உபபீடகம் (சிற்பநூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபத்தைந்து பதங்களைக் கொண்ட உபபீடகம்

இந்தியச் சிற்ப மரபில் உபபீடகம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. இது ஒவ்வொரு பக்கமும் ஐந்தாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் இருபத்தைந்து (5 x 5) பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், நடுவில் வரக்கூடிய ஒரு பதம் பிரம்மாவுக்கு உரியது. மீதியுள்ள இருபத்துநான்கு பதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவருக்கு உரியவை. பிரமனுக்கு உரிய பதத்தைச் சுற்றியுள்ள உட்புறச் சுற்றில் எட்டுத் தேவர்களுக்கு உரிய பதங்கள் உள்ளன. வெளிப்புறச் சுற்றில் 16 தேவர்களுக்கான பதங்கள் உள்ளன. உட்சுற்றில் வட கிழக்கில் இருந்து தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஆபவத்சன், ஆரியகன், சாவித்திரன், விவசுவதன், இந்திரன், மித்திரகன், உருத்திரன், பூதரன் ஆகியோருக்குரிய பதங்களும், வெளிச்சுற்றில் வடகிழக்கில் தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஈசன் (சிவன்), சயந்தன், ஆதித்தன், பிராசன், அக்கினி, விதாதன், யமன், பிருங்கராசன், பிதிர், சுக்கிரீவன், வருணன், சோசன், மாருதன், முக்கியன், சோமன், அதிதி ஆகிய தேவர்களுக்கு உரிய இடங்களும் காணப்படுகின்றன.[1]

இந்த உபபீடகமும், 16 பதங்களைக் கொண்ட மகாபீடமும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அமைப்புள்ளவை. தேவர்களிலும், அவர்களது எண்ணிக்கையிலும், சார்பு நிலைகளிலும் மாற்றங்கள் எதுவும் இல்லை. பிரமனுக்கும் ஏனைய தேவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பதங்களின் எண்ணிக்கையில்லேயே வேறுபாடுகள் உள்ளன. மகாபீடத்தில் பிரமனுக்கு நான்கு பதங்களும், ஏனைய தேவர்களுக்கு அரைப் பதமும் உதுக்கப்பட்டிருக்க உபபீடகத்தில் எல்லாத் தேவர்களுக்குமே ஒவ்வொரு பதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Acharya, Prasanna Kumar., 2010. பக். 26.

உசாத்துணைகள்[தொகு]

  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.
  • பவுன்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபபீடகம்_(சிற்பநூல்)&oldid=1601718" இலிருந்து மீள்விக்கப்பட்டது