உள்ளடக்கத்துக்குச் செல்

உரோசலிண்டு பிராங்குளின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோசலிண்டு பிராங்குளின்
பிறப்புஜூலை 25, 1920
நாட்டிங் ஹில், லண்டன்
இறப்புஏப்ரல் 16, 1958
செல்சீ, லண்டன்
தேசியம்பிரித்தானியர்
துறைஎக்சு-கதிர் படிகவியல்
பணியிடங்கள்பிரித்தானிய நிலக்கரி பயன்பாடு ஆராய்ச்சி சங்கம்
Laboratoire central des services chimiques de l'État
கிங் கல்லூரி லண்டன்
பிர்க்பெக் கல்லூரி, லண்டன்
கல்வி கற்ற இடங்கள்நியூன்ஹம் கல்லூரி, கேம்பிரிட்ஜ்
அறியப்படுவதுநிலக்கரி மற்றும் கரிமத்தின் நுண்வடிவமைப்பு கண்டறிதல்

உரோசலிண்டு பிராங்குளின் எனப்படும் ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsi Franklin, 25 ஜூலை 1920 - 16 ஏப்ரல் 1958) ஒரு பிரித்தானிய அறிவியலாளர். உயிர் இயற்பியல் அறிஞர், வேதியலாளர், இவர் மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்சு கதிர் படிக வரைவி நிபுணர் (X-ray Crystallography) என பலவகைத் துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியவர்.

இளமை மற்றும் கல்வி

[தொகு]

பிராங்குளின் இலண்டனில் உள்ள நோட்டிங் மலை என்ற ஊரில் 1920 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். ஒரு பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க ஆங்கிலேய யூத குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை 'எல்லிஸ் ஆர்தர் பிராங்க்ளின்' (1894-1964),இலண்டனில் வணிக வங்கி ஒன்றினைத் தொடங்கி நடத்திவந்தார். இவருடைய தாயார் 'முரியேல் பிரான்சஸ் வேலி' (1894-1976). இவரது குடும்பத்தினர் பலரும் அரசில் உயர்பதவிகளை வகித்து வந்தனர்.

புனித பவுல் மகளிர் பள்ளியிலும், வடக்கு இலண்டன் கல்லூரிப் பள்ளியிலும் சேர்ந்து இவர் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். இலத்தீன் மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய பிராங்குளின் பள்ளிப் பருவத்திலேயே அறிவியலில் தணியாத ஆர்வத்தைக் காட்டினார். இவருடைய பதினைந்தாவது வயதில் வேதியல் ஆராய்ச்சி செய்வதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் எனத் தீர்மானித்தார். அவர் சமூக சேவையில்தான் ஈடுபடவேண்டும். கல்லூரிப் படிப்பு பெண்களுக்குத் தேவையற்றது என்று கூறிய அவருடைய தந்தையின் எதிர்ப்பையும் மீறி, கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1941-ல் பி.ஏ தேர்வில் வெற்றி பெற்றார். அன்றைய கால கட்டத்தில் பெண்கள் பட்டதாரி ஆனாலும் பெயருக்குப் பின்னால் பட்டத்தினைப் போட்டுக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஆய்வுப்பணிகள்

[தொகு]

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற 1941-42 ஆண்டுகளில் தேம்ஸ் நதிக் கரையில் கிங்க்ஸ்டன் என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆங்கில நிலக்கரிப் பயன்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். இங்கு எக்சு கதிர்கள் விளிம்பு விளைவுப் படிகவியல் (X-ray diffraction Crystallography) மூலம் நிலக்கரியின் மூலக்கூற்றின் அமைப்பைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை உருவாக்கினார். இதன் அடிப்படையில் இவருடைய ஆய்வை அமைத்துக் கொண்டார்[1]. தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு 1945-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

