உண்மை வடக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்மை வடக்கு என்பது, புவியின் மேற்பரப்பு வழியே புவியியல் வடமுனையை நோக்கிய திசை ஆகும். உண்மை வடக்கு, காந்த வடக்கு, வலையமைப்பு வடக்கு என்பவற்றினின்றும் வேறானது. காந்தவடக்கு காந்த வடமுனையை நோக்கிய திசையாகும். காந்தத் திசைகாட்டி காட்டும் திசை இதுவேயாகும். வலையமைப்பு வடக்கு என்பது, நிலப்பட எறியத்தில் காட்டப்படும் வடக்கு நோக்கிய கோடுகள் வழியேயான திசையாகும்.

உண்மை வடக்குத் திசை விண்ணில், வட விண்முனையால் குறிக்கப்படும். பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்கு துருவ விண்மீனை நோக்கிய திசையே இத் திசையாகும். எனினும், புவியின் அச்சுத் திசைமாற்றம் காரணமாக உண்மை வடக்கு ஒரு வில்வடிவத்தில் சுழல்கிறது. இந்த ஒழுக்கு முழுமை அடைய ஏறத்தாழ 25,000 ஆண்டுகள் செல்லும். 2102 ஆம் ஆண்டில், துருவ விண்மீன், விண் வடமுனைக்கு மிகக் குறுகிய தூரத்தில் வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவையகத்தாலும், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையாலும் வெளியிடப்படும் நிலப்படங்களில், உண்மை வடக்கு ஐந்துமுனை விண்மீன் வடிவத்தில் முடிவடையும் கோடொன்றினால் குறிக்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியப் படைத்துறை அளவையகம் வெளியிடும் நிலப்படங்களில் மூன்று வகை வடக்கையும் வேறுபடுத்திக் காட்டும் சிறிய வரைபடம் ஒன்று ஓரிடத்தில் காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மை_வடக்கு&oldid=2742820" இலிருந்து மீள்விக்கப்பட்டது