உயிரி நெகிழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயிரி நெகிழி விளக்கம்[தொகு]

இன்று, எங்கும் எதிலும் நெகிழி என்ற நிலை உருவாகியிருக்கிறது. எடை குறைவானது, எந்தப் பொருளையும் உருவாக்குகிற அளவுக்கு நெகிழ்வுத்தன்மை கொண்டது, திடப்பொருளோ திரவப்பொருளோ எதையும் இதனுள் எடுத்துச்செல்லலாம். கிழியாமலும் இருக்கும் என்பது நெகிழியின் தனிச் சிறப்பு. ஆனால், 500 ஆண்டுகள் ஆனாலும் மட்காமல் இருப்பது மிகப் பெரிய சூழல்கேடு. பெட்ரோலியப் பொருட்களிலிருந்தே நெகிழி தயாரிக்கப்படுவதால், இதன் பயன்பாடும் பெட்ரோலியப் பயன்பாடும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பதும் பெரிய ஆபத்து.

தயாரிப்பும் கலவைப் பொருளும்[தொகு]

எனவே, நெகிழிக்கு மாற்று தயாரிக்கும் முனைப்பு உலகெங்கிலும் நடைபெறுகிறது.

அசாமில் உள்ள தேஜ்பூர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பழக்கழிவு, உருளைக்கிழங்கு தோல் போன்றவற்றிலிருந்து ‘உயிரி நெகிழி' தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இப்பொருட்களை உலர வைத்துப் பொடித்து, முட்டையின் வெள்ளைக்கரு கலந்து பால்மம் போன்ற கூழாக்கினார்கள். இந்தக் கூழை படியவைத்து உலரச் செய்து ‘உயிரி கூழ்மப் படலம்’ தயாரித்தார்கள். அதனுடன் கால்சியம் குளோரைடு சேர்த்து அந்தப் படலத்துக்கு உறுதித்தன்மையையும் கொடுத்தனர். மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டு கிறபோது, அந்தப் பாத்திரத்தைக் குலுக்கினால் மாவு தனக்குள் நெருக்கமாகி அடர்ந்து படிவதுபோல, மீயொலி (அல்ட்ரா சவுண்ட்) கொண்டு அதிர்வுகளை உருவாக்கி, இந்த பாலிமர் படலத்தையும் அடர்த்தியான, அதேநேரத்தில் மெல்லிய படிமமாக மாற்றினார்கள். இறுதியில் கிடைத்த படிமம் செம்பழுப்பு நிறத்தில், வெறும் 0.3. மி.மீட்டர் தடிமனில் இருந்தது. நல்ல நெகிழ்வுத்தன்மையும், 200 டிகிரி வரை வெப்பத்தைத் தாங்கும் விதத்திலும் இருந்தது ஆய்வாளர்களுக்கு புதிய நெகிழிக்கான கண்டுபிடிப்பையும் கண்டனர்.

மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட உயிரி கூழ்மம், உயிர் வாயுவும் (ஆக்ஜிசன்) ஈரப்பதமும் புகும் தன்மை இருந்ததால் அவற்றை உணவுப்பொருட்கள்மீது சுற்றுவதற்குப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. ஆனால், இந்தப் புதிய கூழ்மத்திலோ நீர்ச்சத்தைக் கடத்தும் தன்மை குறைவாகவே இருந்தது. இதைக் கொண்டு ரொட்டித் துண்டை மூடி ஆய்வு செய்தபோது, அதில் நுண்ணுயிர் வளர்ச்சி குறைவாக இருந்தது. ஆக உணவுப் பாதுகாப்பிலும் இதைப் பயன்படுத்த முடியும். இவை எல்லாம் ஆய்வுக் கூடத்தில் சோதனை அளவில் கிடைத்த வெற்றியே என்பதால், இன்னும் இதனைச் செழுமைப்படுத்தி வணிக ரீதியில் தயாரிக்கும் பணி பாக்கியிருக்கிறது. அதிலும் வெற்றி கிடைத்துவிட்டால், இந்த கூழ்மத்தை சுற்றியுள்ள ரொட்டியை கூழ்மத்தை நீக்காமலேயே சாப்பிடலாம். அதாவது, உண்பதற்கும் ஏற்ற இயற்கை நெகிழி இது!

மேற்கோள்[தொகு]

த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதுநிலை அறிவியலாளர்.

தொடர்புக்கு: tvv123@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரி_நெகிழி&oldid=2721666" இருந்து மீள்விக்கப்பட்டது