எண்ணிமப் புலமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்ணிமப் புலமை (Digital scholarship) என்பது வளர்ந்துவரும் ஒரு பலதுறைசார் கல்விப் புலம் ஆகும். எண்ணிமத் தொழில்நுட்பங்களை புலைமைசார் வெளியீடுகளுக்கும் (scholarly publishing), ஆய்வுக்கும் (research methods), பாதுகாப்புக்கும் அணுக்கத்துக்கும் (preservation and access), கற்பித்தலுக்கும் பயன்படுத்தி கல்விசார் ஆய்வுசார் இலக்குகளை முன்னெடுப்பதை எண்ணிமப் புலமை எனலாம்.[1] எண்ணிமப் பாதுகாப்பு (digital preservation), தரவுக் காட்சிப்படுத்தல் (data visualization), எழுத்துப் பகுப்பாய்வு நுட்பங்கள் (text-analytic techniques), தரவு அறிவியல், பு.த.மு செயலிகள் (GIS applications) போன்ற தொழில்நுட்பங்களை இது பயன்படுத்துகின்றது.[2] எண்ணிமப் புலமை பொதுமக்கள் புலைமைசார் (public scholarship) செயற்பாடுகளுக்கு சிறப்பான கவனம் தருகின்றது. எனினும் எண்ணிமப் புலைமை தொடர்பாக ஓர் இறுக்கமான வரையறை இல்லை.

வரலாறு[தொகு]

மனிதவியல், கணினியியல் துறைகள் இணைந்த ஒரு கல்விப் புலமாக எண்ணிம மனிதவியல் துறை 1980 களில் விரிவான கவனத்தைப் பெறத் தொடங்கியது.[3] 1987 இல் தொடங்கிய எழுத்து குறியேற்ற முன்னெடுப்பு (Text Encoding Initiative) எண்ணிம மனிதவியல் துறையின் முக்கியமான தொடக்க கட்ட செயற்திட்டங்களில் ஒன்றாகும். இது எண்ணிம எழுத்தாவணங்கள் எவ்வாறு குறியேற்றம் செய்யப்படவேண்டும் என்பதற்கான ஒரு சீர்தரம் ஆகும்.

1990 கள் தொடக்கம் இணையமும், எண்ணிமத் தொழில்நுட்பங்களும் பரவலான பயன்பாட்டுக்கு வரத்தொடங்கின. பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், ஆவணகங்கள், பண்பாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மரபுசார்ந்த அறிவு வளங்களை எண்ணிமப்படுத்தி இணையம் ஊடாக அணுக்கம் வழங்கின. இணைய ஆவணகம், HathiTrust, கூகிள் நூல்கள், நூலக நிறுவனம் ஆகியன இவற்றுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

2000 களில் எண்ணிமப் பிறப்புக் கொண்ட அறிவு வளங்களும் வேகமாக வளரத் தொடங்கின. வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், தரவுத்தளங்கள், பல்லூடகங்கள், அலுவலக ஆவணங்கள், மென்பொருட்கள் என்று எண்ணிமப் பிறப்புக் கொண்ட வளங்கள் பெருகின. இது கல்விசார் ஆய்வு செய்யும் முறையையிலில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. முன்வெளியீடு (Preprint) ஊடாக ஆய்வுகள் வேகமாக பகிரப்படலாகின. இவற்றுக்கு முன்னோடியாக இயற்பியல் துறையின் arXiv ஆவணகம் விளங்குகிறது. ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தரவுகள் என்ணிம வழியில் பாதுகாக்கப்பட்டு நேரடியாக இணையம் ஊடாகப் பகிரப்படத் தொடங்கின.

மெய்நிகர் கற்றல் சூழல்கள் (Virtual Learning Enviornments) கற்றல், கற்பித்தலில் பெரும் தாக்கத்தை செலுத்தத் தொடங்கின. ஒரு வகுப்பின் உள்ளடக்கம் (course content), போதனை, வகுப்புத் தொடர்பான தொடர்பாடல் (communication), மதிப்பீடு முறைகள் (student assessment) என பல்வேறு கூறுகளில் இணையத் தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. திறந்த பாடத்திட்டங்கள், பாரிய திறந்த இணைப்பு வகுப்பு ஆகியன மெய்நிகர் கற்றலுக்கு உதவும் முக்கிய செயற்திட்டங்கள் ஆகும். 2015 அளவில் ஐக்கிய அமெரிக்காவில் மூன்றில் ஒரு வகுப்புக்கள் இணையம் ஊடாக எடுக்கப்படுகின்றன.[4]

2010 களில் எண்ணிமப் பாதுகப்பும் அணுக்கம் வழங்கல் தொழில்நுட்பங்கள் (digital preservation and access), புவியியல் தகவல் முறைமை, தரவு அறிவியல், தரவுக் காட்சிப்படுத்தல் ஆகியன அன்றாட கல்விசார் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றத் தொடங்கின. எண்ணிம வளங்களையும், எண்ணிமத் தொழில்நுட்பங்களையும் கல்விசார், புலைமைசார் செயற்பாடுகளில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் வகையில் எண்ணிம புலைமை துறை உருவாகி வளர்ந்துவருகின்றது.

நுட்பங்கள்[தொகு]

 • எண்ணிமப்படுத்தல்
 • எண்ணிமப் பாதுகாப்பு
 • Textual Analysis - எழுத்துப் பகுப்பாய்வு
 • Data Mining
 • தரவு அறிவியல்
 • தரவுக் காட்சிப்படுத்தல்
 • புவியியல் தகவல் முறைமை - இடப் பகுப்பாய்வு
 • முப்பரிணாம ஒப்புருவாக்கம்
 • முப்பரிணாம நிலப்படமாக்கம்


மேற்கோள்கள்[தொகு]

 1. Rumsey, Abby (July 2011). "New-Model Scholarly Communication: Road Map for Change". Scholarly Communication Institute 9. University of Virginia Library. பார்த்த நாள் 30 July 2013.
 2. "Freedman Center for Digital Scholarship". Freedman Center for Digital Scholarship (2016). பார்த்த நாள் 9 சூலை 2016.
 3. Diane M. Zorich. "Digital Humanities Centers: Loci for Digital Scholarship". பார்த்த நாள் 9 சூலை 2016.
 4. Melissa Layne & Phil Ice (2015). "Re-Imagining and Re-Structuring Scholarship, Teaching, and Learning in Digital Environments". பார்த்த நாள் 8 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிமப்_புலமை&oldid=2102563" இருந்து மீள்விக்கப்பட்டது