ஈரோடு போக்குவரத்து
ஈரோடு மாவட்டத்தின் தலைநகராக உள்ள ஈரோடு மாநகரில் ஒரு விரிவான சாலை மற்றும் தொடருந்துப் போக்குவரத்து சேவை உள்ளது.
போக்குவரத்தை கண்காணித்து சீர் செய்யவும் ஒழுங்குபடுத்தவும், ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு போக்குவரத்துக் கோட்டம் ஒன்று செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் ஈரோடு மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைகள் வருகின்றன. இதன்கீழ், ஈரோடு மாநகரத்தில், ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு என இரண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கரூர் பிரதான சாலை சோலார் லக்காபுரத்தை அடுத்த கொள்ளுக்காட்டுமேட்டிலும் ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சத்தி பிரதான சாலையில் பெரியசேமூர் அருகிலும் அமைந்துள்ளது. மேலும் புற நகர்ப்பகுதிகளான பெருந்துறையில் ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், பவானியில் ஒரு பகுதி நேரப் போக்குவரத்து அலுவலகமும் செயல்படுகிறது.
சாலைகள்
[தொகு]ஈரோடு மாநகரம், சாலைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 544ல் அமைந்துள்ளது. இது கோயம்புத்தூர் நகரில் இருந்து 100 கி.மீ. கிழக்கிலும் மற்றும் சேலம் நகரில் இருந்து 60 கி.மீ. மேற்கிலும் அமைந்துள்ளது. இது சேலம் மற்றும் கொச்சியை இணைக்கிறது.
இங்குள்ள முக்கிய சாலைகள் பின்வருமாறு:
- ஈரோட்டில் பெண்கள் கல்விக்கு வித்திட்ட, கலைமகள் கல்வி நிலையம் நிறுவனர் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் நினைவாக உள்ள சாலை. [1]
- தேசிய நெடுஞ்சாலை 544 : சேலம் - ஈரோடு - கோயம்புத்தூர் - கொச்சி
- தேசிய நெடுஞ்சாலை 544H : தொப்பூர் - மேட்டூர் - பவானி - ஈரோடு
- தேசிய நெடுஞ்சாலை 381எ : வெள்ளக்கோவில் - முத்தூர்-மொடக்குறிச்சி - ஈரோடு - சங்ககிரி
- மாநில நெடுஞ்சாலை 15 : ஈரோடு-கோபி-சத்தி-மேட்டுப்பாளையம்-கோத்தகிரி-ஊட்டி.
- மாநில நெடுஞ்சாலை 83A : ஈரோடு - காங்கேயம் - தாராபுரம் - பழனி.
- மாநில நெடுஞ்சாலை 79 : ஈரோடு - திருச்செங்கோடு - இராசிபுரம் - ஆத்தூர்.
- மாநில நெடுஞ்சாலை 84 : ஈரோடு -கொடுமுடி - கரூர்.
- மாநில நெடுஞ்சாலை 96 : ஈரோடு - பெருந்துறை - சென்னிமலை - காங்கேயம்.
- மாநில நெடுஞ்சாலை 173 : ஈரோடு - நசியனூர் - திங்களூர்
- உள் வட்டச்சாலை (MDR-62) : திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமூர்-பி.பெ.அக்ரஹாரம் இணைப்பு சாலை பல்வழித்தடத்திலான உள்வட்டச்சாலையாகத் தரம் உயர்த்தப்படுகிறது
- வெளி வட்டச்சாலை : கொக்கராயன்பேட்டை (SH-198) - லக்காபுரம் பரிசல்துறை (SH-84) - 46 புதூர் பேருந்து நிலையம் - முத்துக்கவுண்டன்பாளையம் (NH-381A) - ஆணைக்கல்பாளையம் (SH-83A) - ரங்கம்பாளையம் (MDR-108) - நஞ்சனாபுரம் (SH-96) - நசியனூர் (SH-173) - சித்தோடு (SH-15) - லட்சுமி நகர் (NH-544H)
மேலும் நகரின் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் விதமாக காவிரி நதிக்கரை சாலை, திண்டல் உயர்மட்ட சாலை மற்றும் பவானிரோடு உயர்மட்டச் சாலை போன்ற சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
பேருந்து நிலையம்
[தொகு]ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அனைத்துப் பேருந்துகளும் வந்து சேரும் இடமாக உள்ளது. இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டிலுள்ள உள்ள மற்ற இடங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. 24 மணி நேரமும் சுற்றுப்புறத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பேருந்துப் போக்குவரத்து சேவைகள் உள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை(கோயம்புத்தூர்), ஈரோடு மாவட்டத்தின் சாலை போக்குவரத்துக்கு தேவையான உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து சேவைகளை இயக்குகின்றன. மாநில விரைவுப்பேருந்து போக்குவரத்து கழகம், பல்வேறு இடங்களுக்கு விரைவுப்பேருந்துகளை இயக்குகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) கோயம்புத்தூர் கோட்டத்தின் கீழ் ஈரோட்டில் தனி மண்டலம் உள்ளது. இது முதலில் ஜீவா போக்குவரத்து கழகம் என அழைக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செயல்படுகிறது. ஈரோடு காசிபாளையம்-1,2, பள்ளிபாளையம், பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, கொடுமுடி ஆகிய பணிமனைகளின் மூலம் ஈரோடு மாநகருக்கான நகரப் பேருந்துகள் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான பேருந்துகளின் எண்ணிக்கை 1,218 ஆகும். மத்தியப் பேருந்து நிலையத்தின் போக்குவரத்தைக் குறைப்பதற்காக சோலார்புதுார் மற்றும் சித்தோட்டில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
இது தவிர மாநகரில் சூரம்பட்டி மற்றும் வெளி வட்டச் சாலையிலுள்ள 46-புதூர் ஆகிய இடங்களில் சிறிய நகரப் பேருந்து நிலையங்கள் உள்ளன.
ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்களை இங்கே காணலாம்.
தொடருந்து
[தொகு]ஈரோடு சந்திப்பிலிருந்து பின்வரும் இணைப்புகள் உள்ளன:
இ | இலக்கு | வழி | இருப்புப்பாதை |
---|---|---|---|
1 | சேலம் | சங்கரி துர்க் | அகலப் பாதை, மின்மயம் – இரட்டைத் தடம் |
2 | கோவை | திருப்பூர் | அகலப் பாதை, மின்மயம் – இரட்டைத் தடம் |
3 | திருச்சி | கரூர் (கரூர் மாவட்டம்) | அகலப் பாதை,
மின்மயம் - ஒற்றைத் தடம் |
மைசூர் (கோபிசெட்டிபாளையம், சாம்ராஜ் நகர் வழியாக) மற்றும் பழனி ஆகிய இரு வழிதடங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து
[தொகு]கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் 90 கி.மீ. தூரத்தில் உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, புவனேஷ்வர், சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, கோழிக்கோடு, மும்பை, புனே மற்றும் ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கு, தொடர்ச்சியாக விமான சேவைகள் உள்ளன.
மேலும் பார்க்க
[தொகு]- உள் வட்டச் சாலை, ஈரோடு
- திண்டல் உயர்மட்ட சாலை
- காவிரி நதிக்கரை சாலை, ஈரோடு
- சோலார் பேருந்து நிலையம், ஈரோடு