உலகத் துடுப்பாட்டத் தொடர்
| நிர்வாகி(கள்) | கெர்ரி பேக்கர் |
|---|---|
| வடிவம் | பல்வேறு |
| முதல் பதிப்பு | 1977 |
| கடைசிப் பதிப்பு | 1979 |
| மொத்த அணிகள் | Four: |
| அதிகபட்ச ஓட்டங்கள் | கிறெக் சப்பல் |
| அதிகபட்ச வீழ்த்தல்கள் | டென்னிஸ் லில்லி |
உலகத் துடுப்பாட்டத் தொடர் ( World Series Cricket ) என்பது 1977 மற்றும் 1979 இக்கு இடையில் நடத்தப்பட்ட ஒரு தொழில்முறை வணிகத் துடுப்பாட்டப் போட்டியாகும். இது ஆத்திரேலிய தொழிலதிபர் கெர்ரி பேக்கர் மற்றும் அவரது ஆத்திரேலிய தொலைக்காட்சி வலைப்பின்னலான நைன் நெட்வொர்க்கால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தபட்டது. உ.து. தொடரின் போட்டிகள் துடுப்பாட்டப் போட்டிகளின் தன்மையை வெகுவாக மாற்றியது, இதன் செல்வாக்கு இன்றும் உணரப்படுகிறது.
உ.து.தொ. உருவாவதற்கு மூன்று முக்கிய காரணிகள் இருந்தன. துடுப்பாட்டத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கு அல்லது வீரர்களின் சந்தை மதிப்பை பிரதிபலிக்கும் விதமாக அவர்களுக்கு போதுமான தொகை வழங்கப்படவில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது. மேலும் வண்ணத் தொலைக்காட்சியின் வளர்ச்சியும், விளையாட்டு நிகழ்வுகளுக்கான பார்வையாளர்கள் அதிகரித்ததைத் தொடர்ந்தும், துடுப்பாட்ட வணிகத்தை மேம்படுத்த துடுப்பாட்ட வாரியங்கள் தயாராக இருக்கவில்லை. துடுப்பாட்டத்தின் வணிக திறனை உணர்ந்த ஆத்திரேலிய தொழிலதிபர் பேக்கர் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். அதற்காக வணிகரீதியாக செயல்படாத, அரசாங்கத்திற்குச் சொந்தமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC) வைத்திருந்த ஆத்திரேலிய துடுப்பாட்டத்தின் பிரத்தியேக ஒளிபரப்பு உரிமைகளைப் பெற அவர் விரும்பினார். ஆனால் அது அவருக்கு ஒளிபரப்பு உரிமையைத் தர மறுத்துவிட்டது. தனியாரிடம் ஒளிபரப்பு உரிமையைத் தந்தால் அவர்கள் வணிக ரீதியாக மட்டும் செயல்படுவார்கள், அதனால் மக்களிடையே துடுப்பாட்டத்திற்கு உள்ள நன் மதிப்பு குறையும் என்று அது கருதியது.
1976 ஆம் ஆண்டு ஆத்திரேலிய டெஸ்ட் போட்டிகளுக்கான பிரத்யேக தொலைக்காட்சி உரிமைகளைப் பெறுவதற்கு சேனல் நைன் முயற்சித்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (ACB) அதை ஏற்க மறுத்த நிலையில், பேக்கர் முன்னணி ஆத்திரேலிய, இங்கிலாந்து, பாக்கித்தான், தென்னாப்பிரிக்க, மேற்கிந்திய வீரர்களுடன், குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் டோனி கிரெய்க், மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கிளைவ் லொயிட், ஆஸ்திரேலிய கேப்டன் கிறெக் சப்பல், பின்னர் பாக்கித்தான் கேப்டனான இம்ரான் கான், முன்னாள் ஆத்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் ஆகியோருடன் இரகசியமாக ஒப்பந்தங்களை மேற்கொண்டு, தானே சொந்தமாக போட்டித் தொடர்களை நடத்தினார். பேக்கருக்கு தொழிலதிபர்களான ஜான் கார்னெல், ஆஸ்டின் ராபர்ட்சன் ஆகியோர் உதவினர். அவர்கள் இருவரும் தொடரின் துவக்க அமைப்பு, நிர்வாகம் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
உலகத் துடுப்பாட்டத் தொடரின் தரத்தை இயன் சாப்பல் சுருக்கமாகக் கூறி, அதுதான் விளையாடியதிலேயே மிகவும் கடினமான துடுப்பாட்டம் என்று கூறினார் (உலகின் அனைத்து சிறந்த வீரர்களும் இதில் ஈடுபட்டனர்). [1]
