எட்மண்ட் தாமஸ் கிளின்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்மண்ட் தாமஸ் கிளின்ட்
பிறப்புகிளின்ட்
மே 19, 1976(1976-05-19)
கொச்சி, கேரளா
இறப்பு(1983-04-15)ஏப்ரல் 15, 1983 (வயது 6)
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஓவியம்

எட்மண்ட் தாமஸ் கிளின்ட் (1976–1983), தன்னுடைய ஏழு வயதிற்குள் 25000 ஓவியங்களை வரைந்த வியத்தகு திறமைபெற்றிருந்த சிறுவன்.[1]

பிறப்பு[தொகு]

எட்மண்ட் தாமஸ் கிளின்ட் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சியில் 1976, மே 19 அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் எம்.டி.ஜோஸப்புக்கும் சின்னம்மா ஜோஸப்புக்கும் கிளின்ட் ஒரே மகன் ஆவார்.[2] அவருடைய தந்தை எம்.டி.ஜோஸப், ஆலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகராக இருந்ததால் தன் மகனுக்கு கிளின்ட் என்று பெயரிட்டார்.

கல்வி[தொகு]

கிளின்ட்டுக்கு இரண்டு வயதானபொழுது அவரது இரு சிறுநீரகங்களும் பழுதடையத் தொடங்கின. தன் மகனைப் பள்ளிக்கு அனுப்ப இயலாத அவருடைய தந்தை வீட்டிலேயே அவருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார்.

ஓவியம்[தொகு]

மூன்று வயதிலிருந்து கிளின்ட் ஓவியம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். தனது ஐந்தாவது வயதில் அவர் ஒரு முழுமையான ஓவியராக வளர்ச்சி பெற்றிருந்தார். இந்துக்களின் பண்டிகைகளை வரைவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். தனது ஐந்து வயதில் கேரளாவில் நடத்தப்பட்ட 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

ஆவணப்படம்[தொகு]

கேரள மாநிலத்தின் ஆவணப்படத் தயாரிப்பாளர் சிவக்குமார் கிளின்ட்டின் வாழ்க்கையையும் அவரது படைப்புகளையும் ஒரு ஆவணப்படமாகத் தயாரித்தார். அது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. பிரேசில் நாட்டில் தங்கியிருந்த ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அத்திரைப்படத்தால் மனம் நெகிழ்ந்த அவர், தன் கைப்பட கிளின்ட்டின் பெற்றோருக்கு ஆறுதல் கடிதம் எழுதினார்.

திரைப்படம்[தொகு]

'கிளின்ட் நிறங்களுடே ராஜகுமாரன்' என்னும் வாழ்க்கை வரலாறு 'செபாஸ்டின் பள்ளித்தோட்' என்பவரால் எழுதப்பட்டது.[3] கிளின்ட்டின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 2007 ம் ஆண்டு 'ஆனந்த பைரவி' என்னும் மலையாளப்படம் தயாரிக்கப்பட்டது.[4]

நினைவு[தொகு]

கொச்சியிலுள்ள மிகப்பெரிய சாலை ஒன்றிற்கு கிளின்ட் ரோடு என்ப் பெயரிடப்பட்டுள்ளது. இவரது படைப்புகளை கேரள அரசு டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்தி சேமித்துள்ளது. இவரது படைப்புகள் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் 'எட்மண்ட் தாமஸ் கிளின்ட் நினைவு ஓவியப் போட்டிகள்' நடத்தப்படுகின்றன.[5]

இறப்பு[தொகு]

எட்மண்ட் தாமஸ் கிளின்ட், தன்னுடைய ஏழு வயதிற்கு முன் 1983, ஏப்ரல் 15 அன்று தீவிர சிறுநீரகக் கோளாறால் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "7 year-old kid unbelievably drew 25,000 paintings in 2522 days of his life". indiatvnews. http://www.indiatvnews.com/buzz/life/edmund-thomas-clint-paintings-128.html. 
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  4. "`Missing out award painful'". The Hindu (Chennai, India). 26 February 2007. Archived from the original on 28 பிப்ரவரி 2007. https://web.archive.org/web/20070228124420/http://www.hindu.com/2007/02/26/stories/2007022619580300.htm. பார்த்த நாள்: 9 April 2010. 
  5. "Edmund Thomas Clint memorial painting competition for children". The Hindu (Chennai, India: 21 November 2009). 21 November 2009. Archived from the original on 24 நவம்பர் 2009. https://web.archive.org/web/20091124111258/http://www.hindu.com/2009/11/21/stories/2009112159860300.htm. பார்த்த நாள்: 9 April 2010.