உள்நோக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்நோக்கம் (Intention) என்பது ஒருவரின் மன நிலையைக் குறிக்கின்ற சொல்லாகும். ஒருவரின் மன நிலையைப் பல கூறுகளாகப் பிரிக்கலாம். எடுத்துக் காட்டாக, குறிக்கோள், கடமை உணர்வு, நோக்கம், ஒப்புவுமை போன்றவை ஒருவரின் மன நிலையின் கூறுகளாகச் சொல்லலாம். அதுபோன்றே, உள்நோக்கம் என்பது மன நிலையின் ஒரு கூறு.

உள்நோக்கம் கொண்ட ஒருவர் அதற்குத் தேவையான அனைத்து அக வினைகளையும் (mental activities) புற வினைகளையும் (physical actions) செய்வேன் என்று தம்மை உடனே ஒப்புவித்துக் (commit) கொள்ள வேண்டும். உள்நோக்கத்தைப் பற்றி தெளிவானதொரு விளக்கத்தைக் கொடுத்தவர் பிராட்மன் என்பவராவார்.[1]

வரையறை[தொகு]

ஒரு மனிதனின் இயல்பு அவன் மனம் இயங்கும் தன்மையை வைத்துக் கணக்கிட்டுக் கூறப் படுகின்றது. ஒருவனுடைய மனம் இயங்கும் தன்மை அவனுடைய நம்பிக்கைகள் (beliefs), ஆசைகள் (desires), உள்நோக்கங்கள் (intentions) ஆகியவற்றைப் பொறுத்து அமைகின்றது என்று உளவியல் துறை கூறுகின்றது.[2][3] உள்நோக்கம் என்பது ஒரு செயலைச் செய்வேன் எனத் தன்னைத் தானே ஒப்புவித்துக் கொண்ட மன நிலையாகும். ஒரு சில நேரங்களில் உள்நோக்கம் இல்லாமலேயே நாம் சில செயல்களைச் செய்கிறோம். காட்டாக, நெருப்பில் கை படும்போது, கையை உடனே இழுத்துக் கொள்கிறோம். இங்கு, கையை இழுத்துக் கொள்கின்ற செயலானது மனதில் உள்நோக்கம் இன்றிச் செயப் படுகின்றது. தமிழில் நோக்கம் என்ற சொல்லை purpose என்ற பொருள் படவும் பயன் படுத்தப் படுகின்றது. தாங்கள் வந்த நோக்கம் என்ன? என்பது ஒருவர் என்ன எதிர் பார்த்து வந்தார் என்ற பொருள் தரும். உள்நோக்கம் என்பது தவறான நோக்கம் என்ற பொருளிலும் வரும். தாங்கள் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து போனதின் உள்நோக்கம் என்ன? என்ற தொடரில், உள்நோக்கம் என்பது தவறான நோக்கம் என்ற பொருளில் வருகின்றது.

உள்நோக்கம் (Intention) என்பதின் விளக்கம்[தொகு]

அன்றாட வாழ்க்கையில் நாம் பலரோடு பழகுகிறோம்,அவர்களுடன் சேர்ந்து பல பணிகளைச் செய்கிறோம். இவற்றைச் சரியாகச் செய்வதற்கு, மற்றவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்வது இன்றியமையாததாக ஆகின்றது. எடுத்துக்காட்டாக, கீழ்க் கண்ட உரையாடலை எடுத்துக் கொள்வோம்:

 • எழிலன்: "இன்று திரைப்படம் பார்க்க செல்லலாமா?"
 • எழிலரசி: "சரி, இன்று மாலை 6:00 மணிக்கு வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள்."