கெர்ரி பேக்கரும் ஆத்திரேலிய தொலைக்காட்சித் துறையும்
[தொகு]1970களின் நடுப்பகுதியில், ஆஸ்திரேலிய தொலைக்காட்சித் துறை இக்கட்டில் இருந்தது. ஆத்திரேலியாவில் வணிகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவை, நம்பியிருந்தது. ஏனெனில் அவற்றை வாங்குவது ஆத்திரேலியாவில் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதை விட மலிவானதாக இருந்தது. ஆத்திரேலியத் தயாரிப்பு நிகழ்ச்சிகளுக்கான கிளர்ச்சி 1970 இல் "டிவி: மேக் இட் ஆஸ்திரேலியன்" பரப்புரையிலிருந்து உத்வேகம் பெற்றது. இதன் பிறகு 1973 இல் இதில் அரசு தலையிட்டு உள்நாட்டு உள்ளடகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கைகளை எடுத்தது. [2] 1975 இல் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவக்கப்பட்ட பிறகு விளையாட்டுப் போட்டிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டது. முதன்மையாக, ஆத்திரேலிய விளையாட்டு உள்ளூர் நிகழ்ச்சியின் உள்ளடக்கமாகக் கருதப்பட்டது. இருப்பினும், நேரடி ஒளிபரப்பின் வருகை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று விளையாட்டு நிர்வாகிகள் கருதினர்.
1974 ஆம் ஆண்டு தன் தந்தை சர் ஃபிராங்க் இறந்த பிறகு, கெர்ரி பேக்கர், தன் குடும்ப நிறுவனமான கன்சாலிடேட்டட் பிரஸ் ஹோல்டிங்ஸ் (CPH)-இக்குச் சொந்தமான பல ஊடக நிறுவனங்களில் ஒன்றான சேனல் நைனின் கட்டுப்பாட்டைப் பெற்றார். [3] நைனின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வந்ததால், அதிக விளையாட்டு நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு தீவிரமான உத்தி மூலம் அந்தத் தொலைக்காட்சி அலைவரிசையின் மதிப்பை ஏற்ற பேக்கர் முயன்றார். முதலாவதாக, ஆஸ்திரேலிய ஓபன் கோல்ஃப் போட்டிக்கான உரிமைகளை அவர் பெற்றார். போட்டிக்கான நிரந்தர தலைமையகமான சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய கோல்ஃப் கிளப்பை மறுசீரமைக்க அவர் மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டார். போட்டிகளை மறுவடிவமைப்பு செய்யவும் போட்டியில் கலந்துகொள்ளவும் ஜாக் நிக்லாசை பணியமர்த்தினார். [4] 1970களின் நடுப்பகுதியில் பிரபலமடைந்து வந்த துடுப்பாட்டத்தின் இரசிகராக பாக்கர் இருந்தார். 1976 ஆம் ஆண்டில், ஆத்திரேலியாவின் உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளை தன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அதற்கான உரிமையை பேக்கர் கோரினார். அதற்கான ஒப்பந்தம் காலாவதியாகும் நிலையில் இருந்தது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு A$1.5 மில்லியன் தொகையைத் தருவதாக ஆத்திரேலிய துடுப்பாட்ட வாரியத்தை அணுகினார் (வழக்கமான தொகையை விட எட்டு மடங்கு அதிகம்), ஆனால் அவருக்கு ஒளிபரப்பு உரிமம் கொடுக்கப்படவில்லை. வணிகத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டாத நிலையில் இருபது ஆண்டுகளாக விளையாட்டை ஒளிபரப்பிய ஆத்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திடமே வாரியம் கரிசனம் காட்டியது. இந்த முடிவில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று பேக்கர் நம்பினார். மேலும் அவரது ஏலம் கையாளப்பட்ட விதத்தையும் நிராகரிப்பட்டதிலும் கோபமடைந்தார்.
