எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2012 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட எடக்கல் தமிழ் பிராமிக் கல்வெட்டு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள எடக்கல் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாவது தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற கல்வெட்டியல் பேராசிரியர் எம். ஆர். இராகவ வாரியார் இக்கல்வெட்டைக் கண்டுபிடித்தார். தொல்லெழுத்தியல் அடிப்படையில், இக்கல்வெட்டின் காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு என மதிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டின் வாசிப்பு[தொகு]

இங்குள்ள மற்றக் கல்வெட்டுகளைப் போலன்றி, இந்த நான்கெழுத்துப் பொறிப்பு குகைச் சுவரில் காணப்படும் மனித உருவொன்றுக்கான ஒரு குறிப்புப்போல இணைக்கப்பட்டுள்ளது. இந்த உருவம் பெரிய ஆண்குறியுடன் வரையப்பட்டுள்ளது. இது வளமையைக் குறிப்பதாகவும், அதனால் உருவம் பிரம்மாவைக் குறிப்பதாக இருக்கலாம் என்பதும் வாரியாரின் விளக்கம். அவர் இக்கல்வெட்டை "ஸ்ரீ வழுமி" என்று வாசித்து, அது பிரம்மாவைக் குறிக்கும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ்ப்படுத்தலாக இருக்கக்கூடும் எனக் கருதுகிறார்.[1]

தொடக்கத்தில் இதை ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன், முதல் எழுத்துத் தெளிவாக இல்லாததால் அதை விடுத்துப் பிற்பகுதியை "பழம" (பழமை) என்று வாசித்தார். பின்னர், கணினி மூலம் தெளிவாக்கம் செய்து, "இது பழமை" எனப் பொருள்படும் "இ பழம" என்னும் மலையாளச் சொல்லே இது என்றும் அறிவித்தார்.[2]

தொல்லியலாளர், நடன காசிநாதன், இதை "ஓ பழமி" என்று தமிழாக வாசித்து, இது மிகப் பழங்காலத்து மனிதனையோ அல்லது இறைவனையோ "ஓ" என் அ விழித்து வேண்டுவதாக இருக்கலாம் என்கிறார். அத்துடன் இது, கி.பி 5-6 ஆம் நூற்றைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதுகிறார்.[3]

அரசியல்[தொகு]

கேரள அரசும், மலையாளத்தை செம்மொழியாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் இணைப்பாளர் முனைவர் நடுவட்டம் கோபாலகிருஷ்ணனும், ஐராவதம் மகாதேவனின் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனாலும், இது குறித்துப் பல கேரள மொழியியலாளர்கள் திருப்தி கொள்ளவில்லை. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த வாரியார், இது மிகவும் ஆபத்தான போக்கு என்றும், அந்த இரண்டு சொற்களுக்குள் அளவுக்கு அதிகமாக வாசிக்க முயல்கிறார்கள் என்றும் குறைப்பட்ட அவர், அரசாங்கம் தான் அமைத்த குழுவுக்கு வெளியே கலந்துரையாடலைத் தவிர்க்கிறது என்றும், பொறுமை இல்லாமல், அறிவியலுக்கு ஒவ்வாத அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. T. S. Subramanian, Edakal cave yields one more Tamil-Brahmi inscription, The Hindu, February 9, 2012
  2. நடன காசிநாதன், தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுக்கள் - ஒரு புலனாய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2014, பக். 163.
  3. நடன காசிநாதன், 2014, பக். 163.
  4. Historians contest antiquity of Edakkal inscriptions, The Times of India, Jul 10, 2012.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]