உள்ளடக்கத்துக்குச் செல்

என்றி வால்டர் பேட்ஃசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்றி வால்டர் பேட்ஃசு

என்றி வால்டர் பேட்ஃசு (Henry Walter Bates) (1825–1892) ஒரு புகழ்பெற்ற ஆங்கில இயற்கையியலாளர் ஆவார். படிவளர்ச்சியின்போது சில உயிரினங்கள் வேறு வலிய உயிரினத்தை ஒத்த தோற்றத்தைப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் விளைவு இவரது பெயரால் பேட்ஃசின் போலியொப்புரு என்று அழைக்கப்படுகிறது.

இவர் ஆல்ஃவிரடு அரசல் வாலேசு என்ற அறிஞருடன் இணைந்து தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்ஃசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக இத்தோமினே (குமட்டல் சுரப்பி கொண்டவை), நீளிறகிகள் (Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சி இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றைத் தத்தமது தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்குபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். வெளித்தோற்ற அளவில் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவர் தான் கண்டறிந்ததின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் (போலியொப்புருப்) பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன் இலின்னேயியசுச் சங்கக் கூட்டத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை 1861-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாளன்று படித்தார். அக்கட்டுரை 1862-ம் ஆண்டு 'Contributions to an Insect Fauna of the Amazon Valley' என்ற பெயரில் வெளிவந்தது.[1] அதைத் தொடர்ந்து தனது அமேசான் கள ஆய்வில் கண்டவற்றைப் பற்றி, விரிவாக "அமேசான் ஆற்றைப் பற்றி ஒரு இயற்கையியலாளன்" (The Naturalist on the River Amazons) என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.[2] அவரது இந்த கண்டுபிடிப்புகளும் கணிப்புகளும் நெடிய விவாதங்களுக்கு வித்திட்டன.

பேட்ஃசு நெருங்கிய மரபுத் தொடர்பு இல்லாத இனங்களிடையே அமைந்துள்ள தோற்ற ஒற்றுமை ஒரு கோண்மா எதிர்ப்புத் தகவமைவு என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், சில இனங்கள் வியத்தக்க அளவுக்கு பளிச்சிடும் நிறங்களையும் கொண்டு, ஏதோ தன்னைப் பிடிக்க வரும் கோண்மாக்களைச் சீண்டிப் பார்ப்பது போல மெதுவாகப் பறப்பதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய பட்டாம்பூச்சிகள் பறவைகளுக்கும் பிற பூச்சித்தின்னிகளுக்கும் உண்ணுதற்கு உகந்தவையாக இல்லாமல் இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதே அடிப்படையிலேயே இவ்வினங்களைப் போன்ற போலித்தோற்றம் கொண்ட பிற இனங்களும் தமது நிற அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். அந்தப் போலிகள் குமட்டல் தன்மையையோ நச்சுத்தன்மையையோ பெற்றிருக்க வேண்டியதில்லை.

இந்த விளக்கம் ஆல்ஃவிரடு அரசல் வாலேசும் சார்லசு டார்வினும் அந்நேரம் முன்வைத்திருந்த படிவளர்ச்சிக் கோட்பாட்டுடன் பொருந்தி இருந்தது. இவ்விளக்கம் இயல்பில் காணப்படாத எந்த ஒரு சக்தியையும் சார்ந்திராததால் படிவளர்ச்சியை எதிர்த்தவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. அதுவரை கேலிக்காக மாந்தர் ஒருவரைப்போல மற்றொருவர் செய்து காட்டும் பகடிக்கூத்தை மட்டும் குறித்து வந்த mimicry (மிம்மிக்ரி) என்ற சொல் செடிகளின் பண்புகளையும் விலங்குகளின் பண்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. இந்த அடிக்கருத்தைக் கொண்டு வந்தவர் என்ற முறையில் இவ் ஒப்புப்போலிப்பண்புக்கு பேட்ஃசின் பெயர் சூட்டப்பட்டது. வேறு பல நெட்டாங்குகள் இப்போது கண்டறியப்பட்டிருந்தாலும் மிகுதியாக அறியப்படுவது பேட்ஃசின் நெட்டாங்கு அல்லது அழகச்சே (போலியொப்புரு) ஆகும். பலர் நெட்டாங்கு என்றாலே பேட்ஃசின் நெட்டாங்கு மட்டும் எனப் பிழையாகக் கருத இடமிருந்தாலும், பேட்ஃசே மேலும் பல நெட்டாங்குகளை ஆய்ந்து சொல்லியுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bates, H. W. (1961) Contributions to an insect fauna of the Amazon valley. Lepidoptera: Heliconidae. Transactions of the Linnean Society. 23:495-566.
  2. Bates H. W. 1863.
  3. Pasteur, Georges (1982). “A classificatory review of mimicry systems”. Annual Review of Ecology and Systematics 13: 169–199.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_வால்டர்_பேட்ஃசு&oldid=2441567" இலிருந்து மீள்விக்கப்பட்டது