எதிரொலிமுறைத் தூரமறிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்கற்றை எதிரொலிமானியைப் பயன்படுத்திக் கடலின் ஆழமறிதலை விளக்கும் படம்.

எதிரொலிமுறைத் தூரமறிதல் (Echo sounding) என்பது, ஒலித் துடிப்புகளைப் பயன்படுத்தி கடலின் ஆழம் அறியும் ஒரு நுட்ப முறையைக் குறிக்கும். ஒலித் துடிப்புக்கள் புறப்படுவதில் இருந்து கடலின் அடியில் தெறித்து மீண்டும் தொடங்கிய இடத்தை அடைவதற்கான நேரம் பதிவு செய்யப்படும். கடல் நீரில் ஒலியின் வேகம் தெரிந்ததே. எனவே அவ்வேகத்தையும், ஒலி தெறித்து மீண்டுவர எடுக்கும் நேரத்தையும் பயன்படுத்திக் கடலின் ஆழத்தைக் கணிக்க முடியும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் கப்பலோட்டுதல், வரைபடங்கள் தயாரித்தல் போன்றவற்றுக்குப் பயன்படுகின்றன. இதே முறையை மீன்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான நீரொலியியல் கணிப்பீடுகளைச் செய்வதற்கு படகுகளிலிருந்து நகரும் அளவைமுறை மூலம் மீன் உயிர்த்திரள் இருக்கும் இடங்களைக் கண்டறிவதுடன், அவற்றின் பரம்பலையும் மதிப்பிடுவர். எதிரொலிமானிகளை நிலையாக ஓரிடத்தில் வைத்து அவ்வழியாகச் செல்லும் மீன்களைக் கண்காணித்து ஆய்வு செய்வதும் உண்டு.

கணிப்பு முறை[தொகு]

ஒலித்துடிப்புக்கள் புறப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே ஒலி திரும்பிவர எடுக்கும் நேரத்தின் அரைப்பங்கை நீரில் ஒலியின் வேகத்தினால் பெருக்கும்போது தூரம் அல்லது ஆழம் கிடைக்கும். நீரில் ஒலியின் வேகம் அண்ணளவாக ஒரு செக்கனுக்கு 1,5 கிலோமீட்டர்கள். இம்முறை மூலம் அச்சொட்டாகத் தூரத்தை அளக்கவேண்டின், நீரில் ஒலியின் வேகத்தையும் அவ்விடத்தில் அளந்து பெறுவர். மீட்டர் அளவை முறை பயன்பாட்டுக்கு வரமுன்னர் கடலின் ஆழம் ஃபாதம் என்னும் அலகில் குறிப்பிடப்பட்டது. இதனால் கடலின் ஆழத்தை அழப்பதற்கான கருவியை ஃபாதமானி எனவும் அழைப்பது உண்டு.