எகிப்து அரசர் கல்லறைகளில் தமிழ் எழுத்துகள்
தமிழர்களின் வணிகத் தொடர்பு செங்கடல் பெர்திகே, குசீர்-அல்-காதிம் துறைமுகங்கள் வரை இருந்ததற்கான சான்றுகள் இதுவரையில் கிடைத்திருந்தன.
இப்போது தமிழர்கள் சுற்றுலாப் பயணிகளாக அத்துறைமுகங்களிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லகுஸர் வரையில் சென்றுள்ளதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. சென்னையில் சர்வதேச தமிழ்க் கல்வெட்டு மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில் சுவிச்சர்லாந்து வாசேன் பல்கலைக்கழகப் பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச், பிரான்சு நாட்டுப் பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் ஆகியோரும் கலந்துகொண்டனர். அவர்கள் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டனர். எகிப்து அரசர் கல்லறைகளில் தமிழ் எழுத்துகள் இருப்பதை எடுத்துக்காட்டி அவற்றைப் பற்றிய கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.[1] [2]
வேலி ஆப் தி கிங்ஸ் என்று சொல்லப்படும் அரசர்களில் புகழ் பெற்ற மன்னர் 6-ஆவது ராமேசஸ். இவரது 14-ஆவது எண் கொண்ட கல்லறைகளில் தமிழர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
எழுத்துகள் தமிழ்-பிராமி (தமிழி அல்லது தாமிழி) எழுத்துகளில் உள்ளன. இத்தகைய கல்லறை எழுத்துகள் 10-இற்கு மேல் உள்ளன.
ஒன்றில் ‘சிகை கொற்றன்’ என்னும் பெயர் உள்ளது. [ற] எழுத்து தமிழுக்கே உரிய எழுத்து என்பதை உலகம் அறியும். சிகைக்கொற்றன் என்னும் பெயர் குடுமிக்கோமான் [3] என்னும் சங்க கால அரசன் பெயரோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய ஒன்று.
‘கோபான் வர கண்ட’ என்னும் கல்வெட்டுத் தொடர் இவன் பார்க்க வந்தவன் என்று குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
சங்ககாலத் தமிழர்க்கே உரிய சாத்தன், கீரன் என்னும் பெயர்களும் இங்குக் காணப்படுகின்றன.
இவற்றில் சிகை கொற்றன் என்னும் பெயர் மட்டும் 8 கல்லறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இவன் பார்க்க வந்த குழுவினரின் தலைவனாக இருக்கலாம் என்று அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தக் கல்வெட்டுகளின் காலம் கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகள். இங்குள்ள எழுத்துகள் கொடுமணல் அகழ்வாய்வில் கண்ட எழுத்துகளை ஒத்திருக்கின்றன.
அக்காலக் கிரேக்கப் பயணிகள் தாம் சென்ற இடங்களில் தம் பெயர்களைப் பொறிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அந்தப் பழக்கம் தமிழர்களிடமும் இருந்திருக்கிறது.
மேற்கோள்
[தொகு]- ↑ தினத்தந்தி, சென்னை பதிப்பு, 13 - 2 - 2026 வெள்ளி, பக்கம் 12
- ↑ The Times of India, Chennai edition, Feb 12, 2026
- ↑ புறநானூறு 64