உள்ளடக்கத்துக்குச் செல்

ஈனியாடி

ஆள்கூறுகள்: 38°24′28″N 21°11′48″E / 38.4077°N 21.1966°E / 38.4077; 21.1966
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைய நகரத்தின் இடிபாடுகள்

ஈனியாடி (Oeniadae அல்லது Oiniadai பண்டைக் கிரேக்கம்Οἰνιάδαι ), அல்லது Oeneiadae அல்லது Oineiadai (Οἰνειάδαι),[1] என்பது பண்டைய அகர்னானியாவில் இருந்த ஒரு நகரமாகும். இது அச்செலஸ் ஆற்றின் மேற்குக் கரையில் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து 10 மைல் (16 கிமீ) தொலைவில் அமைந்திருந்தது. இது அகர்னானியன் நகரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இது சதுப்பு நிலங்களால் சூழப்பட்டிருந்தது. அவற்றில் பல பெரிய அளவில் ஆழம் கொண்டவை. இவை குளிர்காலத்தில் படையெடுத்து வருபவர்களை நெருங்க முடியாததாக நகரத்தை பாதுகாத்தது. இது மிகவும் வளமானதாக இருந்த பாராசெலாய்டிஸ் என்ற மாவட்டத்தைக் கொண்டிருந்தது.

இந்த நகரம் முதலில் கிமு 455 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் மெசேனியன் போரின் முடிவில் ஏதெனியர்களால் நவ்ப்பாக்ட்டசில் குடியேறப்பட்ட மெசேனியர்கள், சிறிது காலத்திற்குப் பிறகு ஈனியாடிக்கு எதிராக ஒரு படையெப்பை மேற்கொண்டு, அதை தங்கள் வசமாக்கிக்கொண்டனர். ஆனால் ஒரு ஆண்டு அதை தங்கள் கைவசம் வைத்திருந்த நிலையில், அவர்கள் அகர்னானியர்களால் தாக்கப்பட்டனர். பின்னர் நகரத்தை கைவிட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.[2] அந்த நேரத்தில் ஈனியாடி ஏதென்சின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டது, இது மெசேனியர்களை இந்த இடத்தைத் தாக்கத் தூண்டிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. பெலோபொன்னேசியன் போருக்கு இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (454 கிமு) பெரிக்கிள்ஸ் இந்நகரத்தை முற்றுகையிட்டார், ஆனால் இதைக் கைப்பற்ற முடியவில்லை.[3][4] பெலோபொன்னேசியன் போரில், ஈனியாடி ஏதெனியர்களை எதிர்த்தது, மேலும் அஸ்டகஸ் தவிர, லாசிடெமோனியர்களுக்கு பக்கபலமாக இருந்த ஒரே அகார்னேனியன் நகரமாக இது இருந்தது. போரின் மூன்றாம் ஆண்டில் (429 கி.மு.) ஏதெனியன் உயர்வைப் பாதுகாக்க போர்மியன் அகார்னானியாவிற்கு ஒரு போர்ப் பயணத்தை மேற்கொண்டார்; அவர் அஸ்டாகசை அழைத்துச் சென்றாலும், அவர் ஓனியாடேவுக்கு எதிராக போரைத் தொடரவில்லை. ஏனெனில் அது குளிர்காலம், அந்த பருவத்தில் நகரத்தை சூழ்ந்துள்ள சதுப்பு நிலங்கள் நகரத்தை அனைத்து தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்தது. அடுத்த ஆண்டில் (428 கிமு) அவரது மகன் அசோபியஸ் அச்செலஸ் கப்பலில் ஏறி, ஓனியாடே பிரதேசத்தை அழித்தார்; ஆனால் அது கிமு 424 வரை மற்ற அனைத்து அகர்னானியர்களின் உதவியுடன் டெமோஸ்தனிஸ், ஏதெனியன் கூட்டணியில் சேர நகரத்தினரைக் கட்டாயப்படுத்தினார்.[5]

மாசிடோனிய மற்றும் உரோமானியப் போர்களின் போது இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. பேரரசர் அலெக்சாந்தரின் காலத்தில், அச்செலசின் மேற்குக் கரையில் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய ஏட்டோலியர்கள், ஈனியாடியைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர். மேலும் அலெக்சாந்தரின் பழிவாங்கலின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதன் குடிமக்கள் மிகவும் மோசமான முறையில் வெளியேற்றினர்.[6] ஈனியாடி கிமு 219 வரை ஏட்டோலியர்களின் கைகளில் இருந்தது இது மாசிடோனியாவின் ஐந்தாம் பிலிப்பால் கைப்பற்றப்பட்டது. இந்த இடத்தின் முக்கியத்துவத்தை அறிந்த இந்த மன்னர், கோட்டையை மேலும் பலப்படுத்தினார். மேலும் துறைமுகத்தையும் ஆயுதக் கிடங்கையும் மதில்கள் மூலம் கோட்டையுடன் இணைத்தார்.[7] கிமு 211 இல்  ஈனியாடி, அருகிலுள்ள நெசஸ் (Νῆσος) அல்லது நாச்சுடன் சேர்ந்து, மார்கஸ் வலேரியஸ் லேவினசின் தலைமையில் உரோமானியர்களால் கைப்பற்றபட்டு, அப்போது அவர்களது கூட்டாளிகளாக இருந்த ஏட்டோலியன்களுக்கு வழங்கப்பட்டது; ஆனால் கிமு 189 இல் உரோமானியர்களுக்கும் ஏட்டோலியர்களுக்கும் இடையே ஏற்பட்ட சமாதானத்தின் நிபந்தனைகளில் ஒன்றின் காரணமாக இது அகர்னானியர்களால் மீட்டெடுக்கப்பட்டது.[8][9][10][11] இந்தக் காலகட்டத்திலிருந்து ஈனியாடி வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறது. ஆனால் இது இசுட்ராபோவின் காலத்திலும் தொடர்ந்து இருந்தது. [12]

இந்தத் தளம் நவீன திரிகார்டோவிற்கு அருகில் உள்ளது.[13][14]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈனியாடி&oldid=3412363" இலிருந்து மீள்விக்கப்பட்டது