இல்லிறத்தல்
இல்லிறத்தல் (adultery) என்பது மணமான ஒருவர் அவரின் துணையின் அனுமதியின்றி, துணை அல்லாத வேறொருவருடன் காதல் அல்லது காம உறவைப் பேணுவதைக் குறிக்கும். சில நாடுகள் ஒரு மணமான பெண் முறைதவறி இல்லிறந்தால் மட்டுமே இல்லிறப்பு என்கிற நிலையைக் கடைப்பிடிக்கின்றன.
பண்பாட்டு நம்பிக்கைகள்
[தொகு]தமிழ் மரபில் இல்லிறத்தல் நெடுநாளாகவே அறமீறலாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் பிறனில் விழைதலையும் இல்லிறத்தலையும் குறிப்பிட்டுள்ளன. திருக்குறளிலுள்ள பிறனில்விழையாமை அதிகாரம் இல்லிறப்பதை பெரும்பழியாகக் கருதி பாடுகிறது[1]. தமிழின் மிகச்சிறந்த இலக்கியங்களான சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்பவற்றின் அடிப்படைப் பாடுபொருளே பிறனில் விழைதலும் இல்லிறத்தலும் தான். தமிழ்ச் சைவமரபில் திருநீலகண்ட நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் போன்றோரின் கதைகளில் இல்லிறத்தல் பற்றிய எதிர்மறையான குறிப்புகள் உள்ளன. நாயகி பாவத்தைக் கொண்டாடும் வைணவத்திலும் நடைமுறைச் சமூகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு திருமணமானோர் பிறனில்விழைதல் குற்றமாகவே கருதப்பட்டிருக்கின்றது. சுமார்த்த சமயத்தவரின் தரும சாத்திரங்கள், இல்லிறத்தலுக்கு வருணாசிரமரீதியாக கடுமையான தண்டனைகளை விதிக்கின்றன.
கிறித்தவ சமயத்தின் பத்துக் கட்டளைகளுள் ஏழாவது கட்டளை பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக என்பதாகும். இதை மீறியவர்களுக்கு மரணதண்டனை என்று விவிலியம் கூறிகிறது.[2] இங்கு திருமணமான பெண்ணோடு கலவி கொண்டால் மட்டுமே தண்டனைக்கு உரிய குற்றம். மாற்றாக ஒரு ஆண் விலைமகளுடன் அல்லது மணமாகாத பெண்ணுடன் கலவி கொண்டால் அது குற்றம் அல்ல. தற்காலத்தில் கிறித்தவ பெரும்பான்மை கொண்ட நாடுகளில் இது ஒரு குற்றம் அல்ல, எனினும் இல்லிறத்தல் ஏழு கொடிய பாவங்களில் ஒன்று எனக் கருதப்படுகிறது.
இசுலாமிய சமயத்திலும் இல்லிறத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. திருமணமானவர் அல்லது திருமணமாகாத ஒருவர் இல்லிறத்தலில் ஈடுபடுவது மாபெரும் தவறாகும். திருமணமானவர் இல்லிறத்தலில் ஈடுபட்டால். இசுலாமிய தண்டனையின் பிரகாரம் கல்லால் அடித்து தண்டனை நிறைவேற்றப்படும், திருமணமாகாதவர் இதில் ஈடுபட்டால் அவர், நூறு கசையடிகள் வழங்கப்பட வேண்டும்.
சட்ட வலிது
[தொகு]இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லிறத்தல் சமூக ரீதியில் இழிவாகவே நோக்கப்படும் போதும், அது உண்மையில் தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் படி ஒரு குற்றமாகக் கருதப்படுவதில்லை. எனவே இல்லிறந்த ஒருவர் மீது குற்றம் சுமத்தி அவருக்குத் தண்டனை பெற்றுத்தர முடியாது. ஆனால் ஒரு துணையின் இல்லிறத்தல் துரோகத்தால் பாதிக்கப்பட்டநிரபராதியான மற்றத் துணைவர், இல்லிறத்தலை நீதிமன்றில் முன்வைத்து அவரிடமிருந்து மணமுறிவு பெறமுடியும். எனவே மணமுறிவு கோருவதற்கான வலுவான காரணமாக இல்லிறத்தல் இன்றும் நீடித்து வருகிறது.