எதிர்க்கட்சித் தலைவர் (இந்தியா)
இந்தியா எதிர்க்கட்சித் தலைவர் | |
---|---|
![]() இந்திய அரசுச் சின்னம் | |
இணையதளம் | www |
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அலுவல்முறையாக அறிவிக்கப்படும் அரசியல்வாதி ஆவார்.
இந்தப் பதவி முந்தைய நடுவண் சட்டமன்றத்திலும் இருந்தாலும் 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்குப் பிறகே அரசியலமைப்பு அங்கீகரித்த பதவியாக மாறியது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊதியம் மற்றும் படிகள் சட்டம் 1977 என்றறியப்படும் இந்தச் சட்டத்தின்படி மக்களவை அல்லது மாநிலங்களவையில் மிகவும் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவராக முறையே மக்களவைத் தலைவர் அல்லது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் அறிவிக்கப்படுகிறார்.[1][2] இருப்பினும், முறையான அங்கீகாரம் பெற, குறிப்பிட்ட கட்சி குறைந்தது மொத்த உறுப்பினர்களில் 10% ஆவது பெற்றிருக்க வேண்டும் (மக்களவையில் 54 உறுப்பினர்கள்). இதற்கு கீழாக இருந்தால் அவையில் அங்கீகரிகப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படுவதில்லை.[1][3] இப்பதவிக்கான உரிமை ஒரு கட்சிக்கே உள்ளது; கட்சிகளின் கூட்டணிகளுக்கல்ல. எனவே தனிக்கட்சி ஒன்று 10% உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும்.[4]
ஆய அமைச்சருக்கான தகுதியை மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களும் பெறுகின்றனர். முறையான எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படாதவிடத்து எதிரணியில் உள்ள மிகப் பெரிய கட்சியின் தலைவர் எதிர்கட்சித் தலைவரின் பணிகளை மேற்கொள்வார். இருப்பினும் பெரிய கட்சியின் தலைவருக்கு அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவருக்கான ஊதியமும் படிகளும் வழங்கப்படுவதில்லை.[5]
இப்பதவியை அறிவிப்பதற்கான இந்த விதிகள் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது மரபுசார்ந்த ஒன்றாகும். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் ஊதியமும் படிகளும் சட்டம், 1977இல் பெரும்பான்மையை நிர்ணயிக்கும் அதிகாரம் குறிப்பிட்ட அவைகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பல முக்கியத்துவம் பெற்ற குழுக்களில் தமது பதவியின் காரணமாக இடம் பெறுகிறார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம், நடுவண் புலனாய்வுச் செயலகம் ஆகியவற்றின் இயக்குநர்களையும் லோக்பால், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களையும் முதன்மைத் தகவல் ஆணையர்களையும் தேர்வு செய்யும் குழுக்களில் அங்கம் வகிக்கிறார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம் சட்டம், 2003, பிரிவு 4, வெளிப்படையாக அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதவிடத்து மக்களவைவில் பெரிய எதிர்க்கட்சியின் தலைவரை தேர்வுக் குழுவில் சேர்த்துக் கொள்ள வழி வகுத்துள்ளது.[6]
2014-இல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சைகள்
1977ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் குறைந்தது 10% மற்றும் அதற்கு மேலும் உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க மக்களவைத் தலைவரால் இயலும். ஆனால் 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி உட்பட எந்த எதிர்க்கட்சியும் குறைந்த பட்சம் 10 விழுக்காடு உறுப்பினர்களை மக்களவையில் கொண்டிருக்கவில்லை. எதிர்க்கட்சிகளில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மட்டும் அதிகமாக பட்சமாக 44 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருப்பதால், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவி கோருவதை, மக்களவைத் தலைவரால் ஏற்க இயலாமல் உள்ளது. இதனால் தற்போது இந்த விவகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.[7][8]