1951-ல் இலண்டனில் மன்னர் கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிர் இயற்பியலாளர் பிரிவில் 'ஜான் ரேண்டல்' என்ற அறிவியலறிஞரின் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார்[2] அதே சமயம் தனிப்பட்ட முறையில் கரைசல்களில் உள்ள புரதங்கள், கொழுப்புகளின் (Proteins and lipids)தன்மை பற்றி எக்சு கதிர் விளிம்பு விளைவின் உதவி கொண்டு அறிவதற்கான் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்[3] இந்த ஆராய்ச்சியில் இவருக்குக் கிட்டிய இந்த முன்னறிவை அறிந்த ரேண்டல், டி.என்.ஏ இழைகளின் அமைப்பு பற்றி ஆராயும்படி பிராங்குளினைக் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுகளுக்கு 'மௌரிசு வில்கின்சு' என்பவரும், இவருடைய ஆய்வு மாணவர் 'ரேமண்ட் கோசிங்' என்பவரும் உதவி புரிந்தனர்[4][5]. எக்சுரே கதிர்குழாயும் மற்றும் நுண்மையான புகைப்படக் கருவியும் வில்கின்சு மூலம் கிடைத்தது. எக்சு கதிர் ஆராய்ச்சியில் இருந்த முன்னறிவே பிராங்குளினை மரபணு அமைப்பை ஆராயும் அறிவியலறிஞர்களுடன் பணியாற்ற வழிகோலியது.

மரபணு 1898-ல் ஜோகன்மீச்சர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் இருபதாம் நூற்றாண்டில்தான் மரபணுவின் சரியான வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ரோசலிண்ட் பிராங்க்ளினின் ஆராய்ச்சியே இதற்கு அடித்தளமாக அமைந்தது.[6]

மரபணு வடிவம் குறித்த ஆய்வு

[தொகு]

பிராங்குளின் 1951-1953 ஆம் ஆண்டு வரை மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு மரபணுவின் பதிப்பை எக்சு கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் படம் பிடித்தார்.[7] இந்தப் படங்களை பிராங்க்ளினின் அனுமதி பெறாமலேயே வில்கின்சு, வாட்சனுக்குக் காண்பித்தார்[8][9] வாட்சன், கிரிக் ஆகிய இருவரும் மரபணு வடிவத்தைக் கண்டறியும் ஆய்வில் அப்போது ஈடுபட்டிருந்தனர். மரபணு இழை சுருள் வடிவம் கொண்டது என்பதனை மெய்ப்பிக்க மிகச் சிறந்த ஆதாரம் பிராங்க்ளின் எடுத்த படமே என அவர்கள் உணர்ந்தனர். அதனைப் பயன் படுத்தி அவர்களின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். இந்த ஆராய்ச்சிகளில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாட்சன், கிரிக், வில்கின்சு ஆகிய மூவருக்கும் பின்னால் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வைரசுகள் குறித்த ஆய்வுகள்

[தொகு]
இலத்திரனியல் நுண்ணோக்கியில் எடுக்கப்பட்ட புகையிலைச் சுருள் வைரசு

தனது சூழ்நிலை காரணமாக பிராங்க்ளின் இலண்டனில் உள்ள் பர்பெக் கல்லூரியில் சேர்ந்து தனக்கென்று ஓர் ஆய்வுக் குழுவை உருவாக்கித் தன்னுடைய பழைய ஆய்வுகளைத் தொடர்ந்தார். வைரசுகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். ஐந்து ஆண்டுகளில் 17 ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். ஆய்வின் பொருட்டு அமெரிக்கா சென்ற போது பிராங்க்ளினுக்குக் கருப்பைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய ஆய்வுகளின் இடையே மூன்று முறை அறுவை சிகிச்சை மற்றும் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் நலம் தொடர்ந்து பாதிப்படைந்தது[10]. சிகிச்சை பலனின்றி இவருடைய 37-ஆவது வயதில் 1958 -ல் பிராங்க்ளின் மரணமடைந்தார்.