உலகத் துடுப்பாட்டத் தொடர் துவக்கம்
[தொகு]ஆத்திரேலிய துடுப்பாட்ட வாரியத்துக்கு எதிராக 1977 இல் உலகத் துடுப்பாட்டத் தொடர் என்ற பெயரில் போட்டிகளை நடத்தத்தினார். அதற்காக துடுப்பாட்ட வீரர்களுக்கு கூடுதலான அளவில் சம்மளம் வழங்கி ஒப்பந்தங்களை மேற்கொண்டார். மரபான மற்ற தொடர்களை விட இவர் அதிகப்படியான சம்பளம் வழங்கியதால் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்களைத் தவிர பிறநாட்டு துடுப்பாட்ட வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்துகொள்ள முன்வந்தனர்.
பேக்கரின் இந்த நடவடிக்கைக்கு உலகத் துடுப்பாட்ட குழு (ஐ.சி.சி) அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும் இந்தப் போட்டிகளை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகை எடுக்கத் துவங்கியது. உலகத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் வீரர்கள் ஐ.சி.சி நடத்தும் தோடர்களில் கலந்துகொள்ள முடியாது எனவும், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இதை எதிர்த்து வீரர்களின் நலனைக் காக்கும் விதமாக கெர்ரி பேக்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். துடுப்பாட்ட வீரர்கள் போதிய வருவாய் இல்லாமல் துடுப்பாட்டம் தவிர பிற பணிகளிலும் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களின் நலனுக்காகவே உலகத் துடுப்பாட்டத் தொடர் நடத்தப்படுகிறது என்று வாதாடினார். இதை ஏற்ற நீதிம்ன்றம் உலகத் துடுப்பாட்டத் தொடரில் கலந்துகொள்ள தடைவிதிக்க்க கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால் ஐ.சி.சி இதை எளிதாக விடவில்லை. உலகத் துடுப்பாட்டத் தொடரை நடத்த ஆடுகளங்களை வழங்கக்கூடாது என்று அனைத்து துடுப்பாட்ட வீரியங்களுக்கும் மறைமுக உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் கேரி பேக்கர் இரு கல்பந்து மைதானங்களை வாடகைக்கு எடுத்து போட்டிகளை நடத்தினார்.
அந்த மைதானங்களில் வெளியில் இருந்து தயார் செய்யப்பட்ட ஆடுகளங்களை (டிராப் இன் பிச்) கொண்டுவந்து பொருத்தினர். இவ்வகை ஆடுகளங்கள் முதன்முதலில் இந்த போட்டிகளில்தான் அறிமுகப்படுத்தபட்டன. தொலைக் காட்சியில் அதிகம்பேர் பார்க்கும் நேரத்தைக் கணக்கில் கொண்டு போட்டிகளை பகலிரவில் மின்னொளியில் நடத்தப்பட்டன. போட்டியில் வெள்ளை நிறப் பந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அணிகளுக்கு வெள்ளைச் சீருடைகள் நீக்கபட்டு வண்ணச் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கையுறை, கால் காப்பு போன்றவையும் வண்ணத்தில் மாற்றப்பட்டன.
முடிவு
[தொகு]இந்தப் போட்டிகள் காண புதியதாகவும், பிரமண்டாமாகவும் இருந்ததால் போட்டிகளைக் காண இரசிகள் குவிந்தனர். தொலைக்காட்சி பார்வையாளர்களும் கூடினர். ஆனால் கெர்ரி பேக்கர் பேக்கர் செய்த செலவை ஈடுகட்டும் அளவை ஒப்பிடும்போது எதிர்பார்த்த வருவாய் அவருக்கு கிடைக்கவில்லை.
அதேசமயம் இந்தப் போட்டிகளின் எதிரொலியால் ஆத்திரேலிய துடுப்பாட்ட வாரியம் பெருமளவில் இழப்பை சந்தித்தது. அதையடுத்து வாரியம் கெர்ரி பேக்கருடன் பேச்சுவார்த்தைக்கு முன் வந்து, ஒளிபரப்பு உரிமையை அவருக்கு வழங்க முன் வந்தது. அவரும் மேலும் இழப்பு ஏற்படுவதைத் தவிற்கும் விதமாக உலகத் துடுப்பாட்டத் தொடரைக் கைவிட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burnett, Adam (25 November 2015). "Cricket Australia Recognise World Series Cricket Statistics". Cricket.com.au. Retrieved 12 July 2022.
- ↑ Australian Heritage Council. பரணிடப்பட்டது 10 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம் Accessed 29 July 2007.
- ↑ "Media colossus pushed the boundaries of family empire". Sydney Morning Herald. 28 December 2005.
- ↑ "Packer 'put Australian Open on map'". Sydney Morning Herald. 27 December 2005. Retrieved 29 July 2007.