உள்ளடக்கத்துக்குச் செல்

ஈ. வி. கல்யாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ. வி. கல்யாணி
தமிழ்நாட்டின் முதல் பெண் மகப்பேறு மருத்துவர்
பிறப்பு1908
மயிலாப்பூர், சென்னை
இறப்பு2001
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஈச்சம்பாடி வரதன் கல்யாணி
பெற்றோர்ஈ. வி ஸ்ரீனிவாசன் (தந்தை), கண்ணம்மாள் (தாய்)

ஈ. வி. கல்யாணி (1908 – 27 சூலை 2001) தாய்மை மற்றும் மகப்பேறு முதுகலை மருத்துவப்பட்டம் பெற்ற தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்[1]. சென்னை மகளிருக்கான தனியார் மருத்துவமனையை தோற்றுவித்தவர்.

இளமைக் காலம்

[தொகு]

1908 ஆம் ஆண்டு கண் மருத்துவரான ஈ.வி. ஸ்ரீனிவாசன், கண்ணமாளின் மகளாகப் பிறந்தார் ஈ. வி. கல்யாணி. இவரின் முழு பெயர் ஈச்சம்பாடி வரதன் கல்யாணி. பள்ளிப் படிப்பில் தீவிரமாக இருந்த சிறுமிக்கு அப்போதைய வழக்கம் போல திருமணம் செய்து வைக்கப்பட்டது. விதவையாக நின்றாள் சிறுமி. அன்றைய சூழலில் கைம்பெண்ணான பார்ப்பன சமூகச் சிறுமிகள் மொட்டை அடிக்கப்பட்டு காவி உடுத்தி, செக்கு மாடு போல வீட்டு வேலைகளைச் செய்து உழன்று, வீடுகளுக்குள் முடங்கி சொல்லவொண்ணாத் துயரை அனுபவித்தார்கள்.

ஆனால் தன் மகளுக்கு அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்று உறுதி பூண்ட ஸ்ரீனிவாசன் துணை மாவட்ட ஆட்சியராக[2] இருந்த தன் தந்தைக்கு கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறினார். சமூகக் கோட்பாடுகளுக்கு எதிரான தன் முடிவால் தன் தந்தைக்கு எந்த அவப்பெயரும் ஊராரால் வந்துவிடக் கூடாது என்று கருதுவதால், எழும்பூர் காசா மேஜர் சாலையில் குடியேறப்போவதாக கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.

ஸ்ரீனிவாசனின் மூத்த மகள் கல்யாணி. அடுத்தடுத்து ஈ. கே. ஸ்ரீனிவாசன், ஈ.வி. ராஜகோபாலன் என இரண்டு மகன்கள். கடைசி மகள் சிறு வயதிலேயே மரணமடைந்துவிட்டார். பள்ளிக்கு மீண்டும் செல்லத் துவங்கிய கல்யாணியை பள்ளிக்கு கொண்டு விட்டு திரும்ப அழைத்து வரும் பொறுப்பை செய்தார் சகோதரர் ராஜகோபாலன். பள்ளிப்படிப்பு முடித்து மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்தார் கல்யாணி. சென்னை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

மருத்துவப் பணி

[தொகு]

1932 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து முடித்த கல்யாணி, 1934 ஆம் ஆண்டு டிஜிஓ பட்டம் பெற்றார்[1]. 1937 ஆம் ஆண்டு தாய்மை மற்றும் மகப்பேறு முதுநிலை பட்டம் பெற்றார். இந்தப் பட்டம் பெற்ற முதல் தமிழ்ப் பெண் கல்யாணி ஆவார். 1934 ஆம் ஆண்டு எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாகப் பணியைத் தொடங்கிய கல்யாணி, 1965 ஆம் ஆண்டு அதன் கௌரவ சிவில் சர்ஜன் மற்றும் விரிவுரையாளாரகப் பதவி விலகினார். மாணவர்களுக்குக் கற்று தருவது கல்யாணிக்கு மிகவும் பிடித்த பணி. இறுதி பத்தாண்டு காலம் இந்தப் பதவியை வகித்தார்.   

முதல் தனியார் மகளிர் மருத்துவமனை

[தொகு]

1940 ஆம் ஆண்டு சென்னை எட்வர்ட்ஸ் எலியட்ஸ் சாலையிலிருந்து மிகவும் அருகில் அமைந்த கல்யாணியின் இல்லமான “துவாராகா”விற்குள்ளேயே “கல்யாணி மருத்துவமனை[3]” தொடங்கப்பட்டது. நான்கு படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்தச் சிறிய மருத்துவமனை, பெண்களுக்காக நகரில் தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனையாகும்.

கௌரவ மருத்துவராக பணியாற்றினாலும், இந்த மருத்துவமனையில் மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிப் பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார் கல்யாணி.

1965 ஆம் ஆண்டு வரை குஜராத்தி சஹாயகாரி மருத்துவமனையில் தனி மகப்பேறு பிரிவை அமைத்து, அதைத் திறம்பட நடத்தி வந்தார். கூடுதலாக வாலன்டரி மருத்துவ மையத்திலும் தன்னார்வ பணியாற்றினார். இவர் பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்துள்ளார். அவரிடம் பேறுகால சிகிச்சை பெற்ற பெண்கள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு கல்யாண், கல்யாணி என்று அவர் பெயரையே வைத்திருக்கிறார்கள்.

அருகே இருந்த சி.எஸ். ஐ கல்யாணி மருத்துவமனையால் குழப்பம் வர, கல்யாணி மருத்துவமனை ஈ.வி. கல்யாணி[2] மருத்துவமனை எனப் பெயர்மாற்றம் அடைந்தது. கல்யாணி அம்மாள் முதுமை காரணமாக 1990[2] ஆம் ஆண்டுக்கு பிறகு மருத்துவமனை நிர்வாகத்தை அவர் உறவினர்களான மருத்துவர் கீதா அர்ஜுனும்[4], உமா ராமும் கவனித்துக் கொண்டனர்.

இறப்பு

[தொகு]

2001 ஆம் ஆண்டு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட கல்யாணி, தன் 93 வது வயதில் சூலை 27 அன்று இறந்தார்.   

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 லூயிஸ், நிவேதிதா (2021). முதல் பெண்கள் (2nd ed.). மைத்ரி பதிப்பகம். p. 60.
  2. 1 2 3 "EV Kalyani (Ammakutty)". geni_family_tree (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-24. Retrieved 2025-03-19.
  3. "Seethapathy Clinic & Hospital - Obstetrics & Gynaecology". seethapathyclinic.org. Retrieved 2025-03-19.
  4. "woman economic forum". DR. Gita Arjun (in ஆங்கிலம்). Retrieved 2025-03-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._வி._கல்யாணி&oldid=4269408" இலிருந்து மீள்விக்கப்பட்டது