இதிலிருந்து, எழிலரசிக்கு "இன்று" திரைப்படம் பார்க்கும் உள்நோக்கம் இருக்கின்றது என்று ஊகிக்கலாம். அந்த உள்நோக்கம் எழிலனுக்குக் கட்டாயம் தெரிய வேண்டும். தெரிந்தால் தான் அவனும் அவளை அழைக்க மாலை 6:00 மணிக்குப் போக முடியும். எழிலரசியின் உள்நோக்கம் தெரியவில்லை என்றால், எழிலன் அவளை அழைக்கவே செல்ல முடியாது. நாம் செய்யும் பல செயல்கள் உள்நோக்கத்தின் அடிப்படையிலே செய்யப் படுகின்றன. எனவே, ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவருடைய உள்நோக்கங்களைப் பற்றியும், அவர் மனத்தில் அவை எப்படி எழுகின்றன, எப்படி மறைகின்றன, என்பன பற்றி தெரிந்து கொள்ளவும் மிக இன்றியமையாதது.[4] ஒருவருக்கு இருவகையான இயக்கங்கள் உண்டு: ஒன்று, அக இயக்கம்; மற்றொன்று, புற இயக்கம். அக இயக்கத்தை மன இயக்கம் என்று சொல்லலாம். மன இயக்கத்தின் இன்றியமையாத கூறு உள்நோக்கம் என்பதாகும். புற இயக்கத்தின் உண்மையான பொருள் ஒருவரின் உள்நோக்கத்தில் மறைந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால், சமுதாயத்தின் பல கூறுகளை ஒவ்வொருவரின் உள்நோக்கத்தை வைத்தே விளக்கலாம். மற்றும், சிறுவர்கள் மற்றவர்களின் செயல்களை வைத்துக் கொண்டே அவர்களுடைய நோக்கம், உள்நோக்கம், குறிக்கோள், ஆகியன பற்றி ஓரளவுக்கு ஊகிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பதைக் காண்கிறோம்.[5] மற்றவர்களுடைய உள்நோக்கம் தெரிந்தால்தான் அவர்கள் என்ன சொல்கிறார்கள் [6] , என்ன நோக்கத்துக்காக ஒரு செயலைச் செய்கிறார்கள் என்பனவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். ஒருவருடைய உள்நோக்கத்தை அறிந்தாலன்றி அவருடன் சேர்ந்து ஒரு பணியைச் செய்வது என்பது மிகக் கடினம்.[7]

உள்நோக்கம் என்பதைக் குழந்தைகள் எப்படி புரிந்து கொள்கிறார்கள்?[தொகு]

குழந்தைகள் எப்பொழுதுமே மற்றவர்களைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள். மற்றவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அவர்கள் என்ன மனதில் நினைக்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் மிக இளம் அகவையிலேயே கற்றுக் கொள்கிறார்கள். மெல்சாப் (Meltzoff 1995) என்ற ஆய்வாளர் பதினெட்டு மாதம் நிரம்பிய குழந்தைகளை வைத்துக் கொண்டு ஒரு சில ஆய்வுகளை நடத்தினார்.[8] இந்த ஆய்வின் நோக்கம் பதினெட்டு மாதக் குழந்தைகள் பெரியவர்களை எப்படிப் புரிந்து கொள்கின்றன என்று பார்ப்பதர்க்காகும். இதில் பங்கெடுத்துக் கொண்ட பெரியவர்கள் பதினெட்டு மாத குழந்தைகள் எதிரில் இரண்டு வகையான செயல்களைச் செய்தார்கள்: (1) ஒரு செயலை செய்வது போல் பாசாங்கு செய்து பிறகு அதை வேண்டுமென்றே செய்யாமல் விட்டுவிடுவது; (2) ஒரு செயலை செய்ய விரும்பி பிறகு செய்ய முடியாமல் போவது. இந்த இரு வகையான செயல்களுமே சரியாகச் செய்து முடிக்காத செயல்கள் தாம். ஆனால், முதல் வகையான செயலில் வேண்டுமென்ற உண்மையான விருப்பம் இல்லை; ஆனால் இரண்டாம் வகையான செயலில் செய்ய வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. பதினெட்டு மாதம் அகவை நிறைந்த குழந்தைகள் இந்த இரு வகையான செயல்களுக்கும் மன அளவில் உள்ள வேற்றுமையைப் புரிந்து கொண்டு இருக்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் ஒன்பது அகவை நிறைந்த குழந்தைகளுக்கு இந்த வேற்றுமையைக் கண்டுகொள்ளும் திறமை இன்னும் வளர்ந்திருக்கவில்லை என்றும் தெளிவாயிற்று. [9]

