எண்முறை பார்வை இடைமுகம்

எண்முறை பார்வை இடைமுகம் ( Digital Visual Interface / DVI ) என்பது கணினி மற்றும் காட்சிப் பொருட்கள் இடையே படத் தகவலை எண்முறை (டிஜிட்டல்) வடிவில் பரிமாறும் இடைமுகமாகும்[1]. இது பெரும்பாலும் கணினி திரை, படஞ்சாற்றி (ப்ரொஜெக்டர்) மற்றும் உயர் காட்சி தீர்மானம் கொண்ட தொலைக்காட்சி போன்ற சாதனங்களை இணைக்க பயன்படுகிறது. இந்த முறையில் படத் தரவு சுருக்கம் செய்யாமல் அனுப்பப்படுவதால் தெளிவான மற்றும் துல்லியமான காட்சி கிடைக்கிறது. எண்முறை பார்வை இடைமுகம் தொடரிமக் குறிகை (அனலாக்) மற்றும் எண்முறை இரண்டு வித சமிக்கைகளையும் அனுப்ப முடியும் என்பதால் பல்வேறு சாதனங்களுடன் பொருந்தக்கூடியது. இதற்கான இணைப்புகள் பல வகைகளில் உள்ளன, அதில் ஒற்றை பாதை முறை குறைந்த தீர்மானத்திற்கு பொருத்தமாகவும் இரட்டை பாதை முறை அதிக தீர்மானம் மற்றும் அதிக புதுப்பிப்பு வீதத்திற்கும் பொருத்தமாகவும் செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பம் கணினி மற்றும் காட்சி சாதனங்களுக்கிடையே உயர்தர காட்சியை எளிதாக பரிமாறும் ஒரு முக்கிய தரநிலையாகப் பார்க்கப்படுகிறது.

எண்முறை பார்வை இடைமுகம் (டி.வி.ஐ) இணைப்பிகள் மூன்று வகைகளாக உள்ளன. அவை டி.வி.ஐ-டி (DVI-D) எண்முறை சமிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. டி.வி.ஐ-ஏ (DVI-A) தொடரிமக் குறிகை சமிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. டி.வி.ஐ-ஐ (DVI-I) எண்முறை மற்றும் தொடரிமக் குறிகை என இரண்டு சமிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகைப்பாடுகள் மூலம் பயனர்கள் தங்களின் தேவைக்கேற்ப சரியான இணைப்பியைத் தேர்ந்தெடுக்க முடியும்.
எண்முறை பார்வை இடைமுகம் (டி.வி.ஐ) தொழில்நுட்பம் உயர் தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளை எந்தவித தரக்குறைவும் இல்லாமல் அனுப்ப உதவுகிறது. இது நிகழ்பட வரைவியல் அணி (VGA) தொழில்நுட்பத்தை விட மேம்பட்டது. நிகழ்பட வரைவியல் அணி தொடரிமக் குறிகை சமிக்கைகளை மட்டுமே பயன்படுத்துவதால் காட்சித் தரத்தில் சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எண்முறை பார்வை இடைமுகத்தின் முக்கிய நோக்கம் எண்முறை படத் தகவளின் தரத்தை மேம்படுத்துவதே ஆகும். இந்த தொழில்நுட்பம் உயர் துல்லிய பல்லூடக இடைமுகம் (HDMI) மற்றும் காட்சி இடைமுகம் (DisplayPort) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eiden, Hermann (July 7, 1999). "TFT Guide Part 3 - Digital Interfaces". TomsHardware.com. Retrieved 29 March 2012.