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள்
பெயர் | கட்சி | பதவிக்காலம் | மக்களவை |
---|---|---|---|
வெற்றிடம்[9] | அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை[10] | 26 சனவரி 1952 – 4 மார்ச் 1967 | முதல் இரண்டாம் மூன்றாம் |
வெற்றிடம்[11] | அலுவல்முறையான எதிர்கட்சித் தலைவர் இல்லை | 4 மார்ச் 1967 – 12 திசம்பர் 1969 | நான்காவது |
ராம் சுபாக் சிங் | இந்திய தேசிய காங்கிரசு (நிறுவனம்) | 17 திசம்பர் 1969 – 27 திசம்பர் 1970 | |
வெற்றிடம் | அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லை | 27 திசம்பர் 1970 – 31 சூன் 1977 | ஐந்தாவது |
யசுவந்த்ராவ் சவான் | இந்திய தேசிய காங்கிரசு | 1 சூலை 1977– 11 ஏப்ரல் 1978 | ஆறாவது |
சி. எம். இசுடீபன் | 12 ஏப்ரல் 1978 – 9 சூலை 1979 | ||
யசுவந்த்ராவ் சவான் | 10–28 சூலை 1979 | ||
ஜெகசீவன்ராம் | ஜனதா கட்சி | 29 சூலை – 22 ஆகத்து 1979 | |
வெற்றிடம் | அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லை[10] | 22 ஆகத்து 1979 – 18 திசம்பர் 1989 | ஏழாவது எட்டாவது |
ராஜீவ் காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | 18 திசம்பர் 1989 – 23 திசம்பர் 1990 | ஒன்பதாவது |
லால் கிருஷ்ண அத்வானி | பாரதிய ஜனதா கட்சி | 24 திசம்பர் 1990 – 13 மார்ச் 1991 | |
21 சூன் 1991 – 26 சூலை 1993 | பத்தாவது | ||
அடல் பிகாரி வாச்பாய் | 26 சூலை 1993 – 10 மே 1996 | ||
பி. வி. நரசிம்ம ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | 16–31 மே 1996 | பதினோராவது |
அடல் பிகாரி வாச்பாய் | பாரதிய ஜனதா கட்சி | 1 சூன் 1996 – 4 திசம்பர் 1997 | |
சரத் பவார் | இந்திய தேசிய காங்கிரசு | 19 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999 | பன்னிரெண்டாவது |
சோனியா காந்தி | 13 அக்டோபர் 1999 – 6 பெப்ரவரி 2004 | பதின்மூன்றாவது | |
லால் கிருஷ்ண அத்வானி | பாரதிய ஜனதா கட்சி | 22 மே 2004 – 18 மே 2009 | பதினான்காவது |
சுஷ்மா சுவராஜ் | 21 திசம்பர் 2009 - 19 மே 2014 | பதினைந்தாவது | |
வெற்றிடம் | அலுவல்முறையான எதிர்க்கட்சித் தலைவர் இல்லை | 4 சூன் 2014 - இன்றளவில் | பதினாறாவது மற்றும் பதினேழுவது |
மூலம்:[12] |
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல்
மாநிலங்களவையில் 1969 வரை எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவரும் அறியப்படவில்லை. அதுவரை எதிரணியில் மிகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர், எந்தவொரு அங்கீகாரமோ, தகுதியோ, உரிமைகளோ இன்றி, எதிர்க்கட்சித் தலைவர் என அழைக்கப்பட்டனர். 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு பின்னரே இந்தப் பதவி முறையாக வரையறுக்கப்பட்டது. இதன்படி எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்: (i) அவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் (ii) மாநிலங்களவையில் மிகக் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அரசுக்கு எதிரான கட்சியின் தலைவராக இருத்தல் வேண்டும். (iii) மாநிலங்களையின் அவைத்தலைவரால் (இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்) ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
மாநிலங்களையில் எதிர்க்கட்சித் தலைவர்களாக பொறுப்பேற்றவர்களின் பட்டியல்:[13]