இது போன்ற ஆய்வுகள் மூன்று ஆண்டுகள் நிரம்பிய சிறுவர்களை வைத்தும் நடத்தப் பட்டது.[10] பெரியவர்கள் ஒரு செயலைச் (action) செய்யும் போது அதை ஒரு குறிக்கோளோடு (goal, desire) செய்வார்கள். ஒரு குறிக்கோளை அடைய பல செயல்கள் செய்ய வேண்டி இருக்கும். ஒவ்வொரு செயலும் உள்நோக்கத்தோடு செய்யும் போதுதான் அதோடு சேர்ந்த குறிக்கோளும் வெற்றி அடைய வாய்ப்புண்டு. எனவே, ஒரு குறிக்கோளை சரியாக அடைய உள்நோக்கம் தேவைப் படுகின்றது. உள்நோக்கம் இல்லையென்றேல், குறிக்கோள்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. எனவே, ஒருவருடைய குறிக்கோள்கள் நமக்குத் தெரியும் பொழுது, அவர் செய்யும் செயல்களுக்குள்ளே அவர் உள்நோக்கம் என்னவென்றும் நமக்குத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, எழிலன் (ஒரு சிறுவன்) மாம்பழம் வேண்டுமென்று ஒரு கல்லை எடுத்து மா மரத்தின் உச்சியில் உள்ள மாங்கனியைக் குறி பார்த்து எறிகிறான் என்று வைத்துக் கொள்வோம். இதில், அவனுடைய குறிக்கோள்(goal ) மாம்பழம் தரையில் விழ வேண்டும் என்பது; அதாவது, கிளையில் இருக்கும் பழம் தரையில் விழுந்து இருக்க வேண்டும். அவன் திட்டம் (plan ) ஒவ்வொரு கல்லாக எடுத்து பழத்தை நோக்கி வீசுவது. இங்கே, வீசுதல் என்பது செயல்(action ). அவன் திட்டத்தின் (plan ) படி, இந்த வீசுதல் என்ற செயலை அவன் பலமுறை செய்ய வேண்டும். இனி, நாம் அங்கே நின்றுகொண்டு அவனைப் பார்த்தால், அந்த வீசுதல் என்ற செயலை ஒவ்வொரு முறையும் செய்யும் போது, தன் குறிக்கோளை அடையவே அந்தச் செயலைச் செய்கிறான் என்ற எண்ணம் (அதாவது, உள்நோக்கம் - intention) அவன் மனதுக்குள் இருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடியும். எனவே, குறிக்கோளோடு ஒரு செயலைச் செயும் போது, ஒருவர் மனதில், உள்நோக்கம் இருக்கிறது என்று கருத முடியும். ஆனால், குறிக்கோள் இல்லாமல் ஒருவர் ஒரு செயலைச் செய்யும் போது, அவர் மனதில், அது தொடர்பான உள்நோக்கம் இருக்கும் என்று சொல்ல முடியாது. எடுத்துக் காட்டாக, மாடலன் என்ற சிறுவன் மா மரத்தடியில் பந்து விளையாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். பந்தை வீசும் போது, பந்து ஒரு மாம்பழத்தின் மீது பட்டு, பழம் கீழே விழுந்து விட்டது. இதில், மாடலன் பந்து வீசுதல் என்ற செயலை பழம் விழ வேண்டும் என்ற குறிக்கோளோடு செய்தான் என்று சொல்ல முடியாது. பழம் விழுந்தது ஒரு எதிர் பாராத நிகழ்ச்சி; இதை accident (நேர்ச்சி) எனலாம்.[11] எனவே, நேர்ச்சி போன்ற நிகழ்வுகளுக்கு அடியில், மனதில், உள்நோக்கம் என்று ஒன்று இருக்கும் எனக் கூற இயலாது. ஆஸ்டிங்டன் (Astington) (1993) [12] போன்ற ஆய்வாளர்கள், மூன்று ஆண்டுகள் நிரம்பிய குழந்தைகள் ஒருவரின் குறிக்கோளை வைத்து அவருடைய செயல்களின் உள்நோக்கத்தை உய்த்தறியும் திறம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்று நிறுவி உள்ளனர்.

ஒருவருடைய குறிக்கோள் என்பது வேறு, அவருடைய உள்நோக்கங்கம் என்பது வேறு என்று பிரித்தறியும் திறமையை குழந்தைகள் மிக இளம் அகவையிலேயே பெற்றுள்ளனர்.

சைகை, உள்நோக்கம்[தொகு]

சைகை (gestures) என்பது நம் உடல் உறுப்பு அசைவினால் ஒன்றைத் தெரிவிப்பதாகும். வா, போ என்று கை அசைவினால் தெரிவிப்பது, வேண்டாம் அல்லது வேண்டும் என்று தலை ஆட்டுவது, யார் என்று கையை மூடிக் கொண்டு முன்னும் பின்னும் கையை ஆட்டுவது, உதைப்பேன் என்று சொல்வது போல் காலால் தரை உதைத்துக் காட்டுவது, கண்ணைக் காட்டுவது, விரலைச் சொடுக்குவது, என்று நம் தமிழ் மக்கள் பல வகையான சைகைகளை உருவாக்கி வைத்துள்ளனர். சைகைகள் வாழ்க்கையில் மிக இன்றியமையாதவை. ஒரு மனித குமுகாயத்தில் பல வகையான சைகைகள் பயன் படுத்தப் படுகின்றன.

