உலகளந்த பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகளந்த பெருமாள் கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°59′49″N 77°01′50″E / 10.996833°N 77.030472°E / 10.996833; 77.030472
பெயர்
புராண பெயர்(கள்):அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்
பெயர்:உலகளந்த பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:சிங்காநல்லூர்
மாவட்டம்:கோயம்புத்தூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உலகளந்த பெருமாள்[1]
உற்சவர்:உலகளந்த பெருமாள்
உற்சவர் தாயார்:ஸ்ரீ தேவி, பூதேவி
தல விருட்சம்:வன்னிமரம்
ஆகமம்:பஞ்சராத்ரம் முறை
சிறப்பு திருவிழாக்கள்:ஸ்ரீ வாமன ஜெயந்தி, (திரு)ஓணம் பண்டிகை, மார்கழி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, நவராத்திரி திருவிழா, புரட்டாசி சனிக்கிழமைகள் சிறப்பு பூஜைகள்.
வரலாறு
தொன்மை:180 ஆண்டுகள்
அமைத்தவர்:கரிகால் சோழன்
வலைதளம்:hrce.tn.gov.in
தொலைபேசி எண்:+91 422 2595281

சிங்காநல்லூர் அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் அல்லது அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்[2] இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் ஊரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் காணத்தக்க வழிபாட்டுத் தலங்களில் இக்கோயிலும் ஒன்று. கோவையில் அமைந்துள்ள ஒரே (வைணவ) திவ்யதேசம் இத்திருக்கோயில். 'ஸ்ரீ த்ரி விக்கிரமநாராயண சுவாமி திருக்கோயில்' என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. 180 ஆண்டுகளுக்கு பழமையான கோயில் இது.[3] கரிகால் சோழன் மன்னரால் கட்டப்பட்டது. போர் சம்பந்தமாக கரூர் வந்த கரிகால் சோழ மன்னன், கோயம்புத்தூருக்கு வெள்ளலூர் வந்த போது, அருகிலுள்ள சிங்காநல்லூர் ஊரிலுள்ள மக்களின் நலன் கருதி, சிங்காநல்லூர் பகுதியை அவர்களுக்குச் சாசனம் செய்து விட்டு, இக்கோயிலையும் நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது. அது சம்பந்தமான குறிப்புகள் மூலவர் விக்கிரகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மூலவர் உலகளந்த பெருமாள் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டு வடக்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மிகச் சிறப்பானது. மேலும், உற்சவர் உலகளந்த பெருமாள் பஞ்சலோகத்தால் (ஐம்பொன்னால்) உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், உற்சவர் தாயார்கள் ஸ்ரீ தேவி, பூதேவி உடனமைகின்றனர்.

மூலவர் சிறப்பு[தொகு]

மூலவர் உலகளந்த பெருமாள், வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை விண்ணை நோக்கி அருள்பாலிக்கிறார். எட்டு கைகளுடன் காட்சியளிக்கும் மூலவர், இரு கைகள் அபய முத்திரைகளுடனும், மற்ற ஆறு கைகள் ஒவ்வொன்றும் முறையே சக்கரம், கதை, அம்பராத்தூணி, வில், கேடயம், பிரயோகச் சக்கரம் ஆகியவை கொண்டு அபயம் அளிக்கும் வகையிலும் தோற்றமளிக்கிறார்.

