உத்தம சோழீசுவரர் எனும் கந்தழீசுவரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தம சோழீசுவரர் கோவில் என்னும் கந்தழீசுவரர் கோவில் தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், தென்னேரி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இக்கோயில் சோழ மன்னன் கண்டராதித்தரின் பட்டத்தரசியும் மாமன்னன் இராஜராஜனின் பாட்டியுமான செம்பியன் மகாதேவியால் (கி.பி 910 – 1001) தன் மகன் உத்தம சோழனின் நினைவாகக் கட்டப்பட்டது.

'உற்றுக்காட்டு கோட்டத்து உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்து உத்தம சோழபுரம்' என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் இக்கோவில், அதிட்டானம் முதல் பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும், மேற்கட்டுமானம் செங்கல் மற்றும் சுதையினால் அமைக்கப்பட்ட வேசர விமானம் வகை ஆகும். இவ்வூரிலுள்ள ஆபத்சகாயேசுவரர் கோவிலை எழுப்பியவரும் செம்பியன்மாதேவியே ஆவார். இக்கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் ஊத்துக்காட்டிலிருந்து 6.2 கி.மீ. தொலைவிலும், வாலாஜாபாத்திலிருந்து 8.1 கி.மீ. தொலைவிலும், சுங்குவார்சத்திரத்திலிருந்து 9.8 கி.மீ. தொலைவிலும், ஏனாத்தூரிலிருந்து 15.5 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 18.6 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 21.8 கி.மீ. தொலைவிலும்,மறைமலைநகரிலிருந்து 26.6 கி.மீ. தொலைவிலும், தூசி மாமண்டூர் குடைவரையிலிருந்து 33.8 கி.மீ. தொலைவிலும், கூழமந்தலிலிருந்து 37.2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் பழைய சீவாரம் ஆகும். இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 631604 ஆகும். இதன் புவியமைவிடம் 12° 51' 7.92 N அட்சரேகை 79° 52' 28.92 E தீர்க்க ரேகை ஆகும். 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 2101 (ஆண்கள் 1022; பெண்கள் 1079) ஆகும்.

கோவில் அமைப்பு[தொகு]

கருவறை, அர்த்தமண்டபம், அந்தராளம், முக மண்டபம் ஆகிய அங்கங்களுடன் கூடிய இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதிட்டானம் முதல் பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும் மேற்கட்டுமானம் செங்கல் மற்றும் சுதையாலும் அமைக்கப்பட்ட வேசர விமான வகையாகும். தரையிலிருந்து சுமார் 3 அடி உயரத்தில் அதிட்டானம் அமைந்துள்ளது. [1]

இரும்பு வேலியுடன் விசாலமான இடத்தில் அமைந்துள்ள இக்கோயில் வளாகத்தின் மையத்தில், தரைமட்டத்தை விட குறைந்தது 3அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமைந்த இக்கற்றளி தற்பொழுது இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலின் கட்டுமான அமைப்பு கருவறை, அர்த்தமண்டபம், அந்தராளம், முக மண்டபத்துடன் கட்டப்பெற்றுள்ளது. அதுபோக கருவறை பகுதி பிரஸ்தரம் வரையில் கருங்கல்லாலும் அதன் மேல் உள்ள விமானப்பகுதி வேசர விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பெற்றுள்ளது. வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் சிற்பங்கள் பிரமாண்டமாய் வடிக்கப்பட்டு உள்ளன. இது சோழர்காலக் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலைக் கடக்க எட்டு படிக்கட்டுகள் உதவுகின்றன.[1]

தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள வாயிற்காவலர்களின் காலடியில் ஒரு பாம்பு யானையை விழுங்கும் நிகழ்வு காட்டப்பட்டுள்ளது. வாயிற்காவலர் ஒரு கையை கதையின் மீது வைத்தும், மற்றொரு கையால் தர்ஜனி முத்திரை காட்டுவதுடன், மேலிரு கரங்களுள் ஒன்றால் ஈசுவரன் இருக்கும் திசையைச் சுட்டிக்காட்டுவதுடன், மற்றொரு மேற்கரத்தை தலைக்குமேல் உயர்த்தி விஸ்மய முத்திரை எனும் பெருவியப்பை காட்டுகிறார். தஞ்சை வாயிற்காவலரை நினைவூட்டும் விதமாக இக்கோவிலின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட வாயிற்காவலர் சிலைகளுள் ஒன்று தர்ஜினி மற்றும் விஸ்மயம் முத்திரை காட்டுவது சிறப்பு. [2]

அதிட்டானம் பாதபந்த வகை அதிட்டானம் ஆகும். சுவர்ப்பகுதியில் நான்கு பட்டை, அரைவட்டம், 16 பட்டைகளுடன் கூடிய குட்ய ஸ்தம்பங்களுடன் தேவகோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. கருவறை தேவகோட்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே விஷ்ணு, வடக்கே பிரம்மன் மற்றும் மகிசாசுரமர்த்தினி ஆகிய திருமேனிகள் நிறுவப்பட்டுள்ளன. பிரஸ்தர உறுப்புகளாக வாஜனமும் அதற்குமேல் வலபியும் அமைந்துள்ளன. வாலபியில் பூத வரி இடம் பெற்றுள்ளது. இதற்கு மேலே கூரை அமைந்துள்ளது. கூரை முன்னிழுப்புப் பெற்று கபோதமாக நீட்சி பெற்றுள்ளது. கபோதத்தில் கூடுகள் இடம்பெற்றுள்ளன. கருவறையின் கூரைக்கு மேலே பூமிதேசம் இடம்பெற்றுள்ளது. பூமிதேசத்தில் வியாழவரி / யாளி வரி காட்டப்பட்டுள்ளன.

