உள்ளடக்கத்துக்குச் செல்

உந்துகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்மடிய்யா விண்தொகுதிகள் நிறுவனத்தின் நான்கு-ஏவூர்தி (Quad-Rocket) உந்துகைத் தொகுதி

உந்துகை ( Propulsion) என்பது இயக்கத்தை ஏற்படுத்தும் விசையைத் தோற்றுவிப்பதற்கான மூலம் ஆகும். வழமையாக ஓர் உந்துகைத் தொகுதி என்பது எந்திர ஆற்றல் மூலத்தையும், அவ்வாற்றலை இயக்கத்துக்குப் பயன்படுத்தும் உந்துவிப்பானையும் கொண்டதாகும். தற்காலத் தொழில்நுட்பத்தில் பல்வேறு வகை பொறிகள் ஆற்றல் மூலங்களாகவும், உந்திகள் (Propeller), சக்கரங்கள் (Wheels) அல்லது உந்துகைத் தூம்புவாய் (Propulsive Nozzle) போன்றவை உந்துவிப்பானாகவும் செயல்படுகின்றன.[1]

உயிரியல் உந்துகை அமைப்பில் தசைகள் ஆற்றலைத் தோற்றுவிக்கும் மூலமாகவும், கால்கள், இறக்கைகள் மற்றும் (மீன்) துடுப்புகள் உந்துவிப்பானாகவும் செயல்படுகின்றன.

வாகனங்களுக்கான உந்துகை வகைகள்

[தொகு]

காற்று

[தொகு]
சுழல்-உந்திப் பொறி பொருத்தப்பட்ட டுபொலெவ் டியு-95

வானூர்தியின் உந்துகைத் தொகுதியானது ஏதேனும் ஒரு வகை வானூர்திப் பொறியையும் தள்ளுவிசையை உண்டாக்குகின்ற உந்தி (Propeller) அல்லது உந்துவிக்கும் புறக்கூம்புவாயையும் கொண்டதாகும். வானூர்தியின் உந்துகைத் தொகுதியானது இரண்டு பணிகளைச் செய்தாக வேண்டும். ஒன்று, வானூர்தியின் நிலையான பறத்தலின்போது வானூர்தியின்மீது காற்று ஏற்படுத்தும் இழுவைக்குச் சமமான தள்ளுவிசையை ஏற்படுத்தவேண்டும். இரண்டு, முடுக்கத்தின்போது வானூர்தியின்மீதான இழுவைக்கும் மேலான அதிக தள்ளுவிசையை உண்டுபண்ணவேண்டும். எந்த அளவுக்கு இழுவைக்கும் தள்ளுவிசைக்கும் வித்தியாசம் அதிகப்படியாக இருக்கிறதோ அந்தளவுக்கு வானூர்தி முடுக்கம் பெறும்.

நிலம்

[தொகு]

போக்குவரத்துப் பயன்பாடுகளுக்காக நிலத்தின்மீது உந்துகைத் தொகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் ஆற்றல் மூலமாக பலவகை பொறிகளும் உந்துவிப்பான் தொகுதியில் சக்தி மாற்றம் மற்றும் சக்கரங்கள் இடம்பெறுகின்றன.

நீர்

[தொகு]

நீர்வழிப் போக்குவரத்துக்காக கப்பல் மற்றும் படகுகளின் இயக்கத்துக்காக உந்துகைத் தொகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்காலம் வரையிலும் சிறுவகைப் படகுகளில் துடுப்புகளும் விரிப்புகளுமே பயன்படுத்தப்பட்டுவருகின்றன. கப்பல்களில் உந்திகள் (Propeller) பயன்படுத்தப்படுகின்றன; அவற்றை இயக்க நீராவிப் பொறிகள், டீசல் பொறிகள், சுழலிப் பொறிகள் மற்றும் அணுப்பிளவுப் பொறிகள் உள்ளிட்ட பல்வகைப் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

விண்வெளி

[தொகு]
விண்ணோட முதன்மைப் பொறியின் சோதனை எரிப்பு

விண்ணூர்திகளின் உந்துகை என்பது விண்ணூர்தி மற்றும் செயற்கைக்கோள்களை செலுத்தப் பயன்படுவதாகும். பல்வகை விண் உந்துகை முறைகளை இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் நிறைகளும் குறைகளும் உள்ளன. அதிக அளவில் ஆய்வு நடைபெறும் துறையாக விண் உந்துகை முறைகள் இருக்கின்றன. பொதுவாக, வளிமத்தை அதிக திசைவேகத்தில் சுருங்கி-விரியும் தூம்புவாய் வழியாக செலுத்துவதன் மூலம் தள்ளுவிசை உண்டாக்கப்படுகிறது. இவ்வகைப் பொறி ஏவூர்திப் பொறி என்றழைக்கப்படுகிறது.

ஏவுதலின்போது பெரும்பாலும் வேதி எரிபொருட்களைப் பயன்படுத்தும் விண்ணூர்திகள், விண்வெளியில் மின்னுந்துகையையும் பயன்படுத்துகின்றன. இன்றளவும் செயற்கைக்கோள்கள், விண்ணூர்திகள் மற்றும் விண்ணுளவிகள் தமது நிலைப்பாடு, நோக்கு மற்றும் கோண உந்தத்தைக் கட்டுப்படுத்த சிறு ஏவூர்திப் பொறிகளைப் பயன்படுத்துகின்றன.

விலங்குகள்

[தொகு]
பறத்தலில் ஒரு தேனீ.

விலங்குகளின் தான்-உந்துகையான இடம்பெயர்தல் என்பது பல்வேறு வகைகளில் செய்யப்படுகிறது; அவை: ஓடுதல், நீந்துதல், பறத்தல் மற்றும் தாவுதல். விலங்குகள் உணவைத் தேடவும், சாதகமான வாழ்விடத்தைக் கண்டறியவும், தாக்கவரும் விலங்குகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் என பல்வேறபட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வை நிகழ்த்துகின்றன.

இடம்பெயர்வானது புவியீர்ப்பு, நிலைமம், உராய்வு மற்றும் காற்றின் இழுவை போன்ற பல்வேறு காரணிகளைத் தாண்டி நிகழ்த்தப்பட வேண்டியதாகும். நியூட்டனின் மூன்றாம் விதிப்படியே விலங்குகளின் இடம்பெயர்வுகள் ஆராயப்படுகின்றன; அதாவது, நிலையாய் இருக்கும் ஒரு விலங்கினம் முன்செல்ல வேறு எதனையேனும் பின்தள்ள வேண்டும். நிலவாழ் உயிரினங்கள் தரையை எதிர்த்துத் தள்ள வேண்டும், காற்றில் பறக்கும் விலங்கினங்கள் காற்றையும், நீர்வாழ் உயிரினங்கள் நீரையும் தள்ளியே முன்னேறுகின்றன.[2]

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.
  2. Bejan, Adrian; Marden, James H. (2006). "Constructing Animal Locomotion from New Thermodynamics Theory". American Scientist 94 (4): 342–349. doi:10.1511/2006.60.342 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்துகை&oldid=3697969" இலிருந்து மீள்விக்கப்பட்டது