சைகைகளில் இன்றியமையாததாகக் கருதப்படுவது ஒன்றை (சுட்டி) காட்டுவது. எடுத்துக் காட்டாக, "அதோ பார் நிலவு" என்று கை விரல்களால் சுட்டிக் காட்டுவது ஒரு சைகையாகும். குழந்தைகள் ஒன்றை (சுட்டி)காட்டும்போது கையையும் கை விரல்களையும் வைத்து அதைச் செய்கிறார்கள். "அம்மா எங்கே?" என்று கேட்டால் குழந்தை அம்மா சென்ற திசையில் கையைக் காட்டுகிறது; பழத்தைக் காட்டி, அது வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறான சுட்டிக் காட்டும் சைகைகளைக் குழந்தைகள் மிக இளம் அகவையிலேயே கற்றுக் கொள்கின்றனர்.

சுட்டிக் காட்டும் சைகையை வைத்து ஒரு குழந்தை எதில் கவனம் செலுத்துகிறது, அதன் உள்நோக்கம் என்ன என்பன பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள முடியும்.[13] அதை எடு என்று ஒரு குழந்தையிடம் ஒரு பந்தைச் சுட்டிக் காட்டும் போது, குழந்தை நம் விரல் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், பந்தின் மீதும் கவனத்தைச் செலுத்தி, அப் பந்தை எடுக்க ஓடுகின்றது. கவனம், உள்நோக்கம் ஆகியவை நம் சைகைகள் வழியாக குழந்தைகள் மனத்தில் உருவாகின்றன.[14] ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுவது, மற்றவர்கள் சுட்டுவதைப் புரிந்து கொள்வது போன்ற திறமைகளைக் குழந்தைகள் 9 முதல் 12 மாத அகவையில் பெறுகின்றனர் என்று கருதலாம்.[15][16][17] ஓர் ஆண்டு நிரம்பிய குழந்தை ஒரு பொருளைக் கையால் காட்டும் போது அந்தக் காட்டுதலுக்குப் பல பொருள்கள் (meaning) இருப்பதாகத் தோன்றுகின்றது. "ஏதோ ஒன்று எதிரில் கிடக்கின்றது", "அதைப் பார்", "அது எனக்கு வேண்டும்" என பல பொருளில் ஒரு குழந்தை தன் சைகையைச் செய்து காட்டுகின்றது.[18] குழந்தைகள் வளர வளர, சைகைகளின் பொருள்களும் அவர்களுக்கு மாறுபட்டுத் தெரிகின்றன. ஒரு சைகை எப்படி ஒருவரின் குறிக்கோள்(goal), நோக்கம்(purpose),உள்நோக்கம்(intention) ஆகிவற்றுடன் தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன என்பதைப் பின்னால் குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர்.[19]

உள்ளடக்க நோக்கு நிலை, உள்நோக்கம்[தொகு]

உள்ளடக்கம் அல்லது உள்ளடக்க நிலை என்பது ஒரு பொருள் ஒரு சூழலில் உள்ளடங்கி அமைந்திருக்கின்ற நிலையாகும். எடுத்துக் காட்டாக, ஒருவன் ஒரு ஊருக்கு வெளியில் இருந்து அந்த ஊரில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கும், ஊருக்குள்ளேயே சென்று அதன் சூழலில் இருந்துகொண்டு அங்கு உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கும் வேறுபாடு உண்டு. ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு இயங்குகின்ற நிலை உள்ளடக்க நிலை எனப்படும். உள்ளடக்கக் கருதுகோளின்படி, ஒரு மனிதன் ஒரு சூழலில் உள்ளடங்கியவனாக இருந்து, அங்குள்ள பொருள்களோடு கலந்து, பல செயல்களைச் செய்வதால், அவனுக்கு cognition எனப்படும் அறியும் ஆற்றல் மனதில் வளர்கின்றது. அதாவது, சூழலையும், அதில் அவன் நடை முறையையும் அவனுடைய அறியும் ஆற்றல் என்பதில் இருந்து பிரித்தறிய முடியாது; சூழலும், நடை முறையும் அறியும் ஆற்றலின் இரு கூறுகள் எனலாம். ஒவ்வொரு மனிதனின் மனிதிலும் தான் வாழும் உலகத்தைப் பற்றிய மன முறையீடு என்று ஒன்று இருப்பதாகக் கூறப் படுகின்றது. அதாவது, மரம் என்றால் உயரமாக இருக்கும், அரிமா என்றால் அடித்துக் கொல்லும் என்பன மரத்தைப் பற்றியும், அரிமாவைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் மன முறையீடுகள். எனவே, எங்கேயேனும் அரிமாவைப் பார்த்து விட்டால் ஓடிப் பதுங்குகிறோம். ஆனால், சுமித் (Smith, 2005)[20] போன்ற ஆய்வாளர்கள், mental representation என்பதே perception (புலனுணர்வு), action (செயல்) ஆகிய இரண்டும் கலந்த ஒரு மன இயக்கமே என்று கூறுகின்றனர். இதன் படி, நாம் வாழும் உலகத்தில் அரிமாக்கள் இல்லை என்றால், அது சார்பான mental representation எனப்படும் மன முறையீடுகளுக்கும் தேவை இருக்காது.

