உலர் மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயற்கையாக கிடைக்கும் மலர்களை உலரவைத்து உலர் மலர்கள் தயாரிக்கப்படுகின்றன. நீண்ட காலம் வாடாமல் இருக்கும் இந்த மலர்கள் அலங்காரத்திற்கும், பரிசளிக்கவும் பயன்படுகின்றன. இந்த மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், உள்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கோவை, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் உலர் மலர் கண்காட்சிகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

உலர் மலர் தயாரிப்பு முறை[தொகு]

உலர் மலர்களையும், உலர் இலைகளையும் தயாரிக்க நல்ல சூரியவெளிச்சம் நிலவும் நாட்களில் செடியின் மீதுள்ள காலைப்பனி நீங்கிய பின்னர் சேகரிக்க வேண்டும். அறுவடை செய்த பின்னரும் மலர்களில் பனி நீர்த்துளிகள் காணப்பட்டால் அவற்றை உறிஞ்சும் காகிதம் கொண்டு ஒற்றி அகற்றிவிட வேண்டும். நீர் பாய்ச்சிய உடன் மலர்களைப் பறிக்காமல் நீர்பாய்ச்சி ஓரிரு நாட்கள் கழித்து, பின்னரே செடிகளிலிருந்து மலர்களைப் பறிக்க வேண்டும்.

உலர் மலர் அலங்காரம்

நிறம் வெளிறாமல் புதிதாக மலர்ந்த மலர்களைத் தேவையான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்தவுடன் காலந்தாழ்த்தாமல் உலர்த்த வேண்டும். இல்லாவிடில் இதழ்கள் வாடி தேவையான மலர் வடிவத்தினை இழந்துவிடும். உலர்த்தும் முன்னர் தேவையற்ற பாகங்களை வெட்டி அகற்றிவிட வேண்டும். அவற்றை காகிதங்களுக்கிடையில் வைத்து அதன் உருவ அமைப்பு போன்றே அழுத்தி வைக்க வேண்டும். உறிஞ்சும் காகிதங்களுக்கு இடையிலோ அல்லது உலர் கலன்களில் செயற்கையாக பராமரிக்கப்படும் வெப்பத்திலோ மலர்களை உலர்த்தலாம்.

மலர் வகைகளுக்கேற்றவாறு உலர்த்தும் வெப்பநிலையும் உலர்த்தும் காலமும் மாறுபடுகிறது. எனவே மலர் வகைகளைத் தனித்தனியே உலர்த்த வேண்டும்.கெலிகிரைசம், லிம்மோனியம் போன்ற மலர்களைத் தலைகீழாக கட்டி விடுவதன் மூலம் காற்றில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்துவதால் இம்மலர்கள் தங்கள் புத்தம் புதுத் தன்மையில் இருந்து மாற்றங்களையும் அடைவதில்லை.இலைகளையும் மலர்களையும் வெள்ளை மணல், சிலிக்கா ஜெல், போராக்ஸ் போன்றவை அடங்கிய உலோக, பிளாஸ்டிக் அல்லது மண் கலன்களில் வைத்துஅறை வெப்ப நிலையிலேயே உலர்த்தலாம். இம்முறையில் உலர்த்தும்போது மலர்கள் உலர நீண்டநாட்கள் எடுத்துக்கொள்ளும்.

உலர் ஊடகத்தில் வைக்கப்பட்ட மலர்களை தினமும் சூரிய ஒளியில் உலர வைப்பதன் மூலம் மலர்கள் விரைவில் உலர்ந்துவிடும். மின்சாரம் மூலம் வெப்பப்படுத்தப் படும் ஓவன்களிலும் மலர்களை மிக விரைவாக உலர்த்தலாம். இம்முறையில் உலர்த்த ஒவ்வொரு வகை மலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படும். உதாரணமாக ரோஜா மலர்களை 40-45 டிகிரி செ. வெப்பநிலையில் 48 மணி நேரம் வைப்பதன் மூலம் உலர்த்தலாம். ஆனால் கிளாடியோலஸ் மலர்கள் இந்த வெப்பநிலையில் உலர 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். [1]

உலர் மலர்களின் பயன்பாடுகள்[தொகு]

  1. அறை, அலுவலகங்கள் அலங்காரத்திற்கு பயன்படுகின்றன.
  2. கைவினைக் காகிதம், பெட்டிகள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள், சணல் பை, அலங்கார புகைப்படம் மற்றும் பலவிதமான பரிசுப் பொருட்கள் என பலவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

வகைகள்[தொகு]

கோழிக் கொண்டை, மல்லிகை கீரை வகைகள், பாக்கு(கமுகு) மற்றும் தென்னை இலைகள், வெட்டப்பட்ட மலர்கள் அனைத்தும் உலர் மலர்கள் வகையை சார்ந்ததாகும். இந்த மலர்களுடன் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவையும் அழகிற்காக சேர்க்கப் படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

{{}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலர்_மலர்&oldid=1542873" இருந்து மீள்விக்கப்பட்டது