எத்தியோப்பியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எத்தியோப்பியாவின் வரலாறு அக்சும் பேரரசாக உருவானதிலிருந்து இன்று எத்தியோப்பியக் கூட்டாட்சி சனநாயகக் குடியரசாக உருவாகும் வரையிலான வரலாற்றை எடுத்தாள்கிறது. எத்தியோப்பியப் பேரரசு (அபிசீனியா) முதலில் எத்தொயோப்பிய உயர் நிலப் பகுதியில் வாழ்ந்த எத்தியோப்பிய மக்களால் நிறுவப்பட்டது. புலப் பெயர்வுகளாலும், பேரரசு விரிவாக்கத்தாலும், ஆப்பிரிக்க-ஆசிய மொழிகளைப் பேசும், ஓரோமசு, அம்காரா, சோமாலிகள், டைகிரேக்கள், அபார்கள், சிதாமாக்கள் குரகேக்கள், அகாவ்கள் அராரிகள் போன்ற பல சமூகங்களையும் உள்ளடக்கி வளர்ச்சியடைந்தது.

இந்தப் பகுதியில் வளர்ச்சியடைந்த முதல் இராச்சியங்களுள் ஒன்று டிமிட் இராச்சியம். கிமு 10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இது அதன் தலைநகரை யெகாவில் நிறுவியது. கிபி முதலாம் நூற்றாண்டில், டைகிரே பகுதியில் அக்சுமைட் இராச்சியம் எழுச்சியுற்றது. அக்சும் என்பதைத் தலைநகராகக் கொண்ட இது, யேமன், மேரோ ஆகியவற்ரையும் அடக்கி செங்கடற்பகுதியின் முக்கிய வல்லரசாக ஆனதுடன், நான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கிறித்தவ மதத்தைத் தழுவிக்கொண்டது. இசுலாம் மதத்தின் எழுச்சியுடன் அக்சுமைட் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இசுலாமின் வருகையால் எத்தியோப்பியர்கள் பாதுகாப்புக்காக தெற்கேயுள்ள உயர்நிலங்களை நோக்கிப் புலம்பெயர வேண்டி ஏற்பட்டது. அக்சுமைட்டைத் தொடர்ந்து சக்வே வம்சத்தினர் ஆட்சிக்கு வந்து, லாலிபெலாவைத் தலைநகரம் ஆக்கினர். 13 ஆம் நூற்றாண்டில் சக்வே வம்சத்தை அகற்றிவிட்டு, சொலமனிய வம்சம் ஆட்சிக்கு வந்தது. தொடக்க சொலமனியக் காலத்தில், எத்தியோப்பியாவில் படைத்துறைச் சீர்திருத்தங்களும், பேரரசு விரிவாக்கமும் இடம்பெற்றன. இதன் மூலம் ஆப்பிரிக்கக் கொம்புப் பகுதியில் எத்தியோப்பியா ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இருந்தது. போர்த்துக்கேய மதபோதகர்களும் இக்காலத்தில் எத்தியோப்பியாவுக்கு வந்தனர்.

1529 இல், ஓட்டோமான் பேரரசுக்கு ஆதரவான முசுலிம் அடல் சுல்தானகம், அபிசீனியா மீது படையெடுத்து அதன் உயர்நிலப் பகுதிகளில் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தியது. போர்த்துக்கேயரின் தலையீட்டினாலேயே அடல் சுல்தானகப் படைகள் பின்வாங்கின. அடல், எத்தியோப்பியா இரண்டுமே போரினால் வலிமை குன்றின. இதனால், ஒரோமோ மக்கள் உயர்நிலப் பகுதிக்குள் நுழைந்து அடலைக் கைப்பற்றியதுடன், எத்தியோப்பியாவுக்குள்ளும் ஆழமாக ஊடுருவினர். போர்த்துக்கேயரின் வருகையும் அதிகரித்தது. அதேவேளை ஓட்டோமான்கள் தற்போது எரித்ரியா என அழைக்கப்படும் பகுதிக்குள் நுழைந்தனர். போர்த்துக்கேயர் நவீன ஆயுதங்களையும், பரோக் கட்டிடக்கலையையும் எத்தியோப்பியாவுக்குக் கொண்டுவந்ததுடன், 1622 இல் பேரரசர் முதலாவது சுசனியோசு கத்தோலிக்கத்துக்கு மதம் மாறினார். அதனால், உள்நாட்டுப் போர் உருவாகி அரசர் முடி துறக்கவேண்டி ஏற்பட்டதுடன் எல்லாக் கத்தோலிக்கரும் எத்தியோப்பியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1632 இல் புதிய தலை நகரம் ஒன்று கொண்டாரில் நிறுவப்பட்டதோடு, 18 ஆம் நூற்றாண்டில், போர்த்தலைவர்களால் நாடு பிளவுபடும் வரை, அமைதியாகவும், வளம் பொருந்தியதாகவும் இருந்தது.

1855 இல் இரண்டாம் தெவொட்ரொசுவின் கீழ் எத்தியோப்பியா மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டதுடன் அதன் நவீன வரலாறு தொடங்குகிறது. எத்தியோப்பியாவில் நான்காம் யொகான்னசுவின் தலைமையின் கீழ் மெதுவான நவீனமயமாக்கம் நிகழ்ந்தது. அத்துடன் 1874 இன் எகிப்தியப் படையெடுப்பில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது. அவர் 1889 இல் போரில் கொல்லப்பட்டார்.

1977 இல் சோமாலியா, எத்தியோப்பியா மீது படையெடுத்து ஒகாடென் பகுதியைத் தன்னுடன் இணைக்க முயற்சித்தது. ஆனால், எத்தியோப்பிய, சோவியத், கியூபாப் படைகள் இணைந்து இம்முயற்சியை முறியடித்தன. 1984 இல் எத்தியோப்பியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு மில்லியன் மக்கள் வரை கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போர் 1991 இல் டேர்க்கின் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. இதன் பின்னர், மெலெசு செனாவி தலைமையில் ஒரு கூட்டாட்சி சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது. எத்தியோப்பியா இன்னும்ம் ஏழை நாடாகவே இருந்தபோதும், அதன் பொருளாதாரம் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]