உளவியல் ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்றி சித்ஞ்விக்கு(Henry Sidgwick), 1894[1][2][3]

உளவியல் ஆய்வு (psychological research) என்பது தனி மனிதர் அல்லது குழுக்களின் அனுபவங்கள், மற்றும் நடத்தைகளை உளவியலாளர்கள் பகுப்பாய்ந்து நடத்தும் ஆய்வுகளைக் குறிக்கும்.

ஆய்வு என்பது மெய்மையினைக் கண்டறியும் புலமைசார் பயிற்சியாகக் காணப்படுகிறது. மனித நடத்தைகளைப் பாதிக்கின்ற பல்வேறு காரணிகளையும் ஆராய்ந்து ஒவ்வொன்றாக தனிமைப்படுத்துவதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் எந்த ஒன்று இல்லாத போது அல்லது எந்தக் காரணி செயற்படும்போது மனித நடத்தை மாறுபடுகின்றது என்பதனை சமூக உளவியளாளர்கள் கண்டறிகின்றார்கள்.

வேறுபாடு[தொகு]

மனிதனுடைய உள்ளத்தைப் பற்றியும், உடலைப் பற்றியும் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ள, பல அறிவியல் கொள்கைகள் (Hypotheses) இருக்கின்றன. அவற்றைக் கொண்டு விளக்கமுடியாத, மனித மனநிகழ்ச்சிகளை, ஒழுங்கான முறையில் ஆராய முயல்வதே உளவியல் ஆராய்ச்சியாகும். இந்த ஆராய்ச்சி வேறு, பிரமஞானம் (Theosophy), மறை பொருட் கொள்கை (Occultism), ஆவிக் கொள்கை (Spiritualism) என்பவை வேறு.

பிரமஞானம் என்பது சகல மதங்களிலும் பொதுவாகக் கானாப் பெறும் நம்பிக்கைகளை இணைத்து உண்டாக்கிய ஒரு மதக் கொள்கையாகும். மறைபொருட் கொள்கை என்பது உள்ளத்தின் உன்னத ஆற்றல்களை அடைவதற்கான கொள்கையும் பயிற்சியுமாகும். யோகத்தின் ஓர் அமிசம் இப்பயிற்சியுடன் தொடர்புடையது. ஆவிக் கொள்கை, என்பது இறந்தவருடைய ஆவியுடன் தொடர்பு ஏற்படுத்துவது பற்றிய கொள்கை யாகும். ஆதலால், உள விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நிறுவப் பெறும் கழகத்தின் உறுப்பினர்கள் சில கற்பிதக் கொள்கைகளைச் சில சமயங்களில் தாற்காலிகமாகக் கூறிய போதிலும், கழகம் எந்தவிதமான கருத்துக்களையும் முடிவுகளையும் கூறுவதில்லை. ஆராய்ச்சியின் நோக்கமெல்லாம் இயன்ற வரை உண்மையைக் காண முயல்வதேயாகும். ஆராயும் பொருள்களைக் குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து ஒற்றுமை காணப் பட வில்லை. முற்றிலும் விஞ்ஞான முறையில் ஆராய வேண்டியது அவசியம் என்பதை, எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அனுபவ முறையற்ற வெறுங் கருத்துக்களால் பயனில்லை. ஆராய்ச்சியில் கிடைக்கும் தகவல்கள், அறிவியல், மெய்யியல், சமயம் ஆகியவற்றின் தத்துவங்கள் பலவற்றை விளக்கப் பயன் பட வாய்ப்புள்ளது.

