ஈரோடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர்.

ஈரோட்டிற்கு மறந்தை, உறந்தை, மயிலை, மத்தியபுரி, கபாலபுரி என்று பல்வேறு பெயர்களை ஈரோடு தலபுராணம் கூறுகிறது. இந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றது. சோழர்கள் காலத்தில் ‘மூவேந்த சோழன் சதுர்வேத மங்கலம்’ என்று ஈரோட்டிற்கு பெயர் வைத்து நான்கு வேதங்கள் ஓதக்கூடிய அந்தணர்களை குடியேற்றினார்களாம்.

வேறு சிலர் ஈரோடை என்பதற்கு மாறாக ‘ஈர ஓடு’ என்பதே ஈரோடு ஆயிற்று என்பர். சிவபெருமான் தலையில் கங்கை ஆறு இருக்கின்ற காரணத்தினால், எப்பொழுதும் ஐயனின் தலை ஈரமாகவே இருக்குமாம். ஈரமான தலை ஓட்டுக்கு ‘ஆர்த்திர கபாலம்’ என்பது பெயர். எனவே ஈரோடு கோட்டை சிவபெருமானுக்கு, ஆர்த்திரகபாலீசுவரர் என்றும், ஈரோட்டுக்கு ஆர்த்திரகபாலபுரி என்றும் பெயர்க்காரணம் கூறுவர். சிலர், “காபாலிக சைவம்” இங்கு இருந்தது எனச் சான்றாக இப்பெயரைக் கூறுவர்.

வேறு சிலர் காளிதேவி பிரம்மன் தலையைத் துண்டாக்கிய பொழுது ஈரமான ஓட்டுப்பகுதி விழுந்த இடம் பேரோடு என்றும், சிறிய பகுதி விழுந்த இடம் சிற்றோடு என்றும், வெண்மையான பகுதி விழுந்த இடம் வெள்ளோடு எனவும் ஆயிற்று என்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடை&oldid=2511986" இருந்து மீள்விக்கப்பட்டது