உடல் நலத்தகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடற்பயிற்சி,உடல் நிலைத்தகுதி

உடல் நலத்தகுதி என்பதை முழுநலம் என்று பொருள் கொள்ளலாம்.முழுநலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப்படுகிறது.

Fitness training women M2 (babaea maryam Tehran 2018) 1.jpg

அன்றாட வேலைகளைச் செய்யும்போது சோர்வின்றி செய்வதற்கான திறன் இருத்தல் வேண்டும். சுவாச உறுப்புகளும், இதயமும் நன்றாக இயங்கும்போது இந்த திறன் அதிகரிக்கும். மூச்சு வாங்குதல், படபடப்பு, அதிக வியர்வை, மயக்கம் போன்ற அடையாளங்கள் வேலை செய்யும் முழுநலனுக்கு எதிரானவை.ஒரு தசை அல்லது பல தசைகள் இணைந்து வலிமையை வெளிப்படுத்தலாம். அசையாத பொருளின்மீது சக்தியை செலுத்துவது ஐசோமெட்ரிக் உறுதி என்றும் அசையும் பொருளின்மீது சக்தியை வெளிப்படுத்துவது ஐசோடோனிக் உறுதி என்றும் வகைப்படுத்தலாம்.

நம் உடலின் எளிதான இயக்கங்களுக்கு மூட்டுகள் அவசியமானவை. மூட்டுக்களைச் சுற்றியுள்ள தசைகளின் உறுதியைப் பொறுத்து மூட்டுக்களின் அசைவுகள் அமைகின்றன. உடற்பயிற்சி மூலம் இந்த தசைகளுக்கு உரமேற்றலாம். உறுதியான உடலுக்கு ஈடாக அமைதியான மனம் அவசியம். எண்ணங்கள், உணர்ச்சிகள் இவையெல்லாம் கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.

ஒரு தூண்டுதலுக்கு நம்முடைய உடல் எவ்வளவு வேகமாக, எவ்வளவு சக்தியுடன் வினைபுரிகிறது என்பதும் கூட முழுநலனின் ஒரு கூறுதான். நம்முடைய உடலின் முழுநலன் சிறுவயதில் குறைவாகவும், வாலிபத்தில் உச்சத்திலும், 60 வயதிற்குமேல் குறைவாகவும் இருக்கும். 10முதல் 14 வயதுகளில் முழுநலன் வேகமாக இருக்கும்.20 வயதுகளில் உறுதி இருக்கும்.30 முதல் 40 வயதுகளில் வேலைசெய்யும் திறன் உச்சத்தில் இருக்கும்.40 வயதுக்கு மேல் வேகம், உறுதி ஆகியவை குறையும்.

ஆண்களுக்கு வேகமும், உறுதியும் அதிகம்.பெண்களுக்கு தொடர்ந்து வேலை செய்யும் திறன் அதிகம்.ஆண்களின் உடல் உறுதி பெண்களின் உடல் உறுதியைக் காட்டிலும் 30 முதல் 50 சதவீதம் அதிகமாக இருக்கும். நோய்களாலும், சரிவிகித உணவு இன்மையாலும், எடை குறைவுபடுவதாலும், எடை அதிகமாக இருப்பதாலும் முழுநலம் பாதிக்கப்படுகிறது. நிம்மதியான தூக்கம் உடல்திறனை அதிகமாக்குகிறது. தூக்கத்தினால் தசைகளின் திசுக்களில் தேங்கிவிட்ட கழிவுகள் நஞ்சுகள் வெளியேற்றப்படுகின்றன. பழுதுபட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_நலத்தகுதி&oldid=2788530" இருந்து மீள்விக்கப்பட்டது