உளவியல் முறைகள்[தொகு]

உளவியலாளர்கள் ஆய்வுகளை கல்வி, தொழில், பிணி சார்ந்த உளவியல் ஆய்வுகளாக வகைப்படுத்தலாம். ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் ஆராயும் நிகழ்ச்சிகளை 'மன நிகழ்ச்சிகள்' என்றும், 'உடலியல் நிகழ்ச்சிகள்' என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பர். மனநிகழ்ச்சிகளில் முக்கியமானவை : 1. மனமும், மனமும் பேசுதல் என்னும் தொலையுணர்வு (Telepathy), 2. கண்ணுக்குத் தெரியாததைக் காணுதல் என்னும் தொலைக்காட்சி (Clairvoyance), 3. நடக்கப் போவதை அறிவு மூலமாகவன்றி அறிதல், 4. பொருள்களின் தன்மைகளைச் சாதாரணமாக அறியும் வழிகளாலன்றி அறிதல் (Psychometry), 5. இறந்தோருடன் பேசுதல் ஆகியவற்றைச் சொல்லலாம்.

'உடலியல் நிகழ்ச்சிகள்' : உடலியல் நிகழ்ச்சிகளில் முக்கியமானவை வருமாறு: 1. சடப்பொருள்கள் தாமாகவே இயங்குதல் (Telekinesis), 2. மனித உடல் தாங்குவதற்கு ஆதாரம் இல்லாமலே உயர்ந்து நிற்றல் (Levitation), 3. இறந்தோருடன் பேசப்பயன்படும் 'இடைநிலையினர்' (Mediums), 4. உடலிலிருந்து வரும் பிளாஸ்மா(plasma) என்னும் பொருளைக்கொண்டு உயிர்ப் பொருள்கள் உண்டாக்குதல், 5. ஆவிகளிடமிருந்து வரும் ஆகாசவாணி, 6. எண்ணங்களைப் படம் பிடித்தல், 7. மனத்தைக்கொண்டே சிகிச்சை செய்தல் என்பனவற்றைக் கூறலாம்.

சமூக உளவியல் ஆய்வு[தொகு]

உளவியல் முறைகளானவை பொதுஅறிவு, அனுபவஅறிவு, போன்றவற்றில் உள்ள குறைகளைக் களையவே தோற்றம் பெற்றன. உளவியல் ஏனைய சமூக அறிவியல் ஆய்வு முறைகளுடன் தனது ஆய்வு முறைகளைப் பயன்படுத்துகின்றது. சமூக உளவியல் ஆய்வுகளில் பயன்படுத்தும் ஆய்வு முறைகளாக,

  • அகநோக்கு முறை
  • உற்றுநோக்கல் முறை
  • நேர்காணல் முறை
  • பரிசோதனை முறை
  • தனியாள் வரலாற்று ஆய்வு
  • வினாக்கொத்து முறை
  • வருத்தி முறை போன்றனவாகும்.

ஆய்வின் வளர்ச்சி[தொகு]

மனநிகழ்ச்சிகளை ஆராய்வதற்காகவே 'பிரிட்டிஷ் உள விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம்' என்ற பெயரால் 1882-இல் இங்கிலாந்தில் ஒரு கழகம் நிறுவினர்.[4] இந்தக் கழகம் ஏற்படுமுன்னரே குருக்ஸ்', வால்லிஸ், ஜோல்னர் போன்ற பிரபல விஞ்ஞானிகள் இத்தகைய ஆராய்ச்சிகளை செய்தனர். கழகமானது, மனமும் மனமும் பேசுதல் என்பதை ஆராய்வதிலேயே முனைந்தது. தொலையுணர்வு என்னும் இந்நிகழ்ச்சிக்கு, பல விதமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு மனம், மற்றொரு மனத்தில் உள்ள கருத்தை அறிந்துகொள்ளச் சாதாரணமாகப் பயன்படுத்தும் பொறிகளாகிய வழிகளையன்றி, வேறு வழிகளில் அறிந்து கொள்ளுதல் தொலையுணர்வாகும் என்று அதைப் பற்றிய நூல்கள் கூறுகின்றன.

