ஊன்பொதி பசுங்குடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊன்பொதி பசுங்குடையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 4 சங்கப் பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன. நான்கும் புறநானூற்றுப் பாடல்கள். அவற்றின் எண் 10[1], 203, 370, 378

இவரால் பாடப்பட்ட அரசர்கள்
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி (புறநானூறு 10)
சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி (புறநானூறு 203)
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி (புறநானூறு 370, 378)
இவர் சொன்ன இராமாயணச் செய்தி
சீதை

இந்தப் புலவர் இந்தச் சோழனின் அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு அவன் வஞ்சிப் போரில் வென்றதைப் பாடினார். அவன் தன் அணிகலன்களைப் புலவர்க்கு மிகுதியாக வழங்கினான். புலவர் தாங்கமுடியாத அளவுக்கு வழங்கினான். புலவருடன் வந்து சேர்ந்து பாடிய அவரது சுற்றத்தார் வறுமையில் வாடியவர்கள். அவர்கள் அந்த நகைகளை முன்பின் பார்த்ததில்லை. எந்த அணியை எங்கே அணிந்துகொள்வது என்று தெரியவில்லை. விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொண்டார்களாம். காதில் அணியவேண்டிய அணிகளை விரலில் செருகிக்கொண்டார்களாம். இடுப்பில் அணியும் அணிகளைக் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டார்களாம். கழுத்தில் அணியவேண்டிய அணிகளை இடுப்பில் கட்டிக்கொண்டார்களாம். இது எப்படியிருந்தது என்றால்,

'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு'
இருந்ததாம்.

இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவணன் வௌவிச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரியத் தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. ஊன்பொதி பசுங்குடையார் பாடல் 10