உலோச்சனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலோச்சனார் சங்க கால சமணப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 35 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் மூன்று. பிற அகத்திணைப் பாடல்கள். பாடல் தொகை வரிசையில் இவருக்கு11ஆம் இடம்

புறத்திணைப் பாடல்கள்[தொகு]

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி [1]

உலோச்சனார் தன் கிணையை முழக்கிக்கொண்டு சென்றபோது இந்தச் சோழன் புலவரைத் தானே அழைத்துச் சென்று பொன்னும் மணியும் முத்தும் பரிசில்களாக வழங்கினான். பருகத் தசும்பு \சுவைநீர் நல்கினான். அதனால் புலவர் கிள்ளியை வாழ்த்தினார்.

அறநெஞ்சத்தோன்
பிறர்க்கு உவமம் தான் அல்லது தனக்கு உவமம் பிறர் இல்லாதவன்

எனப் புகழ்ந்துள்ளார்

உண்டாட்டுத் துறைப் பாடல் [2]
காரைப்பழம் தின்ற காளை ஒருவன் கை ஈரம் காயுமுன் போருக்கு எழுந்துவிட்டான். அவனோடு உண்டு மகிழுங்கள் – என்கின்றனர் மக்கள்
எருமை மறம் என்னும் துறைப்பாடல் [3]
நீலக் கச்சை, பூவார் ஆடை, பீலிக் கண்ணி கொண்ட மறவன் போரிடுகையில் தன் கையிலிருந்த வேலை பகைவர் யானைமீது பாய்ச்சிவிட்டு, பகைவர் வாளைத் தன் செஞ்சில் தாங்கிப் போராடுகிறானே என மக்கள் வியக்கின்றர்.

அகத்திணைப் பாடல்கள்[தொகு]

இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் 32-ல் 31 பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்கள். ஒன்றுமட்டும் குறிஞ்சித்திணை. அவற்றில் கூறப்படும் செய்திகளில் சில

பழக்க வழக்கம்
 • நன்னான்கு (8 அல்லது 16) குதிரை பூட்டிய தேரில் ஒருவன் சென்றான்.[4]
 • மூக்கின் உச்சியில் விரல் வைத்துக்கொண்டு தலைவியின் கள்ளக்காதல் பற்றிப் பேசுவர் [5]
 • குறிஞ்சிக் குறவர் மரத்தில் உரித்த நாரால் செய்த ஆடை உடுத்தியிருப்பர்.[6]
விளையாட்டு
 • பரதவர் மகளிர் தம் வீட்டில் இருந்துகொண்டு இரவில் கழியில் மீன் பிடிக்கும் திமில் விளக்குகளை எண்ணுவர்.[7]
 • உப்புக்குவியல் முகட்டில் ஏறி நின்றுகொண்டு மகளிர் திமில் விளக்குகளை எண்ணுவர்.[8]
 • ஓரை விளையாடிய மகளிர் நீர் வடியும் கூந்தலோடு மாலையில் வீடு திரும்புவர்.[9]
 • மகளிர் வளையலை ஆட்டியும், சிலம்பு ஒலிக்க நடந்தும் நண்டோடு விளையாடுவர் [10]
 • நுளையர் மகளிர் விளையாட்டுகள் [11]
காயும் மீனைக் கவரும் பறவைகளை ஓட்டல்
புன்னை மர நிழலில் நடை பயிலல்
நண்டு வளையைக் கிண்டி விளையாடுதல்
ஞாழல் மரத்தில் தாழைநார்க்கயிற்று ஊசல் கட்டி ஆடுதல்
மணலில் வீடு கட்டிக்கொண்டு குரவை ஆடுதல்
கடலாடுதல்
தழையாடை செய்து உடுத்திக்கொள்ளுதல்
 • குதிரைப் பந்து – “பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவ” [12]
வரலாற்றுச் செய்திகள்
 • நற்றேர்ப் பெரியன் என்பவன் புறந்தை அரசன்.[13]
 • பொறையாறு என்னும் நிலப்பகுதியைப் பெரியன் என்பவன் ஆண்டுவந்தான்.[14]
உவமை
 • சூடாத மாலை போல அவள் வாடிப்போனாள்.[15]

அரிய தொடர்கள்[தொகு]

 • ”கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு” [16]
 • ”உவர்விளை உப்பின் உழா உழவர்” [17]
 • ”இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்” [18]
 • ”வானம் வேண்டா விழவின் எம் கானல்” [19]
 • ”தணப்பு அருங் காமம் தண்டியோர்” [20]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. புறம் 377
 2. புறம் 258
 3. புறம் 274
 4. அகம் 400
 5. நற்றிணை 149
 6. நற்றிணை 64
 7. நற்றிணை 392
 8. அகம் 190
 9. நற்றிணை 398
 10. நற்றிணை 363
 11. அகம் 20
 12. நற்றிணை 249
 13. அகம் 100
 14. நற்றிணை 131
 15. நற்றிணை 11
 16. நற்றிணை 354
 17. நற்றிணை 331
 18. நற்றிணை 311
 19. நற்றிணை 284
 20. குறுந்தொகை 177
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோச்சனார்&oldid=3329325" இருந்து மீள்விக்கப்பட்டது