குழந்தைகள், நாம் வாழும் சூழலில் அவர்கள் வளர்வதாலேயே, நம்மைப் போலவே புலணர்வையும் செயல் திறன்களையும் வளர்த்துக் கொள்கின்றனர். வேறு சூழல்களில் ஒரு குழந்தை வளருமேயானால், அவர்களின் மன முறையீடுகள் வேறாக இருந்திருக்கும். ஒரு குழந்தை ஒரு பொருளைக் கையால் காட்டும்போது நாம் என்ன புரிந்து கொள்கிறோமோ அதையேதான் அக் குழந்தையும் புரிந்து கொள்கின்றது. இது குழந்தையின் மன வளர்ச்சியைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், இதைக் குமுகாய அறியும் ஆற்றல் (social cognition) நோக்கிய ஒரு குழந்தையின் வளர்ச்சி எனவும் சொல்லலாம். செயல்களைச் செய்யச் செய்ய, அந்தச் செயலைப் பற்றிய அறிவு மனத்தில் வளர்ச்சி அடைகின்றது. நாளடைவில் இது மற்றவர்களின் மன நிலையையும் புரிந்து கொள்ள உதவுகிறது.[21][22] மற்றவர்களின் மனதில் உள்ள ஒரு செயலைப் பற்றிய அறிவை, குழந்தைகள் எப்பொழுது புரிந்து கொள்கிறார்களோ அப்போதே அந்த செயலைச் செய்ய அணியமாகிவிடுகிறார்கள்.[23]

குமுகாயப் பண்பாட்டுக் கண்ணோட்டம்[தொகு]

குமுகாயப் பண்பாட்டுக் கண்ணோத்தின்படி, மற்ற மனிதர்களுடன் சேர்ந்து பழகும் போதும் ஒன்றுபட்டு செயல்கள் செய்யும் போதும் தான் ஒருவருடைய அறியும் ஆற்றல் வளர்ச்சி அடைகின்றது. ஒரு குழந்தை முதலில் ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, பின் அதே செயலைப் பயன்படுத்தியே மற்றவர்களுக்குத் தன் உள்நோக்கத்தையும் வெளிப் படுத்துகின்றது. எடுத்துக் காட்டாக, தன் கையைத் தூக்கி ஒரு பொருளைப் பற்றி இழுக்கும் குழந்தை, பின்னால் ஒரு பொருள் தனக்கு வேண்டுமென்னும் உள்நோக்கத்தை தன் கையைத் தூக்கிக் காட்டியே தெரிவிக்கின்றது. நாளடைவில், கையைத் தூக்கும் தன் செயல் தன்னுடைய உள்நோக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டும் என்றும் குழந்தை நம்புகின்றது.[24][25]

உற்று நோக்குதல், கவன ஈர்ப்புச் செயல்கள்[தொகு]

ஒருவரின் உள்நோக்கத்தை அறிவதற்கு அவர் என்னென்ன செயல்களை எந்தப் பொருள்களை வைத்துக்கொண்டு எப்படிச் செய்கிறார் என்று கண்டறிதல் இன்றியமையாதது. ஒரு சில நேரங்களில் அவருடைய கண் பார்வையும் கண் அசைவுகளும் அவர் உள்நோக்கம் என்ன என்பதை வெளிக் காட்டும்.[26] ஒருவர் ஒரு பொருளை உற்று நோக்குவதை வைத்து அவர் மனத்தில் என்ன உள்நோக்கம் இருக்கின்றது என்பதை அறிய இயலுமா என்று பல ஆய்வுகள் நடை பெறுகின்றன. குழந்தைகள், மற்றவர்கள் எதை உற்று நோக்குகிறார்கள், அவர்கள் முகம் எப்படித் திரும்பி எதைப் பார்க்கின்றது, என்பதை நன்கு கவனித்துப் பார்பவர்களாக இருக்கின்றனர். பதினைந்து மாதங்கள் நிரம்பிய குழந்தைகள் நம் பார்வையை வைத்து நாம் பொதுவாகப் பார்க்கிறோமா, அல்லது ஒரு பொருளின் மீது கவனம் செலுத்திப் பார்க்கிறோமா, அப்படிப் பார்த்தால் அந்த பார்க்கப்பட்டப் பொருள் எது, என்பனவற்றை அறியும் திறன் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.[27] அதாவது, பார்த்தல் என்ற செயலானது ஒருவரின் மன நிலையை, குறிப்பாக அவர் உள்நோக்கத்தைக் காட்டும் தன்மை உள்ளதாக இருக்கின்றது.

