ஊவா மாகாண சபையின் கொடி
பயன்பாட்டு முறை | Civil and state கொடி |
---|---|
அளவு | 4:5 |
ஏற்கப்பட்டது | 1987 |
வடிவம் | மஞ்சள் நிறப் பின்னணியில் சிவப்பு நிறத்தில் அன்னத்தின் உருவமும், சுற்றிலும் அலங்கார விளிம்புகளையும் கொண்டது. |
ஊவா மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான ஊவா மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 1987ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரலாறு
[தொகு]1987 ஆம் ஆண்டில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைகள் சட்டம் இல. 42, 1987 ஆகியவற்றின் கீழ் ஊவா மாகாண சபை உருவாக்கப்பட்ட போது அதற்கான கொடியொன்று வடிவமைக்கப்பட்டது.
அமைப்பு
[தொகு]ஊவா மாகாண சபையின் கொடி மஞ்சள் நிறப் பின்னணியில் சிவப்பு நிறத்தில் அலங்காரங்களையும் சின்னங்களையும் கொண்ட ஒரு கொடியாகும். இக்கொடியில் ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு செவ்வகங்கள் சிவப்பு நிறக் கோடுகளாக வரையப்பட்டுள்ளன. இவ்விரு கோடுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் கொடி போன்ற அலங்காரங்கள் உள்ளன. மூலைகளில் தாமரைச் சின்னங்கள் காணப்படுகின்றன. உட்செவ்வகத்தின் நடுவில் கொடிகளை அலகில் ஏந்திய அன்னப் பறவையின் உருவம் உள்ளது. இவ்வன்னப் பறவை கோட்டுருவமாகவே வரையப்பட்டுள்ளது.[1]
சிங்கள மன்னர்களின் காலத்தில் இலங்கை 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகவும், இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கொடிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இம்மாகாணங்களுள் ஒன்றான ஊவா மாகாணத்துக்கு அன்னக்கொடி ஒதுக்கப்பட்டது. அன்னப்பறவை, அழகு, அகிம்சை, உயர்வு, அரசருக்குரிய தன்மை போன்றவற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. கண்டியை ஆண்ட சிறீ விக்கிரமராஜசிங்கன் காலத்தில் ஊவா மாகாணத்துக்கு வழங்கப்பட்ட கொடி இப்போதும் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[2]