்பு8 பெப்ரவரி 1993(1993-02-08) (அகவை 72)
இங்கிலாந்து
அரசியல் கட்சிஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி[1] (1964 வரை)
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) (1964 முதல்)
துணைவர்பரமேசுவரி
பிள்ளைகள்மரு. ராதா தம்பிராஜா
முன்னாள் கல்லூரிகொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி
வேலைதொழிற்சங்கவாதி

நா. சண்முகதாசன் (N. Shanmugathasan) என அழைக்கப்படும் நாகலிங்கம் சண்முகதாசன் (சூலை 3, 1920 – பெப்ரவரி 8, 1993) இலங்கைத் தொழிற்சங்கத் தலைவரும், மாவோயிச இடதுசாரி அரசியல்வாதியும் ஆவார். இலங்கை மாவோயிசக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தொடக்ககால பொதுச் செயலாளராகவும், "மாஓ பாதை" கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராகவும் இருந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சண்முகதாசன் யாழ்ப்பாணத்தின் மானிப்பாயைச் சேர்ந்தவர்.[2] 1938 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் இணைந்து வரலாற்றுத் துறையில் கல்வி கற்கும் போது பொதுவுடைமைக் கொள்கையாளர்களுடன் தொடர்புகள் ஏற்பட்டது. கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பெற்றுத் திரும்பிய பிரித்தானியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்களுடன் தொடர்புகளைப் பேணினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டமைக்காகக் கல்லூரியில் இருந்து விலக்கப்பப்பு, மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1940 இல் பல்கலைக்க்ழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரானார்.[3] 1941 இல் மாணவர் ஒன்றியத்தின் தலைவரானார். பிரித்தானிய ஆதிக்கவாதிகளுக்கும், லங்கா சமசமாஜக் கட்சியின் துரொட்ஸ்கியவாதிகளுக்கும் எதிராக பொதுவுடைமைக் கருத்தில் பற்றுக் கொண்ட மாணவர்களை ஒன்று திரட்டினார்.

1943 இல் பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக் கொண்டு தொழிற் சங்க இயக்கத்திலிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அங்கத்தவரானார். கட்சி சீன சார்பு - சோவியத் சார்பு என்று பிரிந்ததைத் தொடர்ந்து 1964 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) பீக்கிங் அணியின் பொதுச் செயலாளரானார். அக்கட்சி சார்பில் 1965 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியைத் தொடர்ந்து 1971 இல் சண்முகதாசன் கைதாகி ஓராண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த காலத்தில் "ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கை வரலாறு" (A Marxist looks at the History of Ceylon என்ற நூலை எழுதினார்.

மார்க்சிசக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்[தொகு]

மார்க்சியக் கோட்பாட்டை எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்துகொள்வதற்கான பங்களிப்பை வழங்கும் ஒரு தளமாக அவரின் பெயரில் 'மார்க்சிசக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்' என்ற இடதுசாரி அமைப்பு கொழும்பில் இயங்கி வருகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Politics in Ceylon".
  2. Sanmugathasan, the Unrepentant Left and the Ethnic Crisis in Sri Lanka[தொடர்பிழந்த இணைப்பு] by Ravi Vaitheespara
  3. Shanmugathasan, N. The Political Memoirs of an Unrepentant Communist, 1989
  4. (2003). சண்முகதாசன் கட்டுரைகள். கொழும்பு: மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._சண்முகதாசன்&oldid=3933744" இலிருந்து மீள்விக்கப்பட்டது