நோபல் பரிசு பரிந்துரை-விதி முறைகள்

[தொகு]

வாட்சன் அவருடைய ஆராய்ச்சியப் பற்றி நூல் வெளியிட்ட போது மரபணு கண்டுபிடிப்பில் உரோசலிண்டு பிராங்குளின் பற்றி எழுதாமல் தவிர்த்தார். ஆனால் பின்னர் ஒரு சமயம் கிரிக், இதே கண்டுபிடிப்பை எட்ட பிராங்க்ளின் இன்னும் இரண்டு அடிகள் மட்டும் எடுத்து வைக்க வேண்டியிருந்தது என்று எழுதியிருந்தார். புகைப்படத்தை வாட்சனுக்குத் தந்த வில்கின்சு மட்டுமே நோபல் பரிசு பெற்ற போது பிராங்க்ளின் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். வாட்சன், கிரிக் மற்றும் வில்கின்சு மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தபோது பிராங்க்ளின் இறந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. நோபல் பரிசு பரிந்துரை விதிகளின் படி மூன்று நபர்களுக்கு மேல் ஓர் ஆராய்ச்சிக்கு பரிசு வழங்க அனுமதி இல்லை [11].மேலும் இறந்த பிறகு ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கும் வழக்கமும் கிடையாது. இதனால் உரோசலிண்டு பிராங்குளினுக்கு நோபல் பரிசு கிடைக்காமலேயே போயிற்று[12]. பிற்காலத்தில் ரோசலிண்ட் பிராங்க்ளினுடன் பணிபுரிந்தவர்களும் அவருடைய நண்பர்களும், பற்பல ஆராய்ச்சிகளின் போது அவர் எழுதிய குறிப்பேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பிராங்க்ளினை உலகறியச் செய்தனர். மரபணு வின் வடிவத்தைக் கூட்டாக அன்றி தனியொரு பெண்ணாக உழைத்துக் கண்டறிந்ததை உலகம் புரிந்துகொண்டது.

சிறப்புகள்

[தொகு]
மருத்துவம் மற்றும் அறிவியலுக்கான உரோசலிண்டு பிராங்குளின் பல்கலைக்கழகம். சிகாகோ

பிராங்க்ளினைப் போற்றும் வகையிலும் இவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 2004-ஆம் ஆண்டு சிகாகோ மருத்துவப் பள்ளி என்னும் பெயரை மருத்துவம் மற்றும் அறிவியலுக்கான ரோசலிண்ட் பிராங்க்ளின் பல்கலைக்கழகம் (Rosalind Franklin University of Medicine and Science) என்று மாற்றி அமைத்தனர்^ Dedication| [4] பரணிடப்பட்டது 2012-03-13 at the வந்தவழி இயந்திரம் of Rosalind Franklin University|[5]. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பல ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது.

உசாத்துணை

[தொகு]

'அறிவியல் ஒளி' மே 2010 இதழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ^ a b c d "The Rosalind Franklin Papers, The Holes in Coal: Research at BCURA and in Paris, 1942-1951". profiles.nlm.nih.gov. Retrieved 13 November 2011| [1]
  2. ^ Maddox, p. 124.
  3. ^ Wilkins, Wilkins, M., The Third Man of the Double Helix, an autobiography (2003) Oxford University Press, Oxford. pp. 143–144.
  4. ^ The Dark Lady Of DNA by Branda Maddox

  5. ^ Wilkins, p. 121
  6. ^ Double Helix: 50 Years of DNA. Nature archives. Nature Publishing Group|[2]
  7. Maddox, pp. 149–150, Elkin, p 45. Elkin, L.O. Rosalind Franklin and the Double Helix. Physics Today, March 2003(available free on-line, see references). Olby, R. The Path to the Double Helix (London: MacMillan, 1974)
  8. Yockey, H. P. Information Theory, Evolution, and the Origin of Life (2005).^
  9. Crick, Francis (1988) "What Mad Pursuit: A Personal View of Scientific Discovery" (Basic Books reprint edition, 1990) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-09138-5
  10. ^ "Defending Franklin's Legacy". Secret of Photo 51. NOVA. Retrieved 10 November 2010.Along with genetic predisposition; opinion of CSU's Lynne Osman Elkin; see also March 2003 Physics Today
  11. Maddox, B. Rosalind Franklin: The Dark Lady of DNA (2002). Harper Collins பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-655211-0.p.205| [3]
  12. Nobel Prize (1962). The Nobel Prize in Physiology or Medicine 1962, for their discoveries concerning the molecular structure of nucleic acids and its significance for information transfer in living material, Nobelprize.org

வெளி இணைப்புகள்

[தொகு]