உள்ளடக்கத்துக்குச் செல்

இளைய மகாமகம் 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளைய மகாமகம் 2015 கும்பகோணத்தில் இவ்வாண்டு நடைபெறும் சிறப்பான விழாவாகும். ஒவ்வொரு மகாமகத்தின்போது அதற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கொள்ளப்படும் நிலையில் 2015ஆம் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கருதப்படுகிறது.[கு 1] கும்பகோணத்தில் இளைய மகாமகத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் பந்தல்கால் முகூர்த்த விழா 3.2.2015 (திங்கட்கிழமை, ஜய, தை 20) நடைபெற்றது. இவ்விழா கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரன் கோயில் ஆகிய கோயில்களில் நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றன. பின்னர் பந்தல் காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது. [1]

கொடியேற்றம்

[தொகு]

சைவக் கோயில்கள்

[தொகு]

23.2.2015 (திங்கட்கிழமை, ஜய, மாசி 11) கும்பகோணத்திலுள்ள காசி விசுவநாதர் கோயில், ஆதிகும்பேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாள் விழா தொடங்கியது. [2] இவ்விழா நாட்களில் சேஷ, கமல, பூத, கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம், கைலாச, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுவது சிறப்பானதாகும். [3]

26.2.2015 (வியாழக்கிழமை, ஜய, மாசி 14) கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பின்னர் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. [4]

27.2.2015 (வெள்ளிக்கிழமை, ஜய, மாசி 15) கும்பேஸ்வரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில்களில் ஓலைச்சப்பரத்தில் இறைவனும் இறைவியும் வீதியுலா வந்தனர். [5] கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து ஐந்து சப்பரங்கள் வீதியுலா வந்தன.

வைணவக் கோயில்கள்

[தொகு]

சிவன் கோயில்களில் நடைபெற்றதுபோலவே பெருமாள் கோயிலான வராகப்பெருமாள் கோயிலில் 24.2.2015 அன்று கொடியேற்றம் நடைபெற்றது. திருப்பணி நடைபெறுவதால் சக்கரபாணி கோயில், சார்ங்கபாணி கோயில் ஆகிய கோயில்களில் கொடியேற்றம் நடைபெறவில்லை. [6]

27.2.2015 அன்று வராகப்பெருமாள் கோயிலில் கருட சேவையுடன், ஓலைச்சப்பரத்தில் இறைவனும் இறைவியும் வீதியுலா வந்தனர்.

தேரோட்டம்

[தொகு]

9.2.2015 (திங்கட்கிழமை, ஜய, தை 26)கும்பேஸ்வரன் கோவிலில் இளைய மகாமகம் தேரோட்டம் நடத்துவதற்கு, தேருக்கு முகூர்த்தம் நடைபெற்றது [7]

3.3.2015 (செவ்வாய்க்கிழமை, ஜய, மாசி 19) கும்பகோணத்தில் கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. [8] கும்பேஸ்வரர் கோயிலில் இரு தேர்களும், காசி விசுவநாதர், அபிமுகேஸ்வரர் கோயில்களில் ஒவ்வொரு தேரும் தேரோட்ட நிகழ்வில் கலந்துகொண்டது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. கும்பேஸ்வரர் கோயிலில் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்ரர் ஆகிய மூவருக்கும் உரிய தேர்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதால், கும்பேஸ்வரர் எழுந்தருளிய தேரில் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானும், மங்களாம்பிகை எழுந்தருளிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர்.

தீர்த்தவாரி

[தொகு]

4.3.2015 (புதன்கிழமை, ஜய, மாசி 20) காலை 10.30 மணிக்கு மேல் தொடங்கி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மகாமகக் குளக்கரையிலும், மகாமகக்குளத்தைச் சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரியைக் காணவும், புனித நீராடவும் வந்திருந்தனர்.
கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களைச் சார்ந்த உற்சவமூர்த்திகள் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் கோயிலிலிருந்து கிளம்பி கும்பகோணத்தில் உள்ள வீதிகளின் வழியாக மகாமகக் குளத்தை வந்தடைந்தனர். அஸ்திர தேவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, நீராடல் நடைபெற்றது. அப்போது குளக்கரையில் இருந்த பக்தர்கள் குளத்தில் நீராடினர். [9] [10]

விடையாற்றி

[தொகு]

சைவக் கோயில்கள்

[தொகு]

6.3.2015 (வெள்ளிக்கிழமை, ஜய, மாசி 23) கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் விடையாற்றி சிறப்பாக நடைபெற்றது.

வைணவக் கோயில்கள்

[தொகு]

6,7,8.3.2015 (வெள்ளி,சனி, ஞாயிறு ஜய, மாசி 23, 24,25) வராகப்பெருமாள் கோயிலில் விடையாற்றி விமரிசையாக நடைபெற்றது.

குறிப்புகள்

[தொகு]
 1. ஐந்து, ஆறு, ஏழு, அல்லது எட்டு மகாமகத்துக்கு ஒரு முறை 11 ஆண்டுகளிலேயே மகாமகத்திருவிழா நடைபெறுவது உண்டென்றும், வான சாஸ்திரப்படி பூமி சூரியனைச் சுற்றிவர 365 1/4 (முன்னுற்றி அறுபத்தைந்தே கால்) நாள்கள் ஆவதைப் போல குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாள்கள் ஆகுமென்றும், இது சரியாக 12 வருடங்கள் அல்ல, 11 வருடம் 317 நாள்கள் என்றும் 11 ஆண்டுகளில் வரும் மகாமகத்தை இள மகாமகம் என்று கூறுவர் என்றும் சிவஸ்ரீ கோப்பு. கோ.நடராஜ செட்டியார் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள திருக்குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டம் மணி விழா மலர் 1948-2008, 6.1.2008, என்ற நூலில் பக்கம் 32இல் கூறப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
 1. இளைய மகாமக திருவிழாவை முன்னிட்டு சிவாலயங்களில் பந்தக்கால் முகூர்த்தம், தினத்தந்தி, 4.2.2015
 2. ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இளைய மகாமகவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, தினத்தந்தி, 25.2.2015
 3. கும்பகோணம் சிவாலயங்களில் இளைய மகாமகத் திருவிழா தொடக்கம், தினமணி, 24.2.2015
 4. இளையமகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் 63 நாயன்மார்கள் வீதிஉலா, தினத்தந்தி, 27.2.2015
 5. ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதியுலா, தினத்தந்தி, 1.3.2015
 6. ஆதிவராகப் பெருமாள் கோயிலில் இளைய மகாமகத் திருவிழா தொடக்கம், தினமணி, 25.2.2015
 7. இளைய மகாமக விழா தேரோட்டத்துக்கு பூஜை, தினமலர், 10.2.2015
 8. இன்று இளைய மகாமகம்: குடந்தையில் 3 கோயில்களில் தேரோட்டம், தினமணி, 4.3.2015
 9. இளைய மகாமகம்: ஏராளமான பக்தர்கள் புனித நீராடல், தினமணி, 5.3.2015
 10. "கும்பகோணத்தில் இளைய மகாமகம், தினகரன், 5.3.2015". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-03-07.

இவற்றையும் பார்க்க

[தொகு]

தேரோட்டம் படத்தொகுப்பு

[தொகு]

தீர்த்தவாரி படத்தொகுப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைய_மகாமகம்_2015&oldid=3854923" இலிருந்து மீள்விக்கப்பட்டது