பொதுமக்களோ, 'ஆறாம் அறிவு', 'மூளை அலைகள்', 'மன அலைவரிசை' என்று இதைப் பலவாறாகக் கூறுகின்றனர். மூளையிலிருந்து ஏதேனும் வெளிவருவதாக இருக்கலாம். ஆனால், அதற்கும், ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிகழ்ச்சிக்கும், சம்பந்தம் கிடையாது. அலைகளானால் தூரம் அதிகமாகும் பொழுது, அவற்றின் விளைவு குறையவேண்டும் என்பது இயற்பயில் கோட்பாடு ஆகும். ஆனால் மைல்ஸ், ராம்ஸ்டென், அஷர், பர்ட், அப்ட்டன் சின்கிலேர், வார் கால்லியர் போன்றவர்கள் நிகழ்த்திய ஆராய்ச்சிகளில் அத்தகைய அலை இயல்பு எதுவும் காணப்படவில்லை.

'சிக்கலான கருத்துக்கள், ஒரு மனத்திலிருந்து, மற்றொரு மனத்துக்குச் செல்வது கம்பியில்லாத தந்தி அலைகள் செல்வது போன்றது என்று கூறுவதற்குப் போதிய ஆதாரமில்லை' என்று டாக்டர் ருடால்ப் டிஷ்னரும், அறிஞர் ஹான்ஸ் டிரிஷும் தங்கள் நூல்களில் விளக்கியுளர். போரல் என்பவர் கூறும், 'எலக்ட்ரான் வெளியேற்றக் கொள்கை'யும் பொருத்தமானதாக இல்லை.

மேற்கூறிய ஆராய்ச்சிக் கழகம் இது விஷயமாக எண்ணற்ற கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. சிட்ஜ்விக், பால்பர், வில்லியம் ஜேம்ஸ், பெர்க்சன், பிளா மெரியன், ராலி பிரபு, பேராசிரியர் பிராய்டு போன்ற பேரறிஞர் அக்கழகத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர். ஆயினும் அறிஞர் உலக ஐயப்பாடு இன்றும் நீங்கி விடவில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், இந்த ஆய்வுகளைக் குறித்த அமைப்புகள், இடைவிடாமல் ஆராய்ச்சிகள் செய்துவந்த போதிலும், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும், இத்தகைய ஆராய்ச்சிகளை ஆதரிப்பதில்லை. மனவியல்ஆராய்ச்சிக் கழகம், தனது பதிப்புகளின் வழியே, தனது ஆய்வுகளை, தொடர்ந்து பல்லாண்டுகளாகப் பதிய வைக்கிறது. (Proceedings of the Society for Psychical Research, the Journal of the Society for Psychical Research, and the Paranormal Review, as well as the online Psi Encyclopedia.) [5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schultz, Bart. (2004). Henry Sidgwick: Eye of the Universe: An Intellectual Biography. Cambridge University Press. p. 276. ISBN 978-0521829670
  2. McCorristine, Shane. (2010). Spectres of the Self: Thinking about Ghosts and Ghost-Seeing in England, 1750–1920. Cambridge University Press. p. 110. ISBN 978-0521747967
  3. Alan Gauld, The Founders of Psychical Research (London: Routledge & Kegan Paul, 1968), p. 138.
  4. "SPR website". spr.ac.uk. Archived from the original on 17 பெப்பிரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2018.
  5. https://www.spr.ac.uk/publications/journal-society-psychical-research பரணிடப்பட்டது 2018-02-24 at the வந்தவழி இயந்திரம், accessed 19 October 2017.
  6. https://www.spr.ac.uk/publications/paranormal-review பரணிடப்பட்டது 2016-11-10 at the வந்தவழி இயந்திரம், accessed 19 October 2017.
  7. https://www.spr.ac.uk/publications/psi-encyclopedia பரணிடப்பட்டது 2016-11-11 at the வந்தவழி இயந்திரம், accessed 19 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளவியல்_ஆய்வு&oldid=3343730" இலிருந்து மீள்விக்கப்பட்டது