மெய்ப் புள்ளி அசைவு, உள்நோக்கம்[தொகு]

ஒருவர் அசையும் போது, அவர் உடல்(மெய்) மீது உள்ள ஒவ்வொரு புள்ளியும் அசைகின்றது. இந்தப் புள்ளிகளின் அசைவை biological motion அல்லது மெய்ப் புள்ளி அசைவு என்று கூறுவர். இந்தப் புள்ளிகளின் அசைவை வைத்து அவர் ஆணா அல்லது பெண்ணா, அவர் என்ன செய்கிறார் என்று ஓரளவுக்குச் சொல்ல முடியும். எடுத்துக் காட்டாக, ஒருவர் மீது ஒரு சில புள்ளிகளைத்(இடங்களைத்) தேர்ந்தெடுத்து , அவற்றின் மிகச் சிறிய (மின்) விளக்குகளைப் பொருத்தி, அவரை இருட்டறையில் நடக்க விட்டால், அவர் நம் கண்களுக்குத் தென்பட மாட்டார்; ஆனால், அவர் மீது பொருத்தப் பட்டுள்ள விளக்குகள் அசைவது மட்டும் தெரியும். ஒவ்வொரு விளக்கு அசைவதும் ஒரு புள்ளி அசைவது போன்று தெரியும். பத்து விளக்குகள் இருந்தால் பத்து வெள்ளைப் புள்ளிகள் அசைவது தெரியும். இந்தப் புள்ளிகளின் அசைவை வைத்து அவர் என்ன செய்கிறார் என்று மட்டுமல்ல, அவர் என்ன நினைக்கிறார் என்றும் ஓரளவுக்குச் சொல்ல முடியும். (குறிப்பு: மெய்ப் புள்ளி என்பது ஒரு உயிருள்ள மனிதன் அல்லது விலங்கில் இருந்து தோன்றிய புள்ளியாக இருக்க வேண்டும். ஒரு கல்லின் மீதோ, அல்லது ஒரு பாறையின் மீதோ தோன்றும் புள்ளிகள் மெய்ப் புள்ளிகள் ஆகா.)

ஒருவர் மெய்ப் புள்ளி அசைவுகளுக்கும் அவர் மனதில் அப்போது இருக்கும் உள்நோக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா என்று அறிய ஆய்வுகள் நடந்துள்ளன.[28] ஒரு சில ஆய்வுகளின் படி, நம் மூளையில் ஒரு சில பகுதியில் உள்ள நரம்பணுக்களின் (neuron) முழு நேர வேலையே மெய்ப் புள்ளிகளின் அசைவுக்கு ஏதேனும் பொருள் இருக்கின்றதா என்று கண்டறிவதே என்று கூறப் படுகின்றது.[29] ஒரு வேங்கைப் புலி எழுந்து நடக்கும் போது அதிலிருந்து வரும் மெய்ப் புள்ளிகளின் அசைவுக்குப் பொருள் என்ன?, ஊர்ந்து வரும் பாம்பின் மெய்ப் புள்ளி அசைவுகள் என்ன சொல்கின்றன?, என்பன எல்லாம் காட்டின் வாழும் ஒருவனுக்கு மிக இன்றியமையாததாக ஆகின்றது. பதினைந்து மாதக் குழந்தைகளை வைத்து ஒரு சில ஆய்வுகள் நடத்தப் பட்டன. இந்தக் குழந்தைகள் மெய்ப் புள்ளிகளைச் சரியாகக் கண்டு அறிகின்றனவா என்று காண, ஒருவர் ஒரு (கனமான) பொருளைக் குழந்தையின் எதிரில் வைத்து விட்டு அதைத் தன் கையால் எடுக்க முயல்வார். பொருள் கனமானதால், அவர் கையால் தூக்கி எடுக்க முடியாமல் போய் விடும். அந் நேரங்களில், அக் குழந்தை அந்தப் பொருளைத் தானும் தன் கையால் நீட்டி எடுக்க முயல்கிறது. ஆனால், இந்தச் சோதனையை (மெய்த் தேர்வு, experiment) ஒரு பொம்மைக் கையை (artificial hand) வைத்துச் செய்யும் போது, குழந்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கின்றது; தன் கையால் அந்தப் பொருளை நீட்டி எடுப்பது இல்லை.[30] இதிலிருந்து, குழந்தைகள் பொம்மைக் கையில் இருந்து வருவது மெய்ப் புள்ளிகள் ஆகா என்று தெளிவுள்ளவர்களாக இருக்கின்றன என்று கருதப் படுகின்றது.

