இசநமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இஸநாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
天瓊を以て滄海を探るの図.வலது புறத்தில் இசநாகி, இடது புறத்தில் இசநாமி

சப்பானிய புராணக்கதைகளில், இசநமி(Izanami) (イザナミ? 伊弉冉尊 or 伊邪那美命, பொருள் "அழைப்பவள்") படைப்பு மற்றும் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் இசநகியின் மனைவி. இவரை இசநமி-நொ-மிக்கொட்டொ அல்லது இசநமி-நொ-கமி எனவும் அழைப்பர்.[1][2][3]

படைப்பின் தெய்வம்[தொகு]

பிரபஞ்சத்தின் மூத்த தெய்வங்களான குனிதோகோதாச்சி மற்றும் அமெனோமினாகனுசி ஆகியோர் இசநகி மற்றும் இசநமி என்ற இரண்டு இளம் கடவுள்களை படைத்தனர். அக்காலகட்டத்தில் பூமி நீரினால் மட்டும் நிரம்பிருந்தது. எனவே இவர்கள் இருவரும் நிலத்தை உருவாக்க பூமிக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் பணியில் உதவுதற்காக அமெ-நொ-நுபொக்கொ என்ற விண்ணுலக ஈட்டியை அவர்களுக்கு அளித்தனர். இவர்கள் இருவரும் விண்ணுலகத்தையும் பூமியையும் இணைக்கும் பாலமான அமெ-நொ-உக்கிகசி என்ற மிதக்கும் பாலத்தின் மூலம் பூமியை அடைந்தனர். பாலத்தில் இருந்து கொண்டே தங்களுடைய ஈட்டியினால் கீழே உள்ள கடலை கடந்தனர். ஈட்டியில் இருந்த கீழே விழுந்த உப்பு நீர்த்துளிகளினால் ஒனோகோரோசிமா என்ற தீவு உருவாகியது. பாலத்தில் இருந்து இறங்கியவுடன் இருவரும் அத்தீவில் தங்களுக்கு ஓர் இல்லத்தை அமைத்துக்கொண்டனர்.

இருவரும் இணைய வேண்டி அமெ-நொ-மிகாசிரா என்ற விண்ணுலகத்தின் தூணை அமைத்தனர். அதனை சுற்றி யஇரோ-டொனோ என்ற மாளிகையையும் அமைத்தனர். இசநமியும் இசநகியும் தூணை எதிர் திசைகளில் சுற்றி வந்தனர். இருவரும் சந்தித்த போது, இசநமியே முதலில் பேசினாள். இசநகிக்கு இது சரியெனப்படவில்லை. எனினும் இருவரும் இணைந்தனர். இதன் காரணமாக அவர்களுக்கு இருக்கோ மற்றும் அவசிமா என்ற இரண்டு குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் குறைபாடுள்ளவையாதலால் அவை தெய்வங்களாக கருதப்படவில்லை.

இசநகியும் இசநமியும் அக்குழந்தைகளை ஒரு படகில் ஏற்றி கடலில் விட்டு விட்டனர். பிறகு அவர்கள் மற்ற தெய்வங்களிடம் சென்று தாங்கள் செய்த தவறை குறித்து வினவினர். அப்போது தான் இணையும் போது ஆண் கடவுள் முதலில் பேச வேண்டும் என அறிந்து கொண்டனர். பின்னர் மீண்டும் தூணைச்சுற்றி இணைய முற்பட்டனர், இருவரும் சந்தித்த வேளையில் இசநகி முதன் முதலில் பேசினார். பிறகு இருவரும் இணைந்தனர். இதனால் இவர்களுக்கு சப்பானின் எட்டு முக்கியமான தீவுகள் அல்லது ஓயசிமா தோன்றின.

  • அவசி
  • இயொ (பிறகு சிக்கோக்கு)
  • ஒகி
  • ட்சுகுசி (பிறகு கியூசி)
  • இக்கி
  • ட்சுசிமா
  • சடொ
  • யமட்டொ (பிறகு ஒன்சு)
கவனிக்க ஒக்கைடோ, சிசிமா மற்றும் ஒகிநவா போன்ற முக்கியமாக தீவுகள் சப்பானாக பழங்காலத்தில் அறியப்படவில்லை.