கோயில் வரலாறு[தொகு]

பூமியில் மன்னர் மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவம் கொண்டு, யாகம் வளர்த்து தானம் செய்த போது, அவரது ஆணவத்தை அகற்ற, வாமனர் (இளங்கலை பிராமணர்) அவதாரம் தரித்த மகாவிஷ்ணு, அவரிடம் தானமாக உலகில் மூன்று அடிகள் கேட்க, தன்னிடம் தானம் கேட்க வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை அறியாத மகாபலிச் சக்கரவர்த்தி, தானமாக மூன்று அடிகளை அளந்து எடுத்துக் கொள்ளுமாறு பணிக்க, அவ்வாறே மகாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் கொண்டு, முதல் படிநிலை கொண்டு பூவுலகம் முழுமையும், இரண்டாம் படிநிலை கொண்டு விண்ணுலகம் முழுமையும் ஆட்கொண்டு, மூன்றாவது படிநிலைக்கான இடத்தை மகாபலியிடம் வினவ, தன் தவறை அப்போதுதான் உணர்ந்த மகாபலி, மகாவிஷ்ணுவிடம் தன் தலைமேல் மூன்றாவது அடியை வைக்கப் பணித்து, அதனால் பாதாளம் நோக்கி வீழ்ந்தார் என்பது புராணம். மண்ணுக்கும் விண்ணுக்கும் கால்களை நோக்கிய கோலத்தில் உலகளந்த பெருமாள் ஆகவும், மகாபலிச் சக்கரவர்த்திக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்து மூவுலகம் ஆட்சி புரியும் த்ரி விக்கிரமநாராயண சுவாமி ஆகவும் அருள்பாலிக்கும் இடமே சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இத்திருத்தலம்.

கோயில் திருவிழாக்கள்[தொகு]

இக்கோயிலில், ஸ்ரீ வாமன ஜெயந்தி, (திரு) ஓணம் பண்டிகை, மார்கழி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, நவராத்திரி திருவிழா, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் சிறப்புப் பூஜைகள் ஆகியவை முக்கியத் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

முக்கிய சன்னதிகள்[தொகு]

மகாலட்சுமி, இராமானுஜர், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் மற்றும் பிரசன்ன விநாயகர் சன்னதிகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றில், பிரசன்ன விநாயகர் சன்னதி மட்டும் கிழக்குத் திசை நோக்கியும், மற்ற சன்னதிகள் அனைத்தும் வடக்குத் திசை நோக்கியும் அமைந்துள்ளன என்பது இன்னுமொரு சிறப்பு.

நுழைவாயில்[தொகு]

இராஜகோபுரம் கம்பீரமாக் காட்சி தருவதுடன், மிகப் பெரிய அளவிலான சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் இருவரும் வாயிற்காப்போர்களாகக் காட்சி தருகின்றனர்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் நகரில், அங்கிருந்து வெள்ளலூர் நகருக்குச் செல்லும் வழியில், சுமார் அரை கி.மீ. தூரத்தில் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் புவியியல் ஆள்கூறுகள்: 10.996839°N 77.030460°E (10°59'48.6"N 77°01'49.7"E). கடல் மட்டத்திலிருந்து சுமார் 414 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ்[4] திருக்கோயில் எண் [TM010002] கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அருகிலுள்ள நகர, ஊர்கள்[தொகு]

சிங்காநல்லூர், கோயம்புத்தூர், வெள்ளலூர், ஒண்டிப்புதூர், இராமநாதபுரம், இருகூர், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு.

சாலைப் போக்குவரத்து[தொகு]

கோவை - திருச்சி நெடுஞ்சாலை, வெள்ளலூர் சாலை, பெருமாள் கோயில் தெரு ஆகியவை அருகிலுள்ள முக்கிய சாலைகள்.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

விமானப் போக்குவரத்து[தொகு]

அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் சூலூர் நகரில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Temples Search". Hindu Religious & Charitable Endowments Department, Government of Tamil Nadu.
  2. "Tamilnadu Temple". Dinamalar.
  3. Correspondent, Anudinam (2013-09-03). "Brahmotsavam at Singanallur Sri Ulagalanda Perumal Thirukkoil". Anudinam.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-01-24. பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  4. "Temple search". Hindu Religious & Charitable Endowments Department, Government of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகளந்த_பெருமாள்_கோயில்&oldid=3630949" இலிருந்து மீள்விக்கப்பட்டது