உருப்படிம மொழி
ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பான வடிவமைப்புச் செயற்பாடுகளை விளக்கும் கட்டமைப்பான ஒரு வழிமுறையே உருப்படிம மொழி (pattern language) எனப்படுகின்றது. இது பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டது.
- எடுத்துக்கொண்ட விடயத்தில் உள்ள பொதுவான பிரச்சினைகளை அவதானித்து அடையாளம் காணுதல்,
- வேண்டிய இலக்கை அடையும் வகையில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இருக்கக்கூடிய இயல்புகளை விளக்குதல்,
- வடிவமைப்பவர் தருக்க ரீதியான முறையில் ஒரு பிரச்சினையிலிருந்து இன்னொன்றுக்கு ஒழுங்காகச் செல்ல உதவுதல் மற்றும்
- பல்வேறு வழிகளில் வடிவமைப்பு நடைபெறுவதை அனுமதித்தல்.
அனுபவத்தினால் மட்டுமே விளையக் கூடியதும், ஆவணப்படுத்தி இளையவர்களுக்குக் கற்பிக்க முடியாததுமான தீர்மானம் எடுக்கும் திறனை முறைப்படுத்துவதற்கு, உருப்படிம மொழி பயன்படுகிறது. அறிவுப் பொதிவைக் கட்டமைப்பு உள்ளதாக ஆக்குவதற்கும், அடிப்படையில் சிக்கலான முறைமைகளை, அளவுக்கதிகமாக எளிமைப்படுத்தாமல் புரிந்து கொள்வதற்கும் உருப்படிம மொழி வகை செய்கிறது.
தொடக்கம்
[தொகு]கிறிஸ்தோபர் அலெக்சாண்டர் என்னும் கட்டடக்கலைஞர் முதன் முதலாக உருப்படிம மொழி என்பதற்கு இணையான pattern language எனும் சொல்லைப் பயன்படுத்தினார். இக் கருத்துருவைக் குடிசார் பொறியியல் (Civil Engineering) மற்றும் கட்டிடக்கலை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வழிமுறைகளில் அவர் பயன்படுத்தினார். எவ்வாறு நகரங்களை அமைப்பது என்பதிலிருந்து, ஒரு அறையில் சாளரத்தை எவ்விடத்தில் அமைக்கவேண்டும் என்பது வரையான பலவகைப்பட்ட பிரச்சினைகளில் இக்கருத்துருவைப் பயன்படுத்த முடியுமென அவர் வாதிட்டார். அவர் எழுதிய A Pattern Language என்னும் புத்தகம் மூலம் மேற்படி கருத்துவை அவர் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்தினார்.
இவர் எழுதிய இன்னொரு புத்தகமான The Timeless Way of Building (காலஞ்சாராக் கட்டட வழிமுறைகள்) என்பதிலும் உருப்படிம மொழி பற்றி விளக்கியுள்ளதுடன், கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றின் வடிவமைப்பு, கட்டுமானம் என்பவற்றில் இது எவ்வாறு பயன்படக்கூடும் என்பதையும் விளக்கியுள்ளார். எனினும் இது கட்டிடத் துறைகளில் மட்டுமன்றி கணினித் துறை முதலிய வேறு பல துறைகளிலும் கூடப் பயன்படுத்தப்படுகிறது.
வெளியிணைப்புகள்
[தொகு]- கட்டடம், நகரம் முதலியனவற்றின் அமைப்பு தொடர்பான உருப்படிம மொழி இணையத்தளம்
- போட்லண்ட் உருப்படிமக் களஞ்சியம் (The Portland Pattern Repository)
- வாட் கன்னிங்ஹாமின் (Ward Cunningham) உருபடிம மொழி எழுதுவதற்கான ஆலோசனைகள்
- architypes.net - கட்டிடக்கலையில் உருப்படிம மொழிக் கூட்டுத் திட்டம் பரணிடப்பட்டது 2006-10-05 at the வந்தவழி இயந்திரம்
- விடுதலையளிக்கும் குரல்கள்! உருப்படிம மொழித் திட்டம் பரணிடப்பட்டது 2006-04-09 at the வந்தவழி இயந்திரம்