இழை மின்னோட்டமும் குழாய் மின்னோட்டமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சு-கதிர்க் குழாயில் இழை மின்னோட்டம் (filament current) மற்றும் குழாய் மின்னோட்டம் (tube current) ஆகிய இருவேறு மின்னோட்டங்கள் பாய்கின்றன. இழை மின்னோட்டம் வெப்ப இலத்திரன்களைக் கொடுக்க எதிர் மின்முனையாகப் பயன்படும் இழையில் பாயும் மின்னோட்டம். இது சில ஆம்பியர் அளவினதாக இருக்கும். குழாய் மின்னோட்டம் குழாயில் எதிர்முனையிலிருந்து நேர்முனையினை நோக்கிப் பாயும் மின்னோட்டமாகும். இம் மின்னோட்டம் பொதுவாக மில்லி ஆம்பியரில் இருக்கும். நோயறி கதிரியலில் இது 120 மில்லி ஆம்பியர் வரையிலும் உள்ளது.

இவ்விரு மின்னோட்டங்களும் தனித்தனியானவையானாலும் ஒன்றிற்கொன்று தொடர்புடையன. இவைகளை இணைக்கும் ஒரு காரணி எதிர்மின் முனைக்கருகில் காணப்படும் இட மின்னூட்டமாகும் (Space charge). குழாயில் இருமின் முனைகளுக்குமுள்ள மின் அழுத்த வேறுபாடு (P.D) குறைவாக உள்ளபோது, இழையிலிருந்து இலத்திரன்கள் விரைந்து வெளிப்பட்டலும் அவைகள் மெதுவாகவே வேக வளர்ச்சி பெறுகின்றன. இதன் விளைவாக ஒரு இலத்திரன் மேகம் (Electron cloud) உருவாகிறது. இது எதிர்முனைக்கருகிலேயே இருக்கும். இதன் காரணமாக அதிக இலத்திரன்கள் வெளிப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. குறைந்த இழை மின்னோட்டத்தில் குறைந்த மின் அழுத்த வேறுபாட்டிலேயே குழாய் மின்னோட்டம் ஒரு தெவிட்டிய நிலையைப் பெறுகிறது. இந்த மின்னழுத்த வேறுபாட்டைக் கூட்டினாலும் குழாய் மின்னோட்டம் அதிகரிப்பதில்லை. இப்போது இழை மின்னோட்டத்தினை கூட்டியே அதிக மிகுந்த குழாய் மின்னோட்டத்தினைப் பெறமுடியும். இங்கு இழை மின்னோட்டம் எக்சு கதிர்களின் அளவையும் மி.அ.வே. கதிர்களின் பண்பையும் (ஊடுருவற்திறன்) தீர்மானிக்கின்றன.

உதவி-பி.எ ஆர் சி கட்டுரை