ஊசுட்டேரி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊசுட்டேரி ஏரி புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும். ஊசுடு என்ற கிராமத்தில் அமைந்திருப்பதால் இந்த ஏரி ஊசுடு ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி 800 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இதில் 390 ஹெக்டேர் புதுச்சேரியிலும் மீதமுள்ள பகுதிகள் தமிழ்நாட்டிலும் உள்ளது. [1] இது புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரி ஆகும்.

பறவைகள் சரணாலயம்[தொகு]

ஊசுட்டேரி ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி ஆகும், இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் (IUCN) ஆசியாவின் மிக முக்கிய நீர்தடங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. [2]

சர்வதேச இயற்கை பாதுகாப்புக் கழகத்தால் (IUCN-International Union for Conservation of Nature) ஆசியாவின் முதன்மையான 93 நீர்நிலைகளுள் ஊசுட்டேரி ஒன்று என்றும், உலக சதுப்புநில அமைப்பு (Wetland International) ஊசுட்டேரியும் அதைச் சுற்றியுள்ள ஈரநிலப் பகுதிகளும், ஆசியாவில் முதன்மையானவை என்றும், பம்பாய் இயற்கை வரலாற்று கழகம் தென்னிந்தியாவின் முதன்மையான பறவை தங்குமிடம் என்றும் அறிவித்திருந்தன

நாட்குறிப்பு நாயகன் ஆனந்தரங்கம் பிள்ளை 18 ஆம் நூற்றாண்டு நாட்குறிப்பில் பல இடங்களில் இந்த ஏரியைப் புகசூடு ஏரி எனக் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய பழம் பெருமை வாய்ந்த ஏரியாகத் திகழ்வது ‘ஊசுட்டேரி’. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும், கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் பகர்கின்றன. தமிழ்நாட்டை ஆண்ட தெலுங்கு மன்னர் கிருஷ்ண தேவராயர் ஒழுகரைக்கு வந்து இந்த ஏரியைப் பார்த்ததாக அறிய முடிகிறது. இந்த வரலாற்றுச் சான்றுகள் அந்த ஏரியின் பெருமையை காலகாலத்துக்கும் கூறி நிற்கின்றன.

ஊசுட்டேரி வரலாறு

முத்தரையர்பாளையத்தில் நீர் ஆதாரத்தைக் கண்டுபிடிக்க உதவிய தாசியான ஆயிக்கு புதுச்சேரியில் ஆயி மண்டபம் என்ற நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஆயியின் தங்கை ஒல்லியாக இருந்ததால் ‘ஊசி’ என்று அழைக்கப்பட்டாள். அவள் முத்தரையர்பாளையத்துக்கு அருகில் பாழடைந்த நிலையில் இருந்த ஏரியை, மழைக்காலத்தில் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னுடைய உடலுழைப்பு, பொருள் அனைத்தையும் இட்டுச் சீர்படுத்தினாள். இதைப் பார்த்த ஊர் மக்களும் சேர்ந்து ஏரியைச் சீர்ப்படுத்தினர். இதனால் நீலக்கடல் போல் பரந்து விரிந்து காட்சி அளித்த ஏரியை ஊசியின் நினைவாக ‘ஊசியிட்ட ஏரி’ எனப் பெயரிட்டனர். நாளைடைவில் இது ‘ஊசுட்டேரி’ என மருவியது என்பர்.

புதுச்சேரியில் இருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி: 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் மொத்த நீளம்: 7.275 கி.மீ. மொத்தக் கொள்ளளவு: 540 மில்லியன் கனஅடி. சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்து ஏரிக்கு பெருமளவில் நீர் வருகிறது.

பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1500 எக்டேர். புதுச்சேரி பகுதிகளான தெற்கில் ஊசுடு, கூடப்பாக்கம், மேற்கில் ராமநாதபுரம், தொண்டமாநத்தம், வடக்கில் துத்திப்பட்டு, கரசூர், சேதராப்பட்டு, கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப் பகுதிகளான விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை, காசிப்பாளையம். மணவெளி, கடப்பேரிக்குப்பம் ஊராட்சி கொண்டிமேடு, வாழப்பட்டான்பாளையம், பெரம்பை ஆகிய பகுதிகள் உள்ளன.

ஊசுட்டேரி. இயற்கை வளங்களாகத் திகழும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியன பல்லுயிர்கள் பெருகி பசுமையான சூழ்நிலையை உருவாக்கவும், நிலத்தடி நீரை அதிகாரிக்கவும், பாசனம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மிக இன்றியமையாததாக விளங்குகின்றன. ஊசுட்டேரியின் சிறப்புகளாகத் திகழும் பல்லுயிர் வளத்தில் தாவரவியல் ஆய்வில் 60 வகை குடும்பங்களைச் சேர்ந்த 200 வகை சிறப்பினச் செடி, கொடி, மர இனங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் மருத்துவ குணமுள்ளவையும் அடங்கும். புறவையின வகையில் குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் என 105 சிறப்பினங்கள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வந்து செல்வதாகக் கணக்கிட்டுள்ளனர்.

ஊசுட்டேரியின் அமைதியான சூழ்நிலையால் பலவகை பறவைகள் தங்கிச் செல்கின்றன. கொக்கு, நாரை, மடையான், நீர்க்கோழி, சிரவி, உள்ளூர் வாத்தினங்கள், பூநாரை, வக்கா, அரிவாள் மூக்கன், செங்கால் நாரை, கூழைக்கடா, குருட்டுக்கொக்கு, வெண்கொக்கு, சாம்பல் நிறக் கூழைக்கடா, ஊசிவால் வாத்து, மஞ்சள்மூக்கு நாரை போன்றவை வந்து செல்கின்றன. ரசியாவின் வடபகுதியிலிருந்தும், மத்திய ஆசியா, இலங்கை, மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் சில அரிய இனப் பறவைகள் வருகின்றன. பாசிகள், புழுக்கள், மீன்கள், நத்தைகள், நண்டுகள், எலிகள், பாம்புகள் போன்றவற்றை உண்டு வாழும் இந்தப் பறவைகள், உணவுக்காக நீர்நிலைகளையும், சுற்றியுள்ள வயல்களையும் நம்பியுள்ளன.

பல்வேறு இனப் பறவைகள் வருடம் தோறும் இங்கு புலம்பெயர்வதால் இந்த ஏரி முக்கிய பறவைகளின் இடங்களில் (IPA) ஒன்று. [3] 2008 ஆம் ஆண்டில் புதுச்சேரி ஒன்றிய அரசினால் ஊசுட்டேரி நீர்தடம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது [4].இந்த ஏரியின் தமிழ்நாட்டில் உள்ள நீர்தடம் 2015 ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. [5]

குறிப்பு[தொகு]

  1. https://www.thehindu.com/news/cities/puducherry/ossudu-lake-bahour-tank-reach-full-level/article7951445.ece
  2. "Ousteri Lake - Lake Tourism in Pondicherry - Pondy Torism".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Islam, M.Z. & A.R. Rahmani (2004). Important Bird Areas in India: Priority sites for conservation. Indian Bird Conservation Network: Bombay Natural History Society and Birdlife International (UK).Pp.xviii+1133
  4. "Conservation of Ousteri lake in Puducherry - Draft Comprehensive Management Action Plan by SACON".
  5. "Oussudu lake, a fully protected wetland now". https://www.thehindu.com/news/cities/chennai/oussudu-lake-a-fully-protected-wetland-now/article7136253.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசுட்டேரி_ஏரி&oldid=3613448" இலிருந்து மீள்விக்கப்பட்டது