உரைநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்கு வகையான உரைநூல்கள் இருந்ததாக முன்னோர் கூறுவர் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1] பாட்டிடை வைத்த குறிப்பு, பா இன்று எழுந்த கிளவி, பொருளொடு புணராப் பொய்ம்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி என்பன அவை. " உரைவகை நடையே நான்கு என மொழிப " (தொல்காப்பியம் செய்யுளியல் நூற்பா. 166 ) உரைநடை நூல்களையே தொல்காப்பியம் உரைவகை எனக் குறிப்பிடுகிறது.

உரைவகை 4 [2][தொகு]

  1. பாட்டிடை வைத்த குறிப்பு - பழம் பாடல்களை எழுதி அவற்றிற்கு உரை எழுதும் வகை. [3] இவ்வாறு எழுதப்பட்ட உரைநூலுக்கு எடுத்துக்காட்டு தகடூர் யாத்திரை
  2. பா இன்று எழுந்த கிளவி - பாடல் இல்லாமல் பாடலில் கூறப்பட்ட கருத்தை மட்டும் எழுதும் உரைவகை. இவ்வாறு எழுதப்பட்ட பண்டைய நூல்கள் பாரதம், பருப்பதம்
  3. பொருளொடு புணராப் பொய்ம்மொழி - பொய்யாக இட்டுக்கட்டிப் புனைந்துரையாய் எழுதப்படும் கதை.
  4. பொருளொடு புணர்ந்த நகைமொழி - பொய்யாகப் புனைந்துரைக்கப்படாமல் மெய்யான செய்தியில் நகைப்புச் சுவை கூட்டி எழுதப்படும் உரைவகை. இவ்வாறு எழுதப்பட்ட பண்டைய நூல்களுக்கு எடுத்துக்காட்டு சிறுகுரீஇ உரை, தந்திர வாக்கியம் போல்வன.

நன்னூல் விளக்கம்[தொகு]

செய்யுள் நடையில் அமைந்த நூல்களுக்கு உரைநடையில் விளக்கம் தருவது உரைநால். நன்னூல் என்னும் இலக்கணம் இதனைக் காண்டிகையுரை, விருத்தியுரை என இரண்டு வகையாக்கிக் காட்டுகிறது.

காண்டிகையுரை[தொகு]
நூற்பா என்னும் சூத்திரம் அல்லது செய்யுளால் அமைந்துள்ள பாடலுக்கு அதனுள் அமைந்துள்ள கருத்து, அதில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள், அவற்றிற்கான எடுத்துக்காட்டு ஆகிய மூன்றையும் தருவது காண்டிகை உரை எனப்படும். மற்றும் தொடர்புடைய வினா-விடைகளும் இவ்வுரையில் தரப்படுவது உண்டு. [4]
விருத்தியுரை[தொகு]
மேலே காண்டிகை உரைக்குச் சொல்லப்பட்ட மூன்றனும், இதனுள் சொல்லப்பட்ட இரண்டும் சேர்த்து ஐந்து உறுப்புகளைக் கொண்டது காண்டிகை உரை. காணவேண்டிய 5 காண்டிகை உறுப்பு:
  1. கருத்து
  2. பதப்பொருள்
  3. எடுத்துக்காட்டு
  4. அந்த இடத்துக்கு வேண்டிய தன் உரையால் அமைந்த விளக்கம்
  5. பிற நூல்கள் கூறும் விளக்கம்

என்பன. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
    பா இன்று எழுந்த கிளவி யானும்
    பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்
    பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்
    உரைவகை நடையே நான்கு என மொழிப (தொல்காப்பியம் செய்யுளியல் 166)
  2. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் கருத்து
  3. பாடல் என்பது இலக்கண நூற்பாவைக் குறிக்காது
  4. கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
    அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
    சூத்திரத்துள் பொருள் தோற்றுவ காண்டிகை

  5. சூத்திரத்துள் பொருள் அன்றியும் ஆண்டைக்கு
    இன்றி யமையா யாவையும் விளங்கத்
    தன் உரையானும் பிற நூலானும்
    ஐயம் அகல ஐங் காண்டிகை உறுப்பொடு
    மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரைநூல்&oldid=3690116" இலிருந்து மீள்விக்கப்பட்டது