உடற் பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உடற் பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே.

தாங்காற்றல், வளையும் தன்மை, பலம் என மூன்றையும் வளர்த்தெடுக்கும் வண்ணம் செயற்பாடுகளை தொகுத்து செய்தல் கூடிய பலன் தரும்.

இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.[1][2] உடற்பயிற்சியானது மன வளம் மேம்படுத்தி மன அழுத்தம் குறைத்து, தன்னம்பிக்கை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகிறது.[3] குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம்[4][5][6]

உடற்பயிற்சி என்பது, உடல் உறுப்புகளைச் சீரான வேகத்தில் இயங்க வைப்பதைக் குறிக்கின்றது. அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்துவதே உடற்பயிற்சியாகும். எனவே, நடப்பது, ஓடுவது, ஓர் ஒழுங்கின் பிரகாரம் உறுப்புகளை அசைப்பது முதலான அனைத்தையும் உடற்பயிற்சியெனலாம்.

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இரத்த ஓட்டம் துரிதப்படுகின்றது. உடல் உஷ்ணமடைகின்றது. அதனால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, கிருமிகள் அழிக்கப்படுகின்றன. உடலாரோக்கியம் உறுதிப்படுகின்றது. சுறுசுறுப்புடன் உடற்பயிற்சி செய்யும் போது உடல் உஷ்ணமாகி வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் செயலாற்றும் திறனும் அதிகரிக்கின்றன. உடலில் உட்புகும் நோய்க் கிருமிகளுடன் போராடி அவற்றை அழிப்பதுதான் வெள்ளை அணுக்களின் முக்கிய வேலையாகும்.

உண்ணும் உணவு, செயல் என்பவற்றைப் பொறுத்து மனித உடலில் கிடோன் யூரியா, லேக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன் போன்ற நச்சுத்தன்மை மிக்க கழிவுப் பொருட்கள் தோன்றுகின்றன. இவை தோல், நுரையீரல், சிறுநீரகம், ஜீரணமண்டலம் முதலியவை மூலம் நீக்கப்படுகின்றன. உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை இவற்றை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இக்கழிவுப் பொருட்கள் வெளியேறும் போது உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டு வியாதிகளும் அகன்று விடுகின்றன.

உணவையும், பிரதான வாயுவையும் இரத்தக் குழாய்கள் வழியாக உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்வதுதான் இரத்தத்தின் வேலை. உண்ட உணவும், பிராண வாயுவும் இரத்தக் குழாய்கள் மூலம் உடலிலுள்ள நுண்ணிய செல்களை அடைந்து சக்தியாய் வெளிப்படுகின்றன. இந்த செல்களுக்கு உயிர் கொடுப்பது இரத்த ஓட்டமே. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது.

உடற்பயிற்சியின் போது அதிகளவு பிராண வாயு தேவைப்படுகின்றது. அப்போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது. இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது.

உடற்பயிற்சியின் போது இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகின்றது. உடற்பயிற்சி செய்யும் நேரம் அதிகரிக்கும் போது, கரையும் கொழுப்பின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் உடலிலுள்ள கொழுப்பு வேகமாகக் கரைந்து உடலுக்குத் தேவையான சக்தி ஆகிறது. ஆகவே உடல் எடையைக் குறைக்கத் தகுந்த சாதனமாய் உடற்பயிற்சி விளங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stampfer MJ, Hu FB, Manson JE, Rimm EB, Willett WC; Hu; Manson; Rimm; Willett (2000). "Primary Prevention of Coronary Heart Disease in Women through Diet and Lifestyle". New England Journal of Medicine 343 (1): 16–22. doi:10.1056/NEJM200007063430103. பப்மெட் 10882764. 
  2. Hu FB, Manson JE, Stampfer MJ, Colditz G, Liu S, Solomon CG, Willett WC; Manson; Stampfer; Colditz; Liu; Solomon; Willett (2001). "Diet, lifestyle, and the risk of type 2 diabetes mellitus in women". The New England Journal of Medicine 345 (11): 790–797. doi:10.1056/NEJMoa010492. பப்மெட் 11556298. 
  3. "Exercise". medical-dictionary.thefreedictionary.com.
  4. "WHO: Obesity and overweight". who.int.
  5. American Association of Kidney Patients, "Physical Activity and Exercise: The Wonder Drug" Retrieved 29 November 2014
  6. The miracle drug. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்_பயிற்சி&oldid=1858381" இருந்து மீள்விக்கப்பட்டது