கருவறையில் மூலவர் உத்தம சோழீசுவரர் எனும் கந்தழீஸ்வரர் சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இலிங்க பாணம் உயர்ந்து நிற்கிறது. இலிங்கத்தின் பீடம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் விநாயகர் மற்றும் தவ்வையின் சிலைகளும் காணப்படுகின்றன. கோவிலின் முன்புறம் நிறுவப்பட்டுள்ள நந்தி சிலை பிற்காலத்தாக இருக்கலாம். வேசர விமானத்தின் கிரீவம், சிகரம், ஆகிய உறுப்புகளில் சுண்ணாம்புக் காரை உதிர்ந்துள்ளது. மகாமண்டபத்தில் தேவகோட்டங்கள் இடம்பெறவில்லை. [1]

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோவிலில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் உற்றுக்காட்டு கோட்டத்து உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்து உத்தம சோழ ஈஸ்வரத்தாழ்வார்க்கு ஸ்ரீ கண்டராதித்த தேவர் நம்பிராட்டியார் பராந்தக மாதேவடிகளான செம்பியன் மகாதேவியார் கண்டன் மதுராந்தக தேவராந உத்தமசோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் அமுது செய்கைக்கு செப்பு பாத்திரங்களை கொடையாக அளித்த செய்தியும் பாத்திரங்களின் எடைகளையும் குறிக்கும் பதிவுகள் இங்குள்ளன. செம்பியன்மாதேவியே இக்கோவிலுக்கு விளக்குகளையும் கொடையாக வழங்கியுள்ளார். [3]

முதாலாம் இராஜராஜ சோழனின் 20 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஸ்ரீஉத்தமசோழ சதுர்வேதி மங்கலத்து சபையோர் கூடி எடுத்த தீர்மானத்தைப் பதிவு செய்துள்ளது. கமுகு, வாழை போன்ற பயிர்களைப் பயிரிடுவதற்காக உழவர்கள் பயன்பெறும் வண்ணம், பாதி அளவு வரிவிலக்கினை பத்தாண்டுகளுக்கு வழங்கியது குறித்து சபையோர் மேற்கொண்ட தீர்மானம் இதுவாகும். [3]

சோழர் காலத்துக் கோவில்களில் இடம்பெறுவது போன்று, நந்தா விளக்கெரிப்பதற்காக 45 சாவா மூவா பேராடுகள் வழங்கப்பட்ட செய்தியினையும் ஒரு கல்வெட்டு பதிவு செய்துள்ளது. [3]

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கல்வெட்டுகள் 'குடவோலை' தேர்தல் முறை குறித்து விவரிக்கின்றன. உத்திரமேரூரிலிருந்த 30 குடும்புகளுக்கான குடவோலை தேர்தலை நடத்துவதற்கான செயல்முறை, வேட்பாளர்களுக்கான தகுதி, உத்திரமேரூர் கிராமசபையில் இடம்பெற்றிருந்த வாரியங்கள், குறித்து உத்திரமேரூர் கிராமசபையோர் நிறைவேற்றிய தீர்மானங்களை உத்திரமேரூர் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. தென்னேரி உத்தமசோழீசுவரர் கோவிலில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் கிராம நிர்வாகக் குழுக்களுக்கான ('பெரும்குறி சபை') வேட்பாளர்களுக்கான தகுதிகளை வகுத்துள்ளன. இக்கல்வெட்டின்படி, வேட்பாளர்கள் நிலம் வைத்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் மீது எந்த வழக்கும் நிலுவையில் இருக்கக்கூடாது. "அவர் மிகவும் படித்தவராக இருக்க வேண்டும் மற்றும் அவரது கணக்குகளை வெளிப்படையான முறையில் பராமரித்திருக்க வேண்டும்." உத்திரமேரூர் கோவில் போலல்லாமல், இக்கல்வெட்டு பற்றி மக்கள் மிகக் குறைவாகவே அறிந்துள்ளனர். [4][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Sri Kandaleeswarar Or Uthama Sozheeswarar Temple, Thenneri Lightuptemples
  2. யானையை விழுங்கும் பாம்பு.. இந்து தமிழ் திசை February 04, 2020
  3. 3.0 3.1 3.2 3.3 தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம். ச.கிருஷ்ணமூர்த்தி. 2010. மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். பக். 347 - 348. (மெய்யப்பன் வெளியீட்டு எண் 387)
  4. Chola inscriptions detail qualifications for civic officials B Kolappan. The Hindu October 04, 2021