உலக வாகைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் நிகழ்வு 1886 ஆம் ஆண்டில் உலகின் இரண்டு முன்னணி வீரர்களான வில்கெம் இசுட்டைனிட்சு, யொகான்னசு சூக்கர்டோர்ட் ஆகியோருக்கிடையேயான போட்டியாகும். இசுட்டைனிட்சு வெற்றி பெற்று முதல் உலக வாகையாளரானார்.[1] 1886 முதல் 1946 வரை, வாகையாளர் தேவையான விதிமுறைகளை அமைத்து, புதிய உலக வாகையாளராவதற்கு எந்தவொரு சவாலிலும் கணிசமான பங்களிப்புகளை உயர்த்தி, இறுதிப் போட்டியில் வாகையாளரைத் தோற்கடிக்க வேண்டும்.[2] 1946-இல் அன்றைய உலக வாகையாளரான அலெக்சாண்டர் அலேகின் இறந்ததைத் தொடர்ந்து, பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (பிடே) உலக வாகையாளருக்கான நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. இது 1948 உலக வாகையாளர் போட்டியுடன் தொடங்கியது.[3] 1948 முதல் 1993 வரை, பிடே அமைப்பு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு புதிய போட்டியாளரைத் தேர்வு செய்ய போட்டிகளின் தொகுப்பை ஏற்பாடு செய்தது. 1993-ஆம் ஆண்டில், நடப்பு சாம்பியனான காரி காஸ்பரொவ் பிடே-யில் இருந்து பிரிந்தார். உலக வாகைப் பட்டத்திற்குப் போட்டியாக காசுபரோவ் "தொழில்முறை சதுரங்க சங்கத்தை" (PCA) தொடங்கி அடுத்த 13 ஆண்டுகளுக்கு அச்சங்கத்தின் மூலமாக ஒரு "போட்டி வாகையாளர்" தெரிவானார். இறுதியில் 2006 ஆம் ஆண்டில் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு அடுத்தடுத்த போட்டிகள் பிடே-ஆல் நடத்தப்பட்டு வருகின்றன.
2014 முதல், வாகைப் போட்டிகள் இரண்டு ஆண்டு சுழற்சியில் நிலைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020, 2022 போட்டிகள் முறையே 2021, 2023 க்கு ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டன.[4] அடுத்த போட்டி வழக்கமான அட்டவணைப்படி 2024 நவம்பரில் நடைபெறும்.
உலக வாகைப் போட்டிகளில் அனைத்து வீரர்களும் பங்குபற்றக் கூடியதாக இருந்தாலும், பெண்கள், 20 வயதுக்குட்பட்டவர்கள், குறைந்த வயதுக் குழுக்கள், மூத்தவர்கள் ஆகியோருக்குத் தனித்தனி வாகைப் போட்டிகள் உள்ளன. விரைவு, மின்னல், கணினி சதுரங்கம் ஆகியவற்றிலும் உலக சதுரங்க வாகைப் போட்டிகள் நடைபெறுகின்றன.