உள்ளடக்கத்துக்குச் செல்

ஊழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊழ் என்பதைத் தலைவிதி என்று பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறது. பிறக்கும்போதே தலையில் எழுதப்பட்ட விதி என்று பொதுவாகக் கருதப்படுகிறது. வள்ளுவர்கூட இதனை ‘வகுத்தான் வகுத்த வகை’ எனக் குறிப்பிடுகிறார். ஊழ் என்னும் சொல் ஊழ்வினையை உணர்த்தும் நிலைக்கு வந்ததாகவும் கருதப்படுகிறது.

ஊழ் – சொல் விளக்கம்[தொகு]

காதல் மெய்ப்பாடுகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் ‘ஊழணி தைவரல்’ என்பதைக் குறிப்பிடும்போது ஊழ் என்னும் சொல் ‘நழுவுதல்’ என்னும் பொருளைத் தருகிறது.[1] ஊழ்க்கும்,[2] ஊழிற்று,[3] ஊழ்த்தல்,[4] ஊழுறு தீங்கனி,[5] ஊழ்த்த,[6] ஊழுறுபு,[7] ஊழ்த்து,[8] ஊழ்ப்ப,[9] ஊழ்த்தும்,[10] ஊழ்த்தன,[11] ஊழ்த்தனன்,[12] ஊழ்முகை அவிழ,[13] எனச் சங்கப்பாடல்களில் பயின்றுவரும் சொல்லாட்சிகள் தோன்றுதல் என்னும் பொருளையும், ஊழுறு பூ,[14] ஊழ்கழி பன்மலர்,[15] ஊழ்கோடு,[16] என்னும் சொல்லாட்சிகள் ‘வீழ்தல்’ பொருளையும், ஊழ்மாறு உய்க்கும்,[17] ஊழ்மாறு பெயர [18] என்னும் சொல்லாட்சிகள் தோன்றுதலும் மறைதலும் மாறிமாறி நிகழ்வதையும் உணர்த்துகின்றன.

ஒவ்வொருவருடைய உடலிலும், உயிரிலும் ஊழ்த்திருப்பது ஊழ். காயில் விதை. விதையில் அதன் மலர், காய் இருப்பது போன்றது ஊழ். இவை ஒன்றுக்குள் ஒன்று என பால்பட்டு (பகுதியாக) இருபதால் பால் எனவும் கூறப்படும். ஆண்பாலில் ஆண்மை பால்பட்டு இருப்பது போன்றது இது. இது இயற்கை. இது செயற்கையால் வந்தது அன்று. ஊழினால் தோன்றி மறைவது ஊழி [19] திருக்குறளில் இடம் பெற்ற ஊழ் என்னும் அதிகாரச் சொல் தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டில் 262 ஆம் நூற்பாவில் ஊழணீ தைவரல் என்ற செய்தியாக இடம் பெற்றிருக்கிறது.

ஊழ் அதிகாரம் சொல்லும் செய்திகள்[தொகு]

திருக்குறளிலுள்ள ஊழ் என்னும் அதிகாரத்தில் [20] 10 பாடல்கள் உள்ளன. அவற்றில் ஊழைக் குறிக்க இயற்கை, உண்மை, வகுத்தான் வகுத்த வகை என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஊழானது ஆகூழ் – போகூழ் எனவும், இழவூழ் – ஆகலூழ் எனவும் வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.

இதன் 10 பாடல்களில் சொல்லப்படும் செய்திகள்
 1. ஆகூழால் உள்ளத்தில் அசையாத் தன்மை பிறக்கும்; போகூழால் சோம்பல் தோன்றும்.
 2. இழவூழ் அறிவில்லாத முட்டாளாகவும், ஆகலூழ் அறிஞனாகவும் மாற்றும்.
 3. எவ்வளவுதான் படித்தாலும் ஊழ்த்த உண்மை அறிவுதான் எஞ்சிநிற்கும்.
 4. இயற்கை திருவையும் தெளிவையும் இணைய விடாது.
 5. திரு சேர்க்கும் ஊழ் தீயனவற்றையும் நல்லவையாக மாற்றும். இவ் ஊழ் இல்லாவிட்டால் நல்லனவும் தீயனவாய் முடியும்.
 6. ஒருவனிடம் பகுதிபட்டுப் பாலாய் இருக்கும் ஊழ் விலக்கினும் விலகாது. இல்லாத ஊழ் அழைக்கினும் வாராது.
 7. கோடிக் கணக்கில் பணம் சேர்த்தாலும் அதனைத் துய்ப்பதற்கு ஊழ் வேண்டும். இந்த ஊழ்தான் ‘வகுத்தான் வகுத்த வகை’
 8. பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிட்டாவிட்டால் மனவலிமை இல்லாதவர் அதனை விட்டு விலகிவிடுவர்.
 9. நல்லது நிகழும்போது துய்த்து மகிழ்பவர், தீயது நிகழும்போது அதனை விட்டு விலகுவது ஏன்?
 10. ஊழைக்காட்டிலும் வலிமை உடையது வேறொன்றும் இல்லை. ஊழின் தாக்கத்திலிருந்து தப்ப வேறொன்றைத் தேடினாலும் ஊழ் அதற்குமுன் வந்து நின்று தேடுவதைத் தடுத்துவிடும்.
 • சோராமல் உழைப்பவர் ஊழை ஒதுக்கிவைக்க முடியும் [21]

மேற்கோள்கள்[தொகு]

 1. தொல்காப்பியம் 3-258
 2. புறநானூறு 109-5
 3. புறநானூறு 29-22
 4. கலித்தொகை, 20-17
 5. அகம் 2-2
 6. குறுந்தொகை 66
 7. அகம் 134-10
 8. மலைபடுகடாம் 180
 9. அகம் 339
 10. திருக்குறள் 650
 11. ஐங்குறுநூறு 458
 12. ஐங்குறுநூறு மிகை 5-2
 13. நற்றிணை 115-6
 14. நற்ற்றிணை 326-6
 15. ஐங்குறுநூறு 368
 16. புறநானூறு 322
 17. புறநானூறு 381-23
 18. புறநானூறு 125-3
 19. ஊழி பெயரினும் தான் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் – திருக்குறள் 989
 20. அதிகாரம் 38
 21. அதிகாரம் ஆள்வினை உடைமை - திருக்குறள் 620

இவற்றையும் காண்க[தொகு]

இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊழ்&oldid=3306041" இலிருந்து மீள்விக்கப்பட்டது