உவகைக் கலுழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்துறைப் பாடல்கள் மூன்று உள்ளன. [1] இது தும்பைத்திணையின் துறைகளில் ஒன்று.

தொல்காப்பியம், குறிப்பிடும் தும்பைத் திணையின் 12 துறைகளில் இது இடம்பெறவில்லை.

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் தும்பைப்படலத்தில் 24 துறைகள் வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவற்றில், இத் துறையானது நாட்டைக் காக்க நடந்த போரில் வாள் காயம் பட்டு வந்த கணவனைக் கண்டு மனைவி மகிழ்ச்சிக் கண்ணீர் உகுப்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [2]

  • புறநானூற்றுப் பாடல்கள் மகன் வீரம் கண்டு தாய் மகிழ்ந்ததைக் கூறுகின்றன.
  • புறப்பொருள் வெண்பாமாலை கணவனின் வீரம் கண்டு மனைவி மகிழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது.
புறநானூற்றுப் பாடல் செய்திகள்
  • ‘முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன்’ என்று சொல்லக் கேட்ட தாய் மூங்கில் காட்டில் பெய்த மழைத்துளிபோல் கண்ணீர் உகுத்து மகிழ்ந்தாள். [3]
  • ‘முதியோள் சிறுவன் படை எறிந்து மாறினன்’ எனப் பலரும் கூறக் கேட்ட தாய் ‘அவன் பாலுண்ட என் முலையை அறுத்தெறிவேன்’ எனக் கூறியவள், போர்க்களம் சென்று பிணங்களைப் புரட்டித் தன் மகனது உடல் சிதைந்துகிடப்பதைக் கண்டு அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமாக மகிழ்ந்தாள். [4]
  • வருபடையைப் பிளந்துகொண்டு முன்னேறி போர்க்காட்டில் சிதைந்து கிடந்த தன் மகன் உடலைக் கண்டதும் தாயின் வாடிய முலைகள் மகிழ்ச்சிப் பெருக்கில் ஊறிச் சுரந்தன. [5]

அடிக்குறிப்பு[தொகு]

  1. 277, 278, 295
  2. வாள்வாய்த்த வடுவாழ் யாக்கை
    வேல்கண்டு கலுழ்ந்து உவந்தன்று – புறப்பொருள் வெண்பாமாலை 152
  3. பூங்கணுத்திரையார் - புறம் 277
  4. காக்கை பாடினியார் நச்செள்ளையார் – புறம் 278
  5. ஔவையார் – புறம் 295
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவகைக்_கலுழ்ச்சி&oldid=1206625" இலிருந்து மீள்விக்கப்பட்டது