பெயர் | கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|
1 | சியாம் நந்தன் மிஸ்ரா | பிற | திசம்பர் 1969 - மார்ச்சு 1971 |
2 | எம். எஸ். குருபாதசாமி | பிற | மார்ச்சு 1971 - ஏப்ரல் 1972 |
3 | கமலபதி திரிபாதி | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்சு 30, 1977 - பெப்ரவரி 15, 1978 |
4 | போலா பாசுவன் சாத்திரி | இந்திய தேசிய காங்கிரசு (நிறுவனம்) | February 24, 1978 - March 23, 1978 |
5 | கமலபதி திரிபாதி | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்சு 23, 1978 - சனவரி 8, 1980 |
6 | லால் கிருஷ்ண அத்வானி | பாரதிய ஜனதா கட்சி | சனவரி 21, 1980 - ஏப்ரல் 7, 1980 |
7 | பி. சிவசங்கர் | இந்திய தேசிய காங்கிரசு | திசம்பர் 18, 1989 |
8 | எம் எஸ் குருபாதசாமி | பிற | சூன் 28, 1991 - சூலை 21, 1991 |
9 | எஸ். ஜெய்பால் ரெட்டி | காங்கிரசு கட்சி (எதிர்ப்பாளர்) | சூலை 22, 1991 - சூன் 29, 1992 |
10 | சிக்கந்தர் பக்த் | பாரதிய ஜனதா கட்சி | சூலை 7, 1992 - மே 23, 1996 |
11 | சங்கர்ராவ் சவான் | இந்திய தேசிய காங்கிரசு | மே 23, 1996 - சூன் 1, 1996 |
12 | சிக்கந்தர் பக்த் | பாரதிய ஜனதா கட்சி | சூன் 1, 1996 - மார்ச்சு 19, 1998 |
13 | மன்மோகன் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்சு 21, 1998 - மே 21, 2004 |
14 | ஜஸ்வந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | சூன் 3, 2004 - 16 மே 2009 |
15 | அருண் ஜெட்லி | பாரதிய ஜனதா கட்சி | சூன் 3, 2009 – மே 2014 |
16 | குலாம் நபி ஆசாத் | இந்திய தேசிய காங்கிரஸ் | சூன் 2014 - பிப்ரவரி 2021 |
17 | மல்லிகார்ஜுன் கார்கே | இந்திய தேசிய காங்கிரஸ் | பிப்ரவரி 2021 - அக்டோபர் 2022 மற்றும் 17 டிசம்பர் 2022- பதவியில் |
மேற்சான்றுகள்
- ↑ 1.0 1.1 "Salary and Allowances of Leaders of Opposition in Parliament Act, 1977". Ministry of Parliamentary Affairs, Government of India. 16 ஜனவரி 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ [1]
- ↑ Parliament Of India. Legislativebodiesinindia.nic.in. Retrieved on 2014-05-21.
- ↑ http://www.thehindu.com/news/national/new-house-cannot-have-opposition-leader/article6034355.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-09-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-24 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2003-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-08-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ காங்கிரஸூக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மறுப்பு: சட்ட விதிகளுக்கு உள்பட்ட முடிவுதான்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மக்களவை விதிமுறைகளின்படி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை : சுமித்ரா மகாஜன்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ முதல் மக்களவையில் அலுவல்முறையில் அல்லாது ஏ. கே. கோபாலன் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.
- ↑ 10.0 10.1 http://www.rediff.com/news/column/ls-election-no-leader-of-oppn-there-wasnt-any-in-nehru-indira-rajiv-days/20140523.htm
- ↑ அலுவல்முறையில் அல்லாது என். ஜி. ரங்கா ( சுதந்திராக் கட்சி) எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.
- ↑ Lok Sabha. Legislativebodiesinindia.nic.in. Retrieved on 2014-05-21.
- ↑ [2]