ஒப்புச்செயலாக்கக் கோட்பாடு, உள்நோக்கம்[தொகு]

ஒருவர் மற்றவரின் உள்நோக்கத்தை எப்படிப் புரிந்து கொள்கிறார் என்று ஆராயும் போது அதில், அதில் கீழ்வரும் படிகள் இருப்பதாகக் கருதப் படுகின்றது:

 • மற்றவர் செய்யும் செயல்;
 • தான் அதே சூழலில் (சூழ் நிலை), "என்ன செயல் செய்வேன்" என்ற கணிப்பு; மற்றும்
 • தனக்கு அதே சூழலில் இருக்கும் உள்நோக்கம்.[31]

இதில், தனக்கு ஒரு சூழலில், என்ன உள்நோக்கம் இருக்கும் என்றறிந்து, பின் அந்த உள்நோக்கத்தின் படி "என்ன செயல் செய்வேன்" என்றும் உய்த்தறிவது ஒருவகையான ஒப்புச் செயலாக்கம் (simulation) என்று சொல்லலாம். நம் மூளையின் ஒரு பகுதியில் உள்ள நரம்பணுக்கள் இந்த ஒப்புச் செயலாக்க வேலையச் செய்கின்றன என்று ஆய்வுகள் [32] தெரிவிப்பதாகக் கருதப் படுகின்றது.

உசாத்துணை[தொகு]

 1. Bratman, M. (1987). Intention, Plans, and Practical Reason. Cambridge, MA: Harvard University Press.
 2. Astington, J.W. (1993). The child's discovery of the mind. Cambridge, MA: Harvard University Press.
 3. Perner, J. (1991). Understanding the representational mind. Cambridge, MA: Bradford Books/MIT Press.
 4. Blakemore, SJ; Decety, J (August 2001). "From the perception of action to the understanding of intention.". Nature reviews. Neuroscience 2 (8): 561–7. PubMed.
 5. Feinfield, Kristin A; Lee, Patti P; Flavell, Eleanor R; Green, Frances L; Flavell, John H (July 1999). "Young Children's Understanding of Intention". Cognitive Development 14 (3): 463–486. doi:10.1016/S0885-2014(99)00015-5
 6. Tomasello, M. (1999). "Having intentions, understanding intentions, and understanding communicative intentions". In Zelazo, P.D.; Astington, J.W.; Olson, D.R. Developing theories of intention: Social understanding and self-control. Mahwah, NJ: Lawrence Erlbaum Associates Publishers. pp. 63–75.
 7. Jenkins, J.; Greenbuam, R. (1991). "Intention and emotion in child psychopathology: Building cooperative plans". In Zelazo, P.D.; Astington, J.W.; Olson, D.R. Developing theories of intention: Social understanding and self-control. Mahwah, NJ: Lawrence Erlbaum Associates Publishers. pp. 269–291.
 8. Meltzoff, A.N. (1995). "Understanding the intentions of others: Re-enactment of intended acts by 18-month-old children". Developmental Psychology 31 (5): 838–850.
 9. Meltzoff, A.N.; Brooks, R. (2001). ""Like me" as a building block for understanding other minds: Bodily acts, attention, and intention". In Malle, B.F.; Moses, L.J.; Baldwin, D.A. Intentions and intentionality: Foundations of social cognition. Cambridge, MA: MIT Press. pp. 171–191.
 10. Lee, E.A. (1996). "Young children's representational understanding of intention". Dissertation Abstracts International: Section B: The Sciences and Engineering 56 (12-B).
 11. Searle, J.R. (1983). Intentionality: An essay in the philosophy of mind. Cambridge, England: Cambridge University Press.
 12. Astington, J.W. (1993). The child's discovery of the mind. Cambridge, MA: Harvard University Press.
 13. Liszkowski, Ulf; Carpenter, Malinda; Tomasello, Michael (March 2007). "Pointing out new news, old news, and absent referents at 12 months of age". Developmental Science 10 (2): F1–F7. doi:10.1111/j.1467-7687.2006.00552.x.
 14. Woodward, Amanda L.; Guajardo, Jose J. (January 2002). "Infants’ understanding of the point gesture as an object-directed action". Cognitive Development 17 (1): 1061–1084. doi:10.1016/S0885-2014(02)00074-6.
 15. Leung, Eleanor H.; Rheingold, Harriet L. (1981). "Development of pointing as a social gesture.". Developmental Psychology 17 (2): 215–220. doi:10.1037/0012-1649.17.2.215.
 16. Moll, H.; Tomasello, M. (2007). "Cooperation and human cognition: the Vygotskian intelligence hypothesis". In Emery, N.; Clayton, N.; Frith, C. Social intelligence: From brain to culture. pp. 245–260.
 17. Schaffer, H.R. (2005). The child's entry into a social world. London: Academic Press.
 18. Liszkowski, Ulf; Carpenter, Malinda; Henning, Anne; Striano, Tricia; Tomasello, Michael (2004). "Twelve-month-olds point to share attention and interest". Developmental Science 7 (3): 297–307. doi:10.1111/j.1467-7687.2004.00349.x.
 19. Barresi, John; Moore, Chris (2010). "Intentional relations and social understanding". Behavioral and Brain Sciences 19 (01): 107–154. doi:10.1017/S0140525X00041790.
 20. Smith, Linda B. (2005). "Cognition as a dynamic system: Principles from embodiment". Developmental Review 25 (3-4): 278–298. doi:10.1016/j.dr.2005.11.001.
 21. Barresi, John; Moore, Chris (2010). "Intentional relations and social understanding". Behavioral and Brain Sciences 19 (01): 107–154. doi:10.1017/S0140525X00041790.
 22. Gerson, S.; Woodward, A. (2010). "Building Intentional Action Knowledge with One’s Hands". In Johnson, S.P. Neoconstructivism: The New Science of Cognitive Development. Oxford: Oxford University Press. ISBN 978-0-19-986407-2.
 23. Woodward, Amanda L.; Guajardo, Jose J. (January 2002). "Infants’ understanding of the point gesture as an object-directed action". Cognitive Development 17 (1): 1061–1084. doi:10.1016/S0885-2014(02)00074-6.
 24. Vygotsky, L.S. (1978). Cole, M.; John-Steiner, V.; Scribner, S. et al., eds. Mind in society: The development of higher psychological processes. Oxford, England: Harvard University Press. ISBN 0-674-57628-4.
 25. Vygotsky, L.S. (1978). Cole, M.; John-Steiner, V.; Scribner, S. et al., eds. Mind in society: The development of higher psychological processes. Oxford, England: Harvard University Press. ISBN 0-674-57628-4.
 26. Meltzoff, A.N.; Brooks, R. (2001). ""Like me" as a building block for understanding other minds: Bodily acts, attention, and intention". In Malle, B.F.; Moses, L.J.; Baldwin, D.A. Intentions and intentionality: Foundations of social cognition. Cambridge, MA: MIT Press. pp. 171–191.
 27. Brooks, R. (1991). Infant understanding of seeing as a referential event. UMI Dissertations Publishing. ISBN 0-599-23566-7.
 28. Blakemore, SJ; Decety, J (2001). "From the perception of action to the understanding of intention.". Nature reviews. Neuroscience 2 (8): 561–7. PubMed.
 29. Oram, MW; Perrett, DI (1994). "Responses of Anterior Superior Temporal Polysensory (STPa) Neurons to "Biological Motion" Stimuli.". Journal of cognitive neuroscience 6 (2): 99–116. PubMed.
 30. Meltzoff, A. N. (1995). "Understanding the intentions of others: Re-enactment of intended acts by 18-month-old children.". Developmental Psychology 31 (5): 838–850. doi:10.1037/0012-1649.31.5.838.
 31. Blakemore, SJ; Decety, J (2001). "From the perception of action to the understanding of intention.". Nature reviews. Neuroscience 2 (8): 561–7. PubMed.
 32. Gallese, V (1998). "Mirror neurons and the simulation theory of mind-reading". Trends in Cognitive Sciences 2 (12): 493–501.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்நோக்கம்&oldid=2696232" இலிருந்து மீள்விக்கப்பட்டது