மேலும் அவர்கள் இன்னும் ஆறு தீவுகளையும் பல்வேறு தெய்வங்களையும் பெற்றெடுத்தனர். இசநமி நெருப்பின் தெய்வமான ககுட்சூசியை பெற்றெடுத்தவுடன் மரணம் அடைந்தார். இவள் உடல் இபா மலையில் அடக்கம் செய்யப்பட்டது. இவளுடைய இறப்பால் மிகுந்த கோபமுற்ற இசநகி ககுட்சூசியை தன் வாளால் பல துண்டுகளாக வெட்டிக் கொன்றார். அந்த துண்டுகளில் இருந்து பலவேறு தெய்வங்கள் தோன்றின.

இறப்பின் தெய்வம்[தொகு]

தன் மனைவியின் பிரிவை தாங்க இயலாத இசநகி இறந்தவர்களின் உலகமான யொமிக்குச் சென்றார். முதலில் பல நிழல்கள் மறைத்திருந்ததால் இசநாமியை காண இயலவில்லை. எனினும் பிறகு இசநமியை கண்டுகொண்டார். தன்னுடன் வருமாறு தன் மனைவியை கேட்டுக்கொண்டார். ஆனால் இசநகி மிகவும் தாமதமாக வந்துவிட்டதாக இசநாமி தெரிவித்தாள். மேலும் இசநமி ஏற்கனவே யொமி உலகத்தின் உணவை உட்கொண்டுவிட்டதால் அந்த உலகத்தில் ஒருவராக மாறிவிட்டார். எனவே மறுபடியும் பூமிக்கு திரும்ப இயலாமல் போனது.

இதைக்கேள்விப்பட்டு இசநகி அதிர்ச்சியடைந்த போதிலும், அவர் இசநாமியை மீட்டுச்செல்வதில் உறுதியாக இருந்தார். இசநமி உறங்கிய வேளையில், இசநகி தன்னுடைய நீண்ட கூந்தலை வாரி முடித்து, அதில் தீ வைத்து அதையே விளக்காக பயன்படுத்தினார். இருண்ட உலகமான யொமியில் ஒளி புகுந்தவுடன், தன்னுடைய அழகான மனைவி இசநமியின் கோர உருவத்தை கண்டு அலறினார். இசநமியின் உடல் அழுகிய நிலையில் புழுக்களோடு இருந்தது.

தனது பயத்தை கட்டுப்படுத்த இயலாமல் அவளை விட்டு நீங்கி, மீண்டும் பூமிக்கு திரும்ப நினைத்து அவ்விடத்தை விட்டு ஓடினார். இதனால் வெறுப்படைந்த இசநமி கோபத்துடன் இசநகியை பின் தொடர்ந்தார். யொமி உலகத்தின் சிகொமேக்களை அனுப்பி இசநகியை திரும்ப கொண்டுவருமாறு பணித்தார்.

இசநகி ஒருவழியாக யொமொட்சுஇரசக்கா என்றழைக்கப்படும் யொமி உலகத்தின் வாயிலை அடைந்தார். மேலும் அதை பெரிய பாறையின் மூலம் மூடினார். பாறையின் பின்னே இருந்த இசநமி, தன்னை விட்டு பிரிந்தால் ஆயிரம் உயிர்களை உலகத்தில் இருந்து பறித்து விடுவதாக கூறினார். இதற்கு பதிலாக இசநகி தான் 1500 பேருக்கு உயிரைத் தருவேன் என கூறினார். இந்த நிகழ்வில் இருந்து, இசநாகி இறப்பின் தெய்வமாக அறியப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Encyclopedia of Shinto - Home : Kami in Classic Texts : Omodaru, Ayakashikone". eos.kokugakuin.ac.jp. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  2. Kadoya, Atsushi. "Izanagi". Encyclopedia of Shinto. Kokugakuin University. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Phillipi, Donald L. (1969). Kojiki. Tokyo: University of Tokyo Press. p. 482.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசநமி&oldid=3768843" இலிருந்து மீள